Home Tamil Breaking News மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய 4 காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்…

மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய 4 காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்…

28

சென்னை : விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மருத்துவ துறையில் நடக்கும் தவறுகளை மையமாக வைத்து இந்த படம் வந்துள்ளது. விஜய் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.32 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன் டாக்டர்களும் தங்களை அவதூறு செய்வது போன்ற காட்சிகள் வைத்து இருப்பதாக கண்டித்து வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர். மருந்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளனர். ஆனால் தாய்மார்கள் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாதாம் என்றும், 7 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் தர்றாங்க.

28 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் தர முடியவில்லை என்றும் விஜய் பேசும் சர்ச்சைக்குரிய வசனங்கள் படத்தில் இடம்பெற்று உள்ளன. இந்த வசனம் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக உள்ளது என்று அந்த கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய 4 காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காட்சிகளை நீக்க கோரி 23 அல்லது 24 ஆம் தேதி தணிக்கை குழுவிடம் தயாரிப்பாளர்கள் தரப்பு கடிதம் அளிக்க உள்ளதாகவும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது.