Home Tamil Breaking News கவுரி லங்கேஷ் படுகொலை: விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சித்தராமையா உத்தரவு

கவுரி லங்கேஷ் படுகொலை: விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சித்தராமையா உத்தரவு

27

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்லேஷ் படுகொலை சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இன்று காலை சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்லேஷ் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்புவாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் இந்துத்துவ அமைப்புகள் கவுரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்தன.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து ராணா அய்யூப் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’ நூலை கவுரி கன்னடத்தில் மொழி பெயர்த்தார்.

அச்சமின்றி இடைவிடாது பத்திரிகைப் பணியில் இயங்கிக் கொண்டிருந்த கவுரி லங்கேஷை அவரது வீட்டு வாசலில் நான்கு மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்த கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக அவர் வீடு அமைந்துள்ள பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

அதில் கருப்புச் சட்டை அணிந்து ஹெல்மெட்டுடன் வந்த மர்ம நபர் இக்கொலையை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இரவு நேரம் என்பதால் அந்த நபரின் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. கொலைக்கு பாயின்ட் 32 ரக பிஸ்டல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

இன்றே இறுதிச்சடங்கு:

படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் இறுதிச் சடங்கு இன்றே நடைபெறும் எனத் தெரிகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்ததும் ரவீந்திர கலாஷேத்ராவில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

கவுரி படுகொலைக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

பெங்களூரு டவுன் ஹாலில் 500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் குழுமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் தர்ணா:

ஆந்திரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஐ.வி.சுப்பா ராவ் தலைமையில் ஓங்கோலில் தர்ணா நடைபெற்றது. படுகொலையில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும்வரை போராட்டத்தைத் தொடர்வது என அவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் இந்திய கிளையும், அனைத்திந்திய ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பும் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் இந்திய கிளையின் திட்ட இயக்குநர் அஸ்மிதா பாசு, “கவுரி லங்கேஷ் படுகொலை நாட்டில் கருத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை ஒலி. கவுரி லங்கேஷ் அச்சமின்றி உண்மையை உரக்கச் சொல்பவர். அவரது படுகொலைக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

சென்னையில் திரண்ட பத்திரிகையாளர்கள் கவுரி லங்கேஷ் காவி பயங்கரவாதத்துக்கு பலியாகிவிட்டதாகக் கண்டனம் தெரிவித்தனர். திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்கள் திரண்டு கண்டனக் குரல் எழுப்பினர்.