Home Tamil Breaking News பிற்பகலுக்குள் பதிலளிக்க உத்தரவு: எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு, எப்போது அமைக்கப்படும்?

பிற்பகலுக்குள் பதிலளிக்க உத்தரவு: எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு, எப்போது அமைக்கப்படும்?

31

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்து அறிவிக்க எவ்வளவு காலம் தேவை? என இன்று பிற்பகலுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு 5 இடங்களை பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு தொடங்கப்பட இருக்கிறது என மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், தமிழக அரசு பரிந்துரை செய்த இடங்களை மத்தியக் குழு ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இடத்தை தேர்வு செய்ய வேண்டியது மத்திய அரசுதான் என்றும் அவர் கூறினார். அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவனை அமையும் இடம் தேர்வு குறித்து முடிவு எடுக்க துணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் துணைக்குழு ஆய்வு நடத்தி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து துணைக்குழு எதற்காக அமைக்கப்பட்டது என்றும் அதன் பணி என்ன என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து, இடத்தை தேர்வு செய்து அறிவிக்க எவ்வளவு காலம் தேவை? என்றும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் கேட்டு இன்று பிற்பகலுக்குள் பதிலளிக்க மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

Related Posts