Home World News ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 7,000 டன் நிவாரணப் பொருட்களை வழங்கும் இந்தியா

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 7,000 டன் நிவாரணப் பொருட்களை வழங்கும் இந்தியா

19

மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 7,000 டன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

மியான்மரில் சிறுபான்மையினத்தவராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. இருதரப்புக்கும் இடையில் கடந்த மாதம் 25-ம் தேதி மீண்டும் மோதல் வெடித்தது. அதன்பின் 3 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர்கள் வங்கதேசத்துக்குள் அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வந்துள்ளதால் வங்கதேச அரசு சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள வங்கதேச ஹை கமிஷனர் சயத் முவாஸிம் அலி கடந்த வாரம் மத்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்து நிலைமையை விளக்கினார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, ‘‘ரோஹிங்கியா முஸ்லிம்களின் வருகையால் வங்கதேச அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உதவ மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்க முன்வந்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக 53 டன் அளவுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, உப்பு, சமையல் எண்ணெய், தேயிலை, காபி, நூடுல்ஸ், பிஸ்கெட், கொசுவலை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் நேற்று இந்திய விமானப் படை விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விமானம் சிட்டகாங் விமான நிலையத்தை நேற்று சென்றடைந்தது. அங்கு வங்கதேச சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் உபைதுல் காதிர், நிவாரணப் பொருட்களைப் பெற்றுக் கொண்டார்.

இதுபோல், 7000 டன் நிவாரணப் பொருட்கள் வங்கதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது

Related Posts