Home History Tamil History அறிஞர் அண்ணாவின் இளமைக் காலம்

அறிஞர் அண்ணாவின் இளமைக் காலம்

239

அறிஞர் அண்ணா பிறந்தது பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சி. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வந்து சமயத் தொண்டாற்றியிருக்கிறார். காஞ்சிபுரத்துக்கு யுவான் சுவாங் சீனயாத்ரிகன் அசோகன் மணிமேகலை ஆகியோர் வந்து சமயத் தொண்டாற்றிருக்கிறார்கள்.

மிகப்பெரிய வடமொழி பல்கலைக்கழகம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு இருந்திருக்கிறது.

காஞ்சியில் இருந்து தர்ம பாலர் எனும் பேராசிரியர் நாளந்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்கிறார்.

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பிறந்து காஞ்சியில் கல்வி வள்ளல் பச்சையப்பர் பிறந்த ஊர்.

இசைக் கலையில் சிறந்த நயனா பிள்ளை பிறந்த ஊர்.

கல்வி, கலை இவைகளில் சிறந்திருந்த காஞ்சி நெசவுத் தொழிலிலும் பெயர் பெற்று இருந்தது.

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் தேதி நடராசன் – பங்காரு இணையினருக்கு அண்ணா பிறந்தார்.

தொடக்கக்கல்வியும் உயர் நிலைக் கல்வியும் காஞ்சி பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார். தெய்வீக நம்பிக்கைக் கொண்டது அண்ணாவின் குடும்பம். ஆலய வழிபாட்டிற்கு அண்ணா கூட்டம் குறைவாக உள்ளக் கோயிலுக்கே செல்வார்.

பள்ளிக்குச் செல்லும் போது தானே மாட்டு வண்டி ஓட்டிச் செல்வார்.

அண்ணாவின் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையார் அண்ணா அவர்களைத் தொத்தா என்றே அழைப்பார்கள். அண்ணாவை வளர்த்தவர் வழிகாட்டியாக அண்ணாவின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர், அவர்தான்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே அண்ணாவிடம் பொடி போடும் பழக்கம் தொற்றிக் கொண்டது. பத்தாம் வகுப்பு முடித்ததும், மேலே படிப்பைத் தொடர முடியாமல், குடும்ப சூழ்நிலைக் காரணமாக காஞ்சி நகராட்சியில் எழுத்தராகச் சேர்ந்து ஆறு மாதம் பணியாற்றினர்.

அண்ணா அவர்களை அவருடைய தாய் தந்தையர் அந்த நாளில் மதப்பற்றும் தெய்வ நம்பிக்கையும் உள்ளவராகவே வளர்த்தனர். அண்ணாவுக்கு அருந்துணையாக இருந்து ஆளாக்கி விட்ட அவருடைய சிற்றன்னையும்(தொத்தா) அதற்கு விதிவலக்காக இருக்கவில்லை.

இன்று பகுத்தறிவு இயக்கத்தின் தனிப் பெரும் சுடராய் ஒளிவிட்டுத் திகழும் அண்ணா, இளமைப் பருவத்தில் ஆலய வழிபாட்டைத் தவறவிடாத இளைஞராகத்தான் திகழ்ந்து கொண்டிருந்தார். ஆலய வழிபாட்டில் தவறாத அவர் அதிலும் ஒரு புதுமையைக் கையாண்டார். எந்த தோயிலில் கூட்டம் அதிகம் இருக்குமோ அங்கு செல்லாமல், கூட்டம் குறைவாக உள்ள கோயிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்துகொண்டு வந்தார். கூட்டம் இல்லாத நேரத்தில் தனியாகக் கோயிலுக்குச் செல்வதில் அவர் பெரிதும் விருப்பம் உள்ளவராகவே விளங்கினார்.

எல்லா மக்களும் கூட்டமாகச் சென்று இடநெருக்கடியில் திண்டாடாமல், கூட்டம் குறைவாக உள்ள இடத்துக்குச் சென்று வழிபடுவோம் என்ற கொள்கையை இளமைப் பருவத்தில் அடாப்பிடியாகக் கைக்கொண்டிருந்தார். எல்லோரும் செல்லும் போயிலுக்கு அவரும் போவதுண்டு; ஆனாலும் கூட்டமே அங்கு இல்லாத நேரமாகப் பார்த்துத்தான் செல்வது வழக்கம்.

இளமையில் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தமான கடவுள் பிள்ளையார்தான்! பிள்ளையாருக்கு இளம் வயதில் பூஜைகளும் செய்வதுண்டு. பிள்ளைப் பருவத்தில் பிள்ளையார் பக்தராக அண்ணா விளங்கியிருந்தார் என்றால் பலருக் ஆச்சரியமாக இருக்கும். காஞ்சியிலுள்ள அதிகம்பேர் கவனத்தில் கவராத புண்ணிய கோடீசுவரர் கோயில் என்ற சிறிய கோயிலுக்குத்தான் அண்ணா அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

நொண்டிச் சாக்கு
பிள்ளைப் பருவத்தில் அண்ணா விளாயாட்டில் ஆர்வம் உள்ளவராகவே இருந்தார். தன்னொத்த இளம்பருவத் தோழர்களுடன் கலந்து கேரம் விளையாடுவதில் அவருக்கு அளவு கடந்த ஆனந்தம். ஓய்வு கிடைக்கின்ற நேரங்களிலெல்லம் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கேரம் விளையாடியே பொழுதைக் கழிப்பார். அதைப்போலவே சீட்டாடுவதையும் பிற்காலத்தில் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

விளையாட்டில் ஆர்வம் உண்டென்றாலும் பள்ளியில் நடக்கும் டிரில் வகுப்புக்கு அதிகம் போவது கிடையாது. பொதுவாகவே அண்ணாவுக்கும் உடற் பயிற்சிக்கும் அதிகம் சம்பந்தமில்லை. அதிகத் தேகப் பயிற்சி பெற்றவருமல்ல அன்பதை அவரது உடலும் உயரமும் காட்டும். உடற்பயிற்சி வகுப்புக்கு, பள்ளி நாட்களில் அண்ணா போனது இல்லை. இவரது விருப்பத்துக்கு ஏற்ப இவரது குடும்பத்தினரும் இருந்தார்கள். டிரில் வகுப்புக்குப் போகாமல் இருக்க ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தார்கள். டிரில் வகுப்புக்கு போகாமல் இருக்க வேண்டுமானால் காலில் கட்டு போட்டுக்கொள் என்பாராம் அண்ணாவின் தாத்தா. அதன்படி அண்ணாவும் காலில் சிவப்பு மையைக் கொட்டி, கட்டும் போட்டுக் கொள்வார். சுளுக்குபோல நொண்டிச் சென்று, கால் வலிக்கிறது சார் என்பாராம். டிரில் வாத்தியாரும் அண்ணாவை வீட்டுக்கு அனுப்பி விடுவாராம்.

மாமியார் அனுபவம்
அண்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, வீடு வெகு தூரத்தில் இருந்தது. ஆகவே அவர் வீட்டுக் வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போவது கஷ்டமாக தோன்றிய காரணத்தால், அவரது பெற்றோர்கள் பள்ளிக்கு அருகிலேயே தங்கள் உறவினர் வீட்டில் பகல் உணவுக்கு எற்பாடு செய்திருந்தார்கள். அந்த வீட்டின் நிலையோ மிகவும் விசித்திரமாக இருந்ததை அண்ணா சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.

அண்ணா சாப்பிட ஏற்பாடாகியிருந்த அந்த வீட்டுக்குரிய மாமியார், வீட்டில் உயர்ந்த பொருளாக இருந்தால் அதை அலமாரியில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். அண்ணா அவ்வீட்டுக்குச் சாப்பிடப் போனதும் வீட்டிற்குரிய மருமகள் அண்ணாவுக்கு சாதம் போட்டுவிட்டு, மாமியாரை அழைத்து, சாதம் போட்டுவிட்டேன், உருளைக் கிழங்கு வறுவல் வேண்டும் என்று சொன்னால், மாமியார் சாவியைச் கொடுத்து அனுப்பி அதை எடுத்துக்கொண்டு வந்து அண்ணாவுக்கு வைத்த விறகு, அதனை மீண்டும் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவார்களாம் அந்த மாமியார்.

தெருக்கூத்து ரசிகர்!
தெருக்கூத்து வேடிக்கைப் பார்ப்பதில் அண்ணாவுக்கு இளம் வயதிலிருந்தே விருப்பம் நிறைய உண்டு. தெருக்கூத்தை ஒரு பொழுதுபோக்காகவும், நகைச்சுவையை ரசிக்கும் வாய்ப்பாகவும் கொள்வது அவரது பண்பாடு. பள்ளிப்பருவக் காலத்தில், காஞ்சிபுரத்தில் எங்கு தெருக்கூத்து நடந்தாலும் அங்கு முதலில் சென்று உட்கார்ந்து, இறுதிவரையில் இமைகொட்டாமல் பார்த்திருந்துவிட்டு கூட்டம் கலைந்து எல்லோரும் வீடு திரும்பியதற்குப் பிறகுதான் கடைசியாக வீடு வந்து சேருவார்.

அண்ணா அவர்கள் ஆரம்பப்பள்ளி மாணவாராக இருந்தபோது, அவரோடு ஒத்த அவருடைய நண்பர்களைக் கூட்டிக்கொண்டு, தமது வீட்டுக்கு அடுத்துச் சில வீடுகள் தள்ளி, ஒரு வீட்டின் மாட்டுக் கொட்டகையில் வேடங்கள் புனைந்துகொண்டு நாடகம் ஒன்று நடத்திக்கொண்டிருந்தார்கள். அச்செய்தியை அறிந்த அண்ணாவின் பாட்டியார் கோபத்தோடு சென்று, நாடம் ஆடிக்கொண்டிருந்த அண்ணா அவர்களை வேடத்தோடு பிடித்து இழுத்துக்கொண்டு வந்து வீட்டில் வைத்து அவரது முதுகில் நன்றாக அடித்துவிட்டார்களாம். என்ன செய்தும் தெருக்கூத்துப் பைத்தியம் மட்டும் அதற்குப் பின்னும் அவரைவிட்டு விலகவில்லை.

இப்பொழுதும் சுற்றுப்பயணத்தை ஒட்டி வெளியூர் நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும்போது எங்கேயேனும் சாலையோரத்தில் தெருக்கூத்து நடைபெற்றுக்கொண்டிருந்தால், தான் ஏறிவந்த காரை தூரத்தில் நிறுத்திவிட்டு யாரும் அறியாவண்ணம் ஒதுக்கமான இடத்தில் நின்றுகொண்டு, காட்சிகளைக் கண்டு ரசித்துக்கொண்டிருப்பாராம்.

திருடனிடம் சிக்னார்
அண்ணா சிறுவனாயிருந்தபோது – அப்போது அவருக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் – காஞ்சிபுரத்திலிருந்து அண்ணாவின் தாயார் சென்னையில் நடக்கும் பார்க்பேர் கண்காட்சிக்கு அண்ணாவை அழைத்துவந்தார்கள்.

எழும்பூர் ரயிலடியில் இறங்கியதும் அங்குள்ள பொருட்களைப் பார்த்து அண்ணா அது வேண்டும். இது வேண்டும் என்று தனது தாயாரை தொல்லைகொடுத்துக்கொண்டே இருந்தார்.

அப்போது அவருக்கு தங்கக் காப்பும் சங்கிலியும் அணிவித்திருந்தனர். அதை ஒருவன் பாத்துக்கோண்டே இருந்திருக்கிறான். பிறகு அவரது குடும்பத்தாருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே பையன் பலூன் வேண்டும் என்று அப்போதிருந்து அழுகிறானே வாங்கித் தந்தால் என்ன? என்று கேட்டான். அவரது தாயார் தனது பிள்ளையின் மீது வேறு ஒருவர் இரக்கப்படும் அளவுக்கு விட்டுவிட்டோமே என்று வெட்கமடைந்து பலூன் இங்கு விற்கவில்லையே! என்று கூறினார்கள். அதோ! அங்கு விற்கிறான்! நான் வாங்கித்தருகிறேன் என்று விடுவிடென அண்ணாவை அழைத்துக்கொண்டுபோனான். அவன் பழகிய நல்ல முறையை வைத்து அண்ணாவின் வீட்டார் விட்டுவிட்டார்கள்.

அண்ணாவை அழைத்துச் சென்ற அவன் எல்லா பிளாட்பாரங்களையும் கடந்து கடைசி பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டான். அப்போது அண்ணாவுக்கு விவரம் தெரியாவிட்டாலும் அவன் பலூன் வாங்கித் தருவதாக கூட்டிப்போகவில்லை என்பதை மட்டும் தெரிந்துகொண்டார். ஆகவே சத்தம்போட்டு அழ ஆரம்பித்தார். அவனது நோக்கமெல்லாம் கூட்ஸ் வண்டியில் போட்டுவிட்டால் எங்காவது போய்விடும் என்ற நினைப்புத்தான்! ஆனால் அண்ணா போட்ட கூக்குரலை கேட்ட அந்த வழியில் போகிறவர்கள் அவனை தடுத்து நிறுத்தி யார் நீ! ஏன் பையனை அழைத்து போகிறாய்? என்று கேட்டபோது அவன் சரிவர பதில் சொல்லாததால் சந்தேகப்பட்டு அவனை போலீசில் ஒப்படைத்தார்கள். அண்ணாவை அவருடைய தாயிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது அண்ணாவின் தாயார் அண்ணாவைப் பார்த்து, பலூன் எங்கே என்றுதான் கேட்டார்களாம்.

காந்தி யார்? அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் 8-வது வகுப்பில் படித்துக்கோண்டிருக்கும்போது, நாட்டில் சுதந்திரக் கிளர்ச்சி பெருகிக்கொண்டிருந்தது. சுதந்திர கிளர்ச்சி விளைவாக காந்தியார் எரவாடா சிறையில் தள்ளப்பட்டார். இந்த செய்தியை அறிந்ததும் ஊரிலுள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கடை அடைப்பு நடத்த ஏற்பாடு செய்தனர். அவர்கள் ஒவ்வொரு கடைக்காரர்களையும் அணுகி கடையடைக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அப்போது ஒரு கற்பூரக் கடைக்காரர் ஏன் கடையடைக்கச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார். காந்தி சிறையில் அடைக்கப்பட்டதற்காகக் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றனர். அதைக் கேட்டதும் அக்கடைக்காரர், காந்தியா? அவர் யார்? என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம். அவர் கேட்டதைப் பார்த்த மற்றவர்களும், காந்தியைத் தெரியாதவரும் இருக்கின்றாரே என்று ஆச்சரியப்பட்டனராம்.

சத்தியமூர்த்தியும் திருப்பதி ஐதீகரும்
அண்ணா பள்ளி மாணவராக இருந்தபோது காங்கிரசுத் தலைவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு பல நேரங்களில் கிடைத்து இருந்தது. அதில் சத்தியமூர்த்தி பேசுவதும் உண்டு. நீதிக் கட்சியைப் பள்ளி அவர் பேசிய பேச்சு வேடிக்கையானதாகும், நீதிக்கட்சி காலத்தில், திருப்பதி உண்டியலில் விழும் பணமெல்லாம் மக்கள் கல்விக்காகச் செலவிடப்பட வேண்டும்! உண்டியல் பணத்திற்கு கணக்கு காட்டவேண்டும் என்று சொன்னார்கள். அதைச் சத்தியமூர்த்தி போன்ற காங்கிரசுக்காரார்கள் எதிர்த்தார்கள்.

திருப்பதி உண்டியலில் விழுகின்ற பணத்துக்கெல்லாம் மகந்துகள் என்று சொல்லப்படுபவர்கள்தான் சொந்தக்காரர்கள். இரவு 12 மணிக்குமேல் வெங்கடாஜலபதிக்கப் பொழுது போகாதாம். அதனாலே அவர் மகந்துகளை அழைத்து வைத்துக்கொண்டு சொக்கட்டான் ஆடவாராம். இதனாலே உண்டியல் பணம் முழுவதும் மகந்துகளுக்கு கொடுத்துவிடவேண்டுமாம். இப்படி இரு ஐதீகம் சொல்லப்பட்டு வந்தது. இந்த முறையை மாற்றி, உண்டியலில் போடப்படும் பணம் மதக் காரியங்களுக்காகத்தான் போடப்படுகிறது; கல்விக்காக அந்தப் பணம் செலவிடப்படவேண்டும் என்று நீதிக் கட்சியார் சொன்னார்கள். இதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த சத்தியமூர்த்தி, உண்டியலில் பொடப்படும் பணம் யாவும் நீதிக்கட்சிக்காரர்கள் அள்ளிக்கொன்டு போவதாக மக்களிடம் சொன்னார்கள். அப்பொழுது காங்கிரசுத் தலைவரான சத்தியமூர்த்தியே அப்படி பிரச்சாரம் செய்ததை பள்ளி மாணவராக இருந்த அண்ணா கேட்டு ஆச்சரியப்படுவாராம்.