Home Tamil Cinema News ‘ரஜினி முருகன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது

‘ரஜினி முருகன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது

157

CWo-5otUEAAC9J0

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருந்தது.

‘ரஜினி முருகன்’ படத்தின் மீது இருக்கும் கடன் தொகைகளை முடித்துக் கொடுத்தால் வேந்தர் மூவிஸ் வெளியிடும் என்று கூறப்பட்டது. இறுதியில் வேந்தர் மூவிஸ் நிறுவனமும் இப்படம் வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கிய கடனால் படத்தை வெளியிட முடியாமல் திணறியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியது. அனைத்து பிரச்சினைகளும் முடிந்துவிட்டது என்றும், டிசம்பர் 4ம் தேதி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே நேரடியாக ‘ரஜினி முருகன்’ படத்தை வெளியிடும் என்று விளம்பரப்படுத்தினார்கள்.

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, பட வெளியீடு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சனவரி 14 அன்று வெளியாகும் என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், அந்த விளம்பரமும் நிறுத்தப்பட்டது.

இது குறித்து விநியோகஸ்தர்கள் மத்தியில் விசாரித்த போது, “பொங்கலுக்கு வெளியீடு என்று விளம்பரப்படுத்தினாலும் இன்னும் எங்களுக்கு முறையான திரையரங்க ஒப்பந்தம் தொடங்கப்படவில்லை. ‘கதகளி’ படத்துக்கான திரையரங்க ஒப்பந்தங்கள் தொடங்கப்பட்டன.

அரண்மனை 2 பின்வாங்கியதைத் தொடர்ந்து ‘கெத்து’ படத்தை வெளியிட திரையரங்க ஒப்பந்தங்கள் தொடங்கப்பட இருக்கிறது. இவ்விரண்டு படங்களுக்குமே திரையரங்குகள் சரியாக இருக்கும் பட்சத்தில் ‘ரஜினி முருகன்’ வெளியாவது சந்தேகம் தான் என்று தெரிவித்தார்கள்.

மேலும், லிங்குசாமி மற்றும் போஸ் இருவருமே மும்பையில் உள்ள ஈரோஸ் நிறுவனத்திடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் இன்னும் ஒரிரு நாட்களில் பட வெளியீடு இறுதிசெய்யப்படும் என தெரிகிறது.