Home Tamil Breaking News தீவிரமடையும் தென் மேற்கு பருவ மழை.. நிரம்பி வழியும் நீர் நிலைகள்..

தீவிரமடையும் தென் மேற்கு பருவ மழை.. நிரம்பி வழியும் நீர் நிலைகள்..

33

தொடர்மழையால் கோவை மாவட்டம் முழுவதுமுள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நொய்யல், பவானி ஆறுகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

கோவை மாவட்டத்தில் பெரும் இடைவெளிக்குப் பிறகு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளத்தை ஒட்டிய பகுதி என்பதால் மேற்கு மலைத் தொடரில் வழக்கத்தை விட கூடுதலாக மழைப் பொழிவு காணப்படுகிறது.

இதனால் கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் பல வருடங்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை நிலத்தை குளிர்வித்துக் கொண்டிருந்த மழை, நேற்று காலை பிரவாகம் எடுத்தது. சிறுவாணி, வெள்ளிங்கிரி மலைக் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் நொய்யலும் சீறியது. செந்நிறத்தில் பாய்ந்தோடிய வெள்ளம், நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே சென்றது.

இதுவரை புதர்மண்டி, ஆக்கிரமித்து, வறண்டு கிடந்த ஆற்று மணலில் கரை புரண்டு ஓடியது. காலை 10 மணியளவில் பேரூர் படித்துறையை மூழ்கடித்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே வேடப்பட்டி தரைப்பாலம் மூழ்கியது. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து பெருக்கெடுத்த வெள்ளத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் சார்பில் நேற்று மாலை நொய்யல் நதியை வரவேற்று, வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. பூ தூவி, நவதானியங்கள், மஞ்சள் படையலிட்டு வழிபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாகக் குரலில் நொய்யல் அன்னையை வரவேற்றனர். நொய்யலில் வெள்ளம் அதிகரித்ததையடுத்து உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம் இரண்டுக்கும் நீர் வரத்து அதிகமானது. இரண்டு குளங்களின் நீர்வழிப்பாதைகளும் உடனே சுத்தம் செய்யப்பட்டன.

சிறுவாணி

சிறுவாணி அணைக்கு கணிசமான நீர் வரத்து தொடர்கிறது. அதேசமயம் அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவு நேற்று முன்தினம் 54 மில்லியன் கன அடியாக அதிகப்படுத்தப்பட்டது. நேற்று மழை சற்று நிதானித்ததால் எடுக்கப்படும் நீரின் அளவு சராசரியாக 44 மில்லியன் கன அடியாக குறைக்கப்பட்டது. 52 அடியுள்ள அணையில் 39 அடியைத் தாண்டி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சராசரியாக 140 மில்லி மீட்டர் மழை நீடிக்கிறது.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில், தொடரும் கனமழை காரணமாக, 30க்கும் மேற்பட்ட இடங்களில், மண் சரிவு ஏற்பட்டது. மலை மாவட்டமான, நீலகிரியில், சில நாட்களாக, மழை வெளுத்து வாங்குகிறது. ஊட்டி, மஞ்சூர், குன்னுார் உட்பட, 30க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மண்ணையும், மரங் களையும் அகற்றும் பணியில், நெடுஞ்சாலை துறையினரும், பொது மக்களும் ஈடுபட்டனர்.

Related Posts