Home Tamil Cinema News நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப் பதிவு.. வருகிற 7ம் தேதி விசாரணை..

நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப் பதிவு.. வருகிற 7ம் தேதி விசாரணை..

29

லக்னோ: பெங்களூரு நகரில் கடந்த மாதம் பிரபல பெண் எழுத்தாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை கண்டித்து குரல் கொடுத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் அண்மையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 11–வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘‘கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டு ஒரு மாதமாகியும் கொன்றவர் யார் என்றே தெரியவில்லை. அவருடைய கொலையை சிலர் கொண்டாடுவது வேதனை அளிக்கிறது. பிரதமர் மோடியும், உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்தும் என்னைவிட சிறந்த நடிகர்கள்’’ என்று விமர்சித்து இருந்தார்.

இதையடுத்து அவர் தனக்கு கிடைத்த 5 தேசிய விருதுகளையும் மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கப் போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.
அதை மறுத்த பிரகாஷ் ராஜ், ‘‘தேசிய விருதுகள் எனது உழைப்புக்காக வழங்கப்பட்டவை. அவற்றை ஒப்படைக்கப்போவதாக கூறவில்லை. தேசிய விருதுகளை திரும்ப ஒப்படைக்க நான் என்ன முட்டாளா?… நான் எந்த கட்சியையும் சாராதவன். நாட்டின் குடிமகன் என்கிற முறையில் பிரதமர் மோடியை கேள்வி கேட்கும் உரிமை எனக்கு உண்டு. கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமரின் மவுனம் என்னை நடுங்க வைக்கிறது’’ என்று கூறி இருந்தார்.

இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ கோர்ட்டு ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது, பிரதமர் மோடியை கவுரி லங்கேஷ் கொலையுடன் இணைத்து விமர்சித்தது தொடர்பாக வக்கீல் ஒருவர் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ‘‘பிரதமர் மோடி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பொருத்தமற்ற விமர்சனங்களை வைத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மனு மீது வருகிற 7–ந்தேதி விசாரணை நடக்கிறது.

 

Related Posts