Home Tamil Breaking News மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம்!

மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம்!

27

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலாக்கட்ட காவிரியில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில், விடுமுறை நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறையில் கடந்த 12-ம் தேதி முதல் காவிரி மகா புஷ்கரம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து புனித நீராடினர். பின்னர், வடகரையில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதர் கேதாரநாதர், கல்யாண சுந்தரர் மற்றும் தென்கரையில் உள்ள காவிரித் தாயையும் பக்தர்கள் வழிபட்டனர்.

காவிரி மகா புஷ்கரம் விழாவின் ஒரு பகுதியாக துலாக்கட்டத்தின் வடகரையில் நேற்று கன்னிகா பூஜை நடைபெற்றது. இதையொட்டி, 27 பெண் குழந்தைகளை அமரவைத்து, அவர்களுக்கு மாலை அணிவித்து, புத்தாடைகள், மங்கலப் பொருட்கள் வழங்கி, ஆரத்தி எடுத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன.

மாலையில் 1000-க்கும் மேற்பட்ட கிராமக் கோயில் பூஜாரிகள் பேரணியாக வந்து புஷ்கரணியில் நீராடி, தாங்கள் கொண்டு வந்திருந்த கலசத்தில் புஷ்கரம் நீரை நிரப்பிக் கொண்டனர். அதை, தங்கள் ஊருக்கு எடுத்துச் சென்று அங்குள்ள தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்ய உள்ளதாக பூஜாரிகள் தெரிவித்தனர். பின்னர், காவிரித் தாய்க்கு ஆரத்தி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.