Home Tamil Breaking News எல்லை ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி

எல்லை ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி

27

ஸ்ரீநகர்: வட மாநிலங்களில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரான பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி, அவர் நேற்று முன்கூட்டியே அறிவிக்காமல், காஷ்மீர் மாநிலம் குரஸ் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சென்றார். அங்கு இந்திய ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியோருடன் அவர் தீபாவளி கொண்டாடினார்.

அவர்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார். அவர் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவது, இது தொடர்ச்சியாக 4–வது ஆண்டு ஆகும்.

அவர் தீபாவளி கொண்டாடிய பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு மிக அருகில் உள்ளது. அங்கிருந்து ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளுடன் அடிக்கடி துப்பாக்கி சண்டை நடக்கும் இடமாகும்.

ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, பிறகு அவர்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:–

எல்லோரையும் போலவே நானும் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட விரும்பினேன். ஆகவே, படையினருடன் கொண்டாட இங்கு வந்துள்ளேன். ஏனென்றால், ராணுவத்தினரை எனது குடும்பமாகவே நான் கருதுகிறேன். அவர்களுடன் நேரத்தை கழிக்கும்போது எனக்கு புதிய ஆற்றல் கிடைக்கிறது. அவர்களது தியாகத்தையும், கடமை உணர்வையும் பாராட்டுகிறேன்.

அங்குள்ள பார்வையாளர் புத்தகத்திலும், அவர் தனது கருத்தை எழுதினார். வீரர்களுடன் 2 மணி நேரம் செலவிட்டார். ராணுவ தளபதி பி.எஸ்.ரவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Posts