Home Festivals தீப ஒளி திருநாள்..!!!

தீப ஒளி திருநாள்..!!!

26

தீப ஒளி அல்லது ஒளி வெள்ளத்தின் பேரணி என்ற பொருள் படும் தீபாவளி திருநாள், இந்தியாவின் முதன்மைக் கொண்டாட்டங்களில் ஒன்று. இந்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு மதத்தினரும் சிறப்புற கொண்டாடும் பண்டிகையாக இது திகழ்கிறது.

தீபாவளிக்கு பல கதைகள், சரித்திரங்கள், வரலாறுகள், பின்னணிகள் உள்ளன. ஆனால் அத்தனையிலும் பொதுவான கருத்தாக அமைந்திருப்பது – அல்லது தேயும், நல்லது மலரும் என்பதே. நேபாளத்தில் நேவார் புத்த மதத்தினர் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

வட மாநிலங்கள் பலவற்றில் தீபாவளி அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தங்களது கால்நடைகளுக்கு தீபாவளி விருந்து விவசாயிகள் கெளரவிக்கின்றனர் – நம்ம ஊர் மாட்டுப் பொங்கல் போல. புதுக் கணக்கு தொடங்கும் நாளாக இதை தொழிலதிபர்களும், வியாபாரம், வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போரும் இந்த நாளை கொண்டாடுகின்றனர்.

தீபாவளியன்று லட்சுமி விரதம் இருப்பது வட இந்தியாவில் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும், வன வாசத்தை முடித்து விட்டு ராம பிரான் தம்பி லட்சுமணன், மனைவி சீதையுடன் தீபாவளியன்றுதான் அயோத்தி திரும்பினார் என்பதும் வரலாறு.

ராமரை வரவேற்கும் வகையில் வீடுகள் தோறும் தீபங்களை அயோத்தி மக்கள் ஏற்றி வைத்திருந்தனர் என்று ராமாயனம் கூறுகிறது. இதை ைவத்துத்தான் தீபாவளி என்ற பெயரும் வந்ததாக ஒரு கூற்று உள்ளது.

தென்னிந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடுவதற்கான காரணம் வேறாக உள்ளது. அரக்கன் நரகாசுரசனை கிருஷ்ணர் வதம் புரிந்த நாளே தீபாவளியாக தென்னிந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. ஜைனர்கள் தீபாவளியை, மகாவீரர் முக்தி பெற்ற நாளாக கொண்டாடுகின்றனர்.

இதே தினத்தில்தான் கி.மு. 527ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி மகாவீரர் முக்தி பெற்றார். சீக்கிய மதத்தில், சீக்கியர்களின் 6வது குருவான குரு ஹரிகோபிந்த் ஜி சிறையிலிருந்து மீண்ட நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். ஹரிகோபந்த்ஜியுடன் 52 இந்து மன்னர்களும் இதே நாளில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலையான பின்னர் ஹரிகோபிந்த் ஜி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்றார்.

அங்கு அவரை சீக்கியர்களும், பிற மதத்தினரும் பெரும் திரளாக சென்று வரவேற்றனர். அவரது வருகையை கொண்டாடும் வகையில், தீபங்களையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்தனர்.

எனவே இந்த நாளைத்தான் அவர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இப்படி தீபாவளிக்கு பல்வேறு வகையான பின்னணிகள், வரலாறுகள், புராணங்கள் உள்ளன.