Home Astrology Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள் 2-8-2016 முதல் 1-9-2017 வரை

குரு பெயர்ச்சி பலன்கள் 2-8-2016 முதல் 1-9-2017 வரை

2411

Dakshinamurthy


mesahamமேசம்:

எதையும் உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங் களும் இருக்கும் என்றாலும் அதற்காக அஞ்ச வேண்டாம்.

எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். கணவன் – மனைவிக்குள் சிலர் வீண் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்குகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அவ்வப் போது கடன்சுமை கலக்கம் தரலாம்.

குரு தனது 9-ம் பார்வையால் உங்க ளின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால், குடும்பத்தில் அமைதி உண்டாகும். தேங்கிக் கிடந்த வழக்கில் வெற்றியுண்டு. ஆரோக்கியம் சீராகும். குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர் கள். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். வேலை கிடைக்கும். வேற்று மாநிலத் தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சி!

உங்கள் ராசிக்கு 5–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், ஆகஸ்டு 2–ந் தேதி முதல் 6–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். குரு வந்திருக்கும் இடமோ ஆறாமிடம். அவரது பார்வை பதியும் இடங்களோ 2, 10, 12 ஆகிய இடங்கள். ‘ஆறிலே குரு வந்தால் ஊரிலே பகை’ என்பது பழமொழி. அதனால் நட்பெல்லாம் பகையாகிவிடுமோ என்று கவலைப்பட வேண்டாம். விதிக்கப்பட்ட விதியின் கடுமையைக் குறைப்பது வழிபாடுகளும், பரிகாரங்களும் தான். எனவே உங்கள் சுய ஜாதகத்தை ஒரு முறை புரட்டிப் பாருங்கள். உங்களுக்கோ, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ, குரு இருக்குமிடம் அறிந்து அதைப் பார்க்குமிடம், பாதசார பலமறிந்து அதற்குரிய சிறப்பு பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்தால் வெற்றிக் கனியை விரைவில் எட்டிப்பிடிக்க இயலும்.

பொதுவாக ஆறாமிடம் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். அதுமட்டுமல்லாமல் வழக்குகள், வீண்பழிகள், இடையூறு சக்திகள், மனக்கவலை, அலைச்சல் போன்ற பிரச்சினைகளையும், மறைமுகப் பிரச்சினைகளையும் ஆறாமிடத்தின் வாயிலாக அறிய முடியும்.

அப்படிப்பட்ட வலிமையான இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயத்தைக் கண்டிப்பாகக் கொடுப்பார். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

உங்கள் ராசிக்கு 9,12–க்கு அதிபதியானவர் குரு. அவர் 6–ல் சஞ்சரிக்கும் பொழுது சீறும் குணத்தை மாற்றி, சிரிக்கும் குணத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்வதும் ஆபத்தை விலக்கும்.

குடும்பத்திலுள்ள பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு நடக்கும் பொழுது பிரச்சினைகள் ஏற்படாது. உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் பங்குதாரர் களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைத்தாலும், அவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பது நல்லது. கூட்டு முயற்சியில் மாற்றம் ஏற்படும். சுயஜாதகம் வலிமையாக இருந்தால் தனித்து இயங்கலாம்.

போற்றும் விதத்தில் வாழ்வு அமைய பொன்னான குருவை, வியாழன்தோறும் வழிபட்டு வருவது நல்லது. அப்பொழுது தான் குடும்பச் சுமையும் குறையும். கொடுக்கல்–வாங்கல்களும் ஒழுங்காகும்.

உத்தியோகத்தில் சலுகைகளும், நற்பலன்களும் கிடைக்க குருவை வழிபடுவதோடு, மேலதிகாரிகளையும் அனுசரித்துச் செல்லுங்கள். பணி நிரந்தரம் பற்றிய கவலை அதிகரித்து தூக்கம் தொலையும். எதிரிகளை உதிரிகளாக்கும் மதியூகம் உங்களுக்குத் தேவை.

ஆறில் குரு சஞ்சரிக்கும் பொழுது உத்ரம், ஹஸ்தம், சித்திரை ஆகிய மூன்று நட்சத்திரக் கால்களிலும் முறையாக உலாவரும். உங்கள் நட்சத்திரத்திற்கு தாராபலம் பெற்ற நட்சத்திரக் காலில் குரு வரும்பொழுது, ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும். எல்லா நாட்களும், இனிய நாட்களாக மாறும். பலம் குறைந்து சஞ்சரிக்கும் பொழுது வளமும், நலமும் குறையும்.

கோடி நன்மை தரும் குருவின் பார்வை!

உங்கள் ராசிக்கு 6–ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, 2,10,12 ஆகிய இடங்களில் பதிகின்றது. இதனால் கூடுதலாக பலன்கள் கிடைக்கும்.

உங்களுக்கு வாக்கு, தனம், குடும்பம் என்று வர்ணிக்கப்படும் இடமும், தொழில் ஸ்தானமும், விரய ஸ்தானமும் புனிதமடைகின்றன. இரண்டாம்இடத்தை குரு பார்ப்பதால் திரண்ட செல்வம் உங்களைத் தேடி வரப்போகிறது. வறண்ட சூழ்நிலை மாறும். வளர்ச்சி கூடும். உத்தியோகஸ்தர் களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும்.

வீட்டில் மங்கள நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கூட்டு முயற்சிகளில் இதுவரை வெற்றி கண்டு வந்த நீங்கள் இனி தனியாக செய்யும் முயற்சியிலும் தனலாபத்தைக் குவிக்கப் போகிறீர்கள். முடித்துக் கொடுத்த காரியங்களில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கு வீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். உயர்ந்த மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

குருவின் பார்வை பலன் 10–ம் இடத்தில் பதிவதால் செயல் ஸ்தானம் பலம் பெறுகிறது. செய்யும் செயல்களில் இருந்த சிக்கல்கள் அகலும். சிறுசிறு பிரச்சினைகள் குடும்பத்தில் தலை தூக்கினாலும், அதைச் சமாளித்து விடுவீர்கள். குழந்தைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சியில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். புதிய தொழி லில் கூட்டாளிகள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.

குருவின் பார்வை அயன, சயன ஸ்தானம் எனப்படும் 12–ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சல் கூடும் இந்த நேரத்தில் ஆதாயமும் கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவியால் புது முயற்சி ஒன்று கைகூடும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மங்கள ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கப் போகிறது. வீடுமாற்றம், நாடுமாற்றம் போன்றவை எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். வேற்று மனிதர்களின் ஒத்துழைப்போடு வியக்கும் அளவிற்கு முன்னேற்றமும் ஏற்படும்.

குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– பிள்ளைகள் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக் கும். அவர்களின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் லாபம் உண்டு. பாகப்பிரிவினைகளுக் காக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும்.

குருபகவான், சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– பெற்றோர்களால் விரயம் உண்டு. பிரச்சினைகளில் இருந்து விலக வழிபிறக்கும். தொழிலுக்கு மூலதனம் வந்து சேரும். புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். வெளிநாட்டு தொடர்பு கிடைக்கும்.

குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.206 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். சொத்துக்கள் வாங்க முடிவு எடுப்பீர்கள்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு மேன்மையான காலம் இது. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். உத்தியோகத்தில் சேரும் வாய்ப்பு கைகூடி வரும். ஊர்மாற்றமோ, வீடு மாற்றங்களோ வருவதற்கான அறிகுறி தென்படும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு தொகை கடைசி நேரத்தில் வந்து சேரும். பகையை வளர்த்துக்கொள்ளாமல் பாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இளைய சகோதரத்தோடு இணக்கம் அதிகரிக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். உங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடி வரும். நகை வாங்குவதில் நாட்டம்செல்லும். கேது பார்ப்பதால் நாக சாந்தியை யோக பலம் பெற்ற நாளில் செய்வது நல்லது. சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டால் அல்லல்கள் தீரும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

இந்த காலத்தில் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும், மனக்கவலையும் அதிகரிக்கக்கூடும். 9,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக குரு விளங்குவதால் பெற்றோர் வழியில் பிரியம் குறையலாம். சகோதரர்களிடம் காட்டும் அன்பை விட உங்களிடம் காட்டும் அன்பு குறைவாக இருக்கலாம். சொத்துப் பிரச்சினை அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் கையிருப்புக் குறையும். வங்கிச் சேமிப்பு கரைகின்றதே என்று கவலைப்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு புதிய கூட்டாளிகள் வந்தாலும், மூலதனம் கிடைத்தாலும் பணிபுரிய நல்ல ஆட்கள் கிடைப்பார்களா? என்பது சந்தேகம் தான். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

குரு அதிசாரம் பெற்று துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசியைப் பார்ப்பார். எனவே அந்த காலம் பொற்காலமாக அமையும். அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் செவ்வாய் என்பதால் முருகப்பெருமானை முறையாக வழிபட்டு வாருங்கள். சஷ்டி விரதமிருந்து வந்தால் சங்கடங்கள் தீரும். சந்தோஷங்கள் சேரும். சிறப்பு வழிபாடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட்டால் எல்லையில்லாத நற்பலன்கள் கிடைக்கும்.


rishabamரிஷபம்:

எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப் படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர் கிறார். உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறை யும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்னியம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். சிலருக்குக் குழந்தை பாக்கி யம் உண்டாகும். மகனின் கல்வி, வேலை தொடர்பான முயற்சிகள் சாதகமாகும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வேலைக்குக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும்.

குரு தனது 5-ம் பார்வையால் உங்க ளின் 9-ம் வீட்டை பார்ப்பதால், மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். தந்தையின் உடல்நிலை சீராகும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், தொட்டது துலங்கும். மூத்த சகோதர வகை யில் உதவிகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புதுப் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.

வந்தது குருப்பெயர்ச்சி!

ஆடி 18 உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமையப் போகிறது. அன்றைய தினம் இடம் பெயரும் குரு பகவான், கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கப் போகிறார். 5–ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, ஜென்ம ராசியிலும், 9 மற்றும் 11 ஆகிய இடங்களிலும் பதியப்போகிறது.

பொதுவாக ஐந்தாமிடம் என்பது புத்திர ஸ்தானம் என்றாலும் கூட, பூர்வ புண்ணியம், தாய்வழி சகோதரம், புத்தி சாதுரியம், புகழ்பெறும் நிலை, வாழ்வில் ஏற்படும் வளர்ச்சி போன்றவற்றையெல்லாம் அறிந்து கொள்ளும் இடமாக அமைகிறது. உங்கள் ராசிக்கு 8,11–க்கு அதிபதியானவர் குருபகவான். உங்களுக்கு இழப்பைக் கொடுக்கும் எட்டாமிடத்திற்கு குரு அதிபதி. அந்த இழப்பை ஈடுகட்டும் இடமான பதினோராம் இடத்திற்கும் அவர்தான் அதிபதி.

உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு சம வலிமையான எதிரி குருவாக இருந்தாலும், அவரது பார்வை கெடுதலைத் தராது. சுபகிரகம் என்பதால் சுகங் களையும், சந்தோஷங்களையும் வழங்குவார். குறிப்பாக உன்னதமான குருவின் ஆதிக்கம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறது. வண்ணமயமான வாழ்க்கை இனி அமையப் போகிறது. நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கிராமத்தில் இருப்பவர்கள் நகரத்திற்கு சென்று, தொழில் தொடங்க முற்படுவர். சென்ற குருப்பெயர்ச்சியில் நடைபெறாத சில காரியங்கள் இந்த குருப்பெயர்ச்சியில் இனிதே நடைபெறும். இரு சக்கர வாகனம் வைத்திருப்போர், நான்கு சக்கர வாகனத்தை நாடிச் செல்வர். செல்வாக்கு மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புகழேணியின் உச்சிக்குச் செல்வீர்கள்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகங்களில் நன்மை கொடுக் கும் கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு இப்பொழுது 4–ம் இடத்திலிருந்து ஐந்தாமிடத்திற்கு வந்துவிட்டார். அங்கிருந்து கொண்டு தனது பார்வையை 1,9,11 ஆகிய இடங்களில் பதிக்கின்றார். பார்க்கும் குருவால் இனி பணியில் இருக்கும் தொய்வுகள் அகலும். யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு வந்து சேரும். சேர்க்கும் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். செல்வச் செழிப்பில் மிதக்கப் போகிறீர்கள்.

ஜென்ம ராசியை குரு பார்க்கப் போவதால் நீடித்த நோயிலிருந்து நிம்மதி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மாறும். உடல் நலத்திற்காக செலவிட்ட தொகை குறையும். உற்சாகத்தோடு பணிபுரியத் தொடங்குவீர்கள். கருத்து வேறுபாடுகள் அகலும். கனிவோடு பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்ள வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். ரண சிகிச்சை செய்ய நினைத்தவர்கள் கூட, சாதாரண சிகிச்சையிலேயே குணம் பெற்று மகிழ்ச்சியடைவர்.

இதுவரை செய்த முயற்சிகளில் இருந்த தடைகள் அகல புதிய வழி தோன்றும். சிலமாதங்களாக ஏற்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றும் நல்ல முடிவிற்கு வரும். மனக்கவலை நீங்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். இனத்தார் பகை அகலும். எல்லா வழிகளிலும் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எப்போது நடக்குமோ என்று ஏங்கிய காரியம் இப்பொழுது நடைபெறும். வெற்றி வாகை சூடும் வகையில் வாழ்க்கை அமையும். பண மழையிலும், பாச மழையிலும் நனைவீர்கள். நினைத்ததைச் சாதித்துக் காட்டும் நேரம் கைகூடி வந்துவிட்டது. மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். மக்கள் செல்வங்களால் யோகம் வரும். ஆபரணங்களை வாங்கிச் சேர்க்க முற்படுவீர்கள்.

லாப ஸ்தானத்தை பார்க்கும் குரு மூடிக்கிடந்த தொழிலை மீண்டும் திறக்க வைப்பார். முன்னேற்றம் அதிகரிக்க முறையான மாற்றம் வரும். அரசுப்பணி, நிரந்தரப் பணி, வெளிநாட்டு அழைப்பு, விருப்ப ஓய்வில் வெளிவருதல், பதவி உயர்வு, இலாகா மாற்றம் போன்ற பலவகை சந்தர்ப்பங்கள் அவரவர் ஜாதகத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப வந்துசேரும். வரும் வாய்ப்பு நல்ல வாய்ப்புகளாகவே அமையும். எனவே நலங்களும், வளங்களும் வீடு வந்து சேர, கலங்காமல் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– பூமி யோகம் கிட்டும். புதிய பூமி வாங்க நினைப்பவர்கள் அதற்குரிய நேரம் கைகூடி வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைவர். தாய்வழி ஆதரவு பெருகும். பழைய வீடுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட ஒரு சிலர் முன்வருவர். வாகன யோகம் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.

குருபகவான், சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.6.2016 முதல் 24.11.2016 வரை):– சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாகும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடிஎடுத்து வைப்பீர்கள். ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டுவீர்கள். அசையாத சொத்துக்கள் வாங்குவதில் ஆசை கூடும். புதிய நண்பர்கள் உங்கள் பொருளாதார விருத்திக்கு அடித்தளம் இடுவர். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலாங்கும். நீண்ட தூரப் பயணங்களால் நிம்மதி குறையலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சகோதர வழியில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு ஏற்படும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு இது யோகமான நேரமாகும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பாலமாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்து வைப்பீர்கள். மக்கள் செல்வம் இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உருவாகும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். கூடப்பிறந்தவர்கள் உங்கள் கூட்டாளியைப் போல இருந்து உதவி செய்வர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் கேட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு அரசு வேலை கிடைக்கக்கூடும். இல்லத்தில் மங்கள ஓசை கேட்பதற்கான வாய்ப்பு உண்டு. பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

இம்முறை குரு வக்ரம் பெறுவதோடு அதிசாரமாக துலாம் ராசிக்கு இடையில் செல்கிறார். இந்த அதிசார குரு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாது. எதிர்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். வீடு மாற்ற யோசனை உண்டாகும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அடுக்கடுக்காக நல்ல பலன்கள் வந்து கொண்டே இருக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். படிப்பு, உத்தியோகம் போன்றவற்றில் மேன்மை பெற வழிவகுத்துக் கொடுப்பீர்கள். பற்றாக்குறை அகன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவதால், இந்த காலத்தில் இனிய மாற்றங்கள் நடைபெறும். பொதுநலத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குரு வழிபாட்டோடு, நந்தியையும் வழிபடுவது நலம் சேர்க்கும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் சுக்ரன் என்பதால் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமை விரதமிருப்பது வியக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். யோக பலம் பெற்ற நாளில் தஞ்சை பெரிய கோவில் சென்று விநாயகர், முருகன், சுவாமி, அம்மன், நந்தி, தட்சிணாமூர்த்தி, வராஹி ஆகியோரை வழிபட்டு வாருங்கள். வளமும், நலமும் வந்து சேரும்.


mithunamமிதுனம்:

யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படும் அன்பர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பிரச்னை களை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள்.

சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம். சோர்வு, கை- கால் வலி வந்து விலகும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.

உங்களின் உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், புது வேலைக்கு முயற்சித்தவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்ப தால் சுபச் செலவுகள் அதிகமாகும். வெளித் தொடர்புகள் விரிவடையும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வந்து விட்டது குருப்பெயர்ச்சி!

உங்கள் ராசிக்கு 3–ல் சஞ்சரித்து வந்த குருபகவான், 2.8.2016 முதல் 4–ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமத்தில் பாதி வலிமையைப் பெறுவதால், அர்த்தாஷ்டம குரு என்ற பெயரைப் பெறுகின்றது. இந்த நேரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விரயம் அதிகமாகும். மன உளைச்சல் கூடும். மாற்றங்களும், ஏமாற்றங்களும் வந்து சேரும் என்றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம்.

ஏனெனில் 7,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு 4–ம் இடத்தில் சஞ்சரித்து, கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கினாலும், அதன் பார்வை அதற்குரிய சொந்த வீட்டின் மீதே பதிகிறது. எனவே தோஷத்தை யோகமாக மாற்றும் தன்மை உருவாகப் போகிறது. அதுமட்டுமல்ல, அதன் பார்வை 8,10,12 ஆகிய இடங்களிலும் பதியப் போகிறது. எனவே நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் குரு முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் முன்னேற்றத்தைக் கொடுப்பார். கட்டுக்கடங்காத எதிர்ப்புகள் வந்தாலும் கடைசியில் வெற்றியை வழங்குவார். விட்டுக் கொடுத்துச் செல்வதும், விவேகத்தோடு நடந்துகொள்வதும், சிலரிடம் பட்டும்படாமல் பழகுவதும் தான் இந்த காலத்தில் உங்கள் முயற்சிக்கு அனுகூலம் தரும்.

உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், அதை பார்க்கும் கிரகம், சாரபலம் அனைத்தும் பார்த்து யோகபலம் பெற்ற நாளில் நீங்கள் பரிகாரங் களைச் செய்தால் வாய்ப்புகள் வாசல் தேடி வரும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை அகன்று ஆதாயத்தை அதிகரிக்க வைக்கும்.

அர்த்தாஷ்டம குருவாக வரும் பொழுது ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ‘கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே, வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே!’ என்று கவலைகொள்வீர்கள். அடுத்தடுத்து விரயங்கள் வந்தால் யாரிடம் போய் உதவி கேட்பது என்ற சிந்தனை மேலோங்கும். கட்டிடப்பணி பாதியிலேயே நிற்கலாம். கடல் தாண்டிச் சென்றவர்கள், அங்கு வேலை கிடைக்காமல் தடுமாறக்கூடும். பத்திரப் பதிவில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கிய பூமியை விற்கும் சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். தாய் வழிப் பிரச்சினையை வளரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளும் முயற்சியில் திடீர் மாற்றங்கள் உருவாகலாம். நல்ல மாற்றங்களாக அமைய வாரம் தோறும் குருவை வழிபடுவது நல்லது.

அர்த்தாஷ்டம குருவாக இருந்தாலும் அதன் பாதசார பலன் உங்களுக்கு நன்மை தரும் விதத்தில் அமையும் பொழுது, எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பகை கிரகத்தின் பாதத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் எண்ணற்ற தடைகள் ஏற்படும்.

குதூகலம் தரும் குருவின் பார்வை!

உங்கள் ராசிக்கு 4–ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, 8,10,12 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. ‘குரு பார்க்கக் கோடிநன்மை’ என்பதால் அந்த மூன்று இடங்களுக்கும் உள்ள ஆதிபத்யங் கள் சிறப்பாக நடைபெறும் என்றே சொல்லலாம். குருவின் பார்வை ஒன்றுதான் குழப்பங்களை அகற்றி, குதூகலத்தை வரவழைத்துக் கொடுக்கும். வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும். நல்ல திருப்பங்களை உருவாக்கும். திருமணத்தை முடித்து வைக்கும். பொறுப்புகளும், பதவிகளும் அளிக்கும்.

குரு பார்வையால் 8–ம் இடம் புனிதமடைகிறது. எனவே ஆரோக்கியம் சீராகும். சென்ற ஆண்டில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை இந்த ஆண்டு ஈடுகட்டுவீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றத்திற்கான விண்ணப்பம் செய்தவர்கள், இதுவரை இருந்த தடை அகன்று நினைத்த ஊருக்கே மாறுதல் பெறுவர்.

பத்தாமிடத்தை குரு பார்ப்பதால் தொழில் ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே, வருமானம் அதிகரிக்கும். மூடிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தீட்டிய திட்டங்கள் வெற்றியாகும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். பொன்னான வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்த உள்ளங்களுக்கு, மனை வாங்கும் யோகம் வாய்க்கும்.

பன்னிரண்டாம் இடத்தை குரு பார்ப்பதால் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். வெற்றி கரமாக சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வந்து சிக்கல்கள் தீர வழிவகுத்துக் கொடுப்பர். 12–ம் இடம் விரய ஸ்தானம் என்பதால் சுப விரயங்களைச் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். வெளிநாட்டு அழைப்பு வரலாம். ஆனால் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? என்பது சந்தேகம் தான்.

குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். கடன் சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள்.

குரு, சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். புதிய நண்பர்களின் ஒத்துழைப்போடு பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தகராறு செய்தவர்கள் தானே விலகுவர். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.

குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– எதிலும் விழிப்புணர்ச்சி தேவை. எதிர்பாராத விரயங்களைச் சந்திக்க நேரிடும். சொத்துக்கள் கையை விட்டுப் போகலாம். சொந்தங்களின் பகை உருவாகும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைக்கும். சக ஊழியர்கள் ரகசியத்தைக் காப்பாற்றமாட்டார்கள். சலுகைகள் கிடைப்பதில் கூட தாமதம் ஏற்படும். அங்காரகனையும், குருவையும் வழிபடுவதன் மூலம் அல்லல்கள் தீரும். விரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும். வாங்கல்–கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அர்த்தாஷ்டம குரு ஆதிக்கத்தால் அடிக்கடி உடல்நிலை தொல்லை உருவாகலாம். மாற்று மருத்துவத்தால் உடல் நலத்தை சீராக்கிக் கொள்ளுங்கள். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அதுமட்டுமல்ல குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்பட்டால் பிரச்சினை ஏற்படாது. குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவர்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

குரு வக்ரம் பெறும் நேரத்தில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7,10 ஆகிய இடங்களின் அதிபதியாக குரு விளங்குவதால், வாழ்க்கை துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். வருமானம் திருப்தியாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கலாம். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும் பொழுது, நன்மைகளையே அதிகம் வழங்கும். பிள்ளைகள் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இழப்புகளை ஈடு செய்ய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை மட்டுமின்றி வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள். குரு அதிசாரமாக செல்லும்பொழுது வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் புதன் என்பதால் புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் பழனிக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.


kadakamகடகம்:

உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகு முறையை மாற்றிக்கொள்வது நல்லது.

வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும்.கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்ப தால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். புது வேலை அமையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.

குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால், உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறை வேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

வளர்ச்சி தரும் குருப்பெயர்ச்சி!

உங்கள் ராசிக்கு 2–ல் சஞ்சரித்து வந்த குருபகவான், 2.8.2016 முதல் 3–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இது முன்னேற்றத்தைக் குறிக்கும் இடமாகும்.

உங்கள் ராசிக்கு 6,9 ஆகிய இடங் களுக்கு அதிபதியான குரு, மூன்றாமிடத்தில் சஞ்சரித்து 7,9,11 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். அதன் பார்வை பதியும் இடங்களெல்லாம் பலன் தரும் இடங்களாக மாறும். அந்தந்த ஆதிபத்தியங்களில் இதுவரை நடைபெறாத செயல்கள் யாவும் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்
கும்.

பொதுவாக மூன்றாமிடம் என்பது உடன்பிறப்புகள், வெற்றி வாய்ப்புகள், அஞ்சாநெஞ்சம், பொழுதுபோக்கு, கனவுகள், பணியாளர்கள் பிரச்சினை, மிகநெருங்கிய உறவினர்கள் பற்றிய தகவல்களையெல்லாம் அறிந்து கொள்ள உதவும் இடமாகும். அப்படிப்பட்ட இடத்திற்கு, எதிரிகள் ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6–ம் இடத்திற்கு அதிபதியானவர் வரும் பொழுது, என்னவெல்லாம் மாற்றம் ஏற்படும் என்பதை நீங்கள் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

அதே நேரத்தில் ஒன்பதாமிடத்திற்கும் அதிபதியானவர் குரு என்பதால், மலை போல் வந்த துயர் பனிபோல் விலகும் என்றே சொல்லலாம். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் வாய்ப்புகளும் உருவாகும்.

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்ற வர்ணிக்கப்படும் குரு 3–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வாழ்வில் வளம் காணப் போகிறீர்கள். சொந்த பந்தங்கள் செய்யாத உதவியை நண்பர்கள் செய்வார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் உபத்திரவம் அகன்று உத்தியோக முன்னேற்றம் காண்பீர்கள். கடன்சுமை குறைய நூதன முறையைக் கையாளப்போகிறீர்கள். தலைக்கு மீறிய கடன் இருக்கிறதே என்ற கவலை, தனவரவால் நிவர்த்தியாகும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவியை பிடிப்பார்கள். நிறைவேறாத காரியங்களை, சாமி கும்பிடுவதன் மூலமாக நிறைவேற்றிக்கொள்வீர்கள். பரிகார ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் பிரச்சினைகள் விலகும்.

6, 9–க்கு அதிபதியாக குரு விளங்குவதால், மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் பலரது எதிர்ப்புகளையும் தேடிக்கொண்ட நீங்கள், இப்பொழுது எதிரிகளை வெல்லும் வல்லமையைப் பெறுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். எதிர்பார்த்த உத்தியோகம் கிடைக்கும். வீடு கட்ட, கார் வாங்க, கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகம் சார்ந்த அனுகூலமும் உண்டு. பழைய கடன்களை பைசல் செய்யும் நேரம் இது. ஆரோக்கியத் தொல்லைகள் குறையும். சொத்துத் தகராறு அகலும். பங்காளிப் பகை மாறும். இதுவரை போராடி வெற்றி பெற்ற நீங்கள், இனி போராடாமலேயே வெற்றி பெறுவீர்கள்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு, இப்பொழுது 2–ம் இடத்திலிருந்து 3–ம் இடத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து கொண்டு 7,9,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். அதன் பார்வை பட்டதும் அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. இதையடுத்து திருமண வாய்ப்பு கைகூடவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு திருப்தியான வரன் வந்து சேரும். விட்டுப்போன வரன்கள் கூட மீண்டும் வரலாம். பிரிந்த தம்பதியர்களின் பிரச்சினைகளில் தீர்வு காணப்படும். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் உங்கள் துயரங்களுக்கு வடிகாலாக இருக்கும். வீடு, மனை வாங்கும் திட்டம் நிறைவேறும். விருந்தினர் வருகை உண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

ஒன்பதாமிடத்தைக் குரு பார்ப்பதால் பொன், பொருட்கள் பெருகும். போட்ட திட்டங்கள் நிறைவேறும். அன்பு நண்பர்கள் உங்கள் அருகிலிருந்து வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் கூட நடப்பது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். பெற்றோர்களால் சகல நன்மைகளும் கிடைக்கும். லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார வளர்ச்சி மேலோங்கும். திருப்பணிக்கும், அறப்பணிக்கும் அள்ளிக் கொடுக்கும் விதத்தில் செல்வச் செழிப்பை காண்பீர்கள். செய்த முயற்சிகளுக்குத் திருப்தியான பலன் கிடைக்கும்.

குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். மன மகிழ்ச்சி தரும் விதத்தில் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வியாபாரப் போட்டிகள் அகலும். வியாபாரத்தை விரிவு செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பு கைகூடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பகுதிநேர தொழில் ஏதாவது தொடங்குவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். செல்வாக்கு மேலோங்கும்.

குரு, சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– ஆரோக்கியத் தொல்லை அகலும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் உண்டு. மனக்குமுறல் மாற மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். பணப் பிரச்சினைகள் அகலும். பற்றாக்குறை மாறும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்து உதிரி வருமானங்களும் வரும். அயல்நாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மங்கள காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி, அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்க வைக்கும். கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. புகுந்த வீட்டில் உள்ளவர்கள் உங்களைப் போற்றிக் கொண்டாட வேண்டுமானால் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதன் மூலம் கூடுதல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு உரிய திறமையை வெளிப்படுத்த முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். இந்த குருப் பெயர்ச்சி உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுதல்களை வாங்கிக் கொடுக்கப் போகிறது. உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குருவின் வக்ர காலத்தில் பூமி வாங்கும் யோகம் உண்டு. திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபாடு செய்வது நல்லது.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

இந்த காலத்தில் வியாபார விரோதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். மனச்சோர்வு, உடல் உபாதை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். உங்களுக்கு 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான் என்பதால், உத்தியோக மாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பிரச்சினைகள் தீர சட்ட ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. தொழில் செய்பவர் களுக்கு இடமாற்ற சிந்தனைகள் மேலோங்கும். பழைய கடன்களை தீர்த்தாலும் புதிய கடன்கள் உருவாகும். வீண் பழிகளும், விரயங்களும் ஏற்படாமலிருக்க வியாழனை வழிபடுவது நல்லது. குரு அதிசாரத்தில் வரும்பொழுது நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பழைய தொழிலிருந்து விடுபட்டுப் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் சந்திரன் என்பதால் பவுர்ணமியன்று கிரிவலம் வருவதன் மூலமும், பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும் பெருமைகளைக் காணலாம்.


simamசிம்மம்:

காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்களே!

இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும்.

பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வழக்கு சாதகமாகும்.

குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அதிக சம்பளத்துடன் அயல்நாடு தொடர்பு டைய நிறுவனத்தில் வேலை அமையும்.

குரு பகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால், பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாற்று மொழியினரால் நன்மை உண்டு.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேலைச்சுமை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சொந்தமாக சிலர் தொழில் தொடங்குவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

குருப்பெயர்ச்சியால் தேடி வரும் யோகம்!

உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இனி பண மழையிலும், பாராட்டு மழையிலும் நனையப் போகிறீர்கள். ஆடி 18 முதல் தேடி வரப்போகிறது யோகம். நாடிவரும் மக்களுக்கு நன்மையைச் செய்யப் போகிறீர்கள். நாடெங்கிலும் உங்கள் பெயர் எதிரொலிக்கும். இரண்டில் குரு வந்தால் திரண்ட செல்வம் வரும் என்பது முன்னோர் வாக்கு. எனவே தளர்ச்சி அகன்று வளர்ச்சி கூடும். உங்கள் வளர்ச்சி கண்டு பலர் பிரமிப்பார்கள்.

உங்கள் ராசிக்கு 5,8–க்கு அதிபதியானவர் குரு. அவர் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, இனிய பலன்களே வந்து சேரும். திரண்ட செல்வம் கைக்கு வரும். அவற்றை தெய்வத் திருப்பணிக்கு செலவிடுவீர்கள். வரலாறு படைப்பதற்கான காலம் வந்துவிட்டது. நொந்து கிடந்த உள்ளங்களும், நொடித்துக் கிடந்த வாழ்க்கையும் எழுச்சி கொள்ளப்போகிறது. தேக்கநிலை மாறி, தெளிவு பிறக்கும். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அனைத்து வழிகளிலும் நன்மை காண்பீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மூடிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

புத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் பிள்ளைகளுக்கான கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கல்யாணமானவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட கவலைகள் தீரும். கணவன்– மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உடல் ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்பட்டு ஊர், ஊராகச் சென்று பார்த்த வைத்தியத்தில் மாற்றம் ஏற்படும். நல்ல மருத்துவரை நாடிச்சென்று நலம் காண்பீர்கள். உடலில் பலம் சேர்ப்பீர்கள். தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்புகளும், தெய்வத் திருப்பணிகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும். பகைவர்கள் இருந்தாலும், உங்களைப் பார்த்ததும் பதுங்கிவிடுவர்.

இருண்ட வாழ்க்கை மாறி இனிய வாழ்க்கை அமையும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் கோவிலுக்குச் சென்று குருவை வழிபட்டு வருவதோடு அருள் தரும் குருவின் சன்னிதியில் ஐந்து நிமிடங்களாவது உட்கார்ந்திருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் குரு கவசம் பாடினால் கவலைகள் தீரும்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படும் குருபகவான், உங்கள் ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் இடத்திற்கு மாறுதலாகி விட்டார். அங்ஙனம் மாறுதல் அடையும் பொழுது அதன் பார்வை 6,8,10 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. மறைவிடம் எனப்படும் 6–ம் இடத்தை குரு பார்ப்பதால், அது நிறைவிடமாகி உங்களுக்கு நிம்மதியை வழங்கப் போகிறது. எதிர்ப்பு, வியாதி, கடன் போன்றவற்றைக் குறிக்கும் 6–ம் இடம் புனிதமடைகிறது. எனவே எதிரிகள் விலகுவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். மாற்று வைத்தியத்தால் உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்வீர்கள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு அனைத்துக் காரியங்களையும் வெற்றியுடன் முடிக்கும் நேரம் இது.

8–ம் இடத்தில் குரு பார்வை பதிவதால் இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு உருவாகும். தொழில் வளர்ச்சியில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். இடையூறு சக்திகள் அகலும். வங்கிச் சேமிப்பில் கரைந்த பணத்தை ஈடுகட்டுவீர்கள். கைமாற்றாகக் கொடுத்த தொகை வந்து சேரும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பும், அதை அணிந்து அழகு பார்க்கும் வாய்ப்பும் உருவாகும். பழைய இடங்களை கொடுத்துவிட்டுப் புதிய இடம் வாங்குவீர்கள்.

10–ம் இடத்தை குரு பார்க்கும் பொழுது செய் தொழிலில் லாபம் கிடைக்கும். திடீர் வரவுகளும் வந்து சேரலாம். காரியங்களைக் கைகூட வைப்பது குருவின் பார்வைதான். எனவே வங்கிகளின் ஒத்துழைப்பும், செல்வந்தர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மிக்க நீங்கள், தொழிலில் பற்று வைத்து தொகைகளைச் சேர்க்கும் நேரம் இது. கடந்த காலத்தைக் காட்டிலும் கணிசமான தொகை கைக்கு வந்து சேரும்.

குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். தொலைபேசி வாயிலாக நெஞ்சம் மகிழும் தகவல் வந்து சேரும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் ஆதாயம் கிடைக்கும். அதிக அளவில் யோகத்தை வழங்கும் நேரம் இது.

குரு, சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– விரயங்கள் கூடும். விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. பயணங்கள் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசுபவர்கள் பாதை மாறிச் செல்வர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் ஊர்மாற்றம், இடமாற்றம் வந்து சேரும். வீடு கட்டுவதிலும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதிலும் கவனம் செலுத்துவீர்கள். நாடு மாற்றம் செய்பவர்கள் யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.

குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– யோகங்கள் அதிகரிக்கும். இடம், பூமி சேர்க்கை ஏற்படும். தேக நலனில் தெளிவு பிறக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு அவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு செல்வ வளம் பெருகும் நேரம் இது. செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தேசம் போற்றும் வாழ்க்கையும், திடீர் திருப்பங்களும் உருவாகும். பாச மழையிலும், பண மழையிலும் நனையப் போகிறீர்கள். நேச மனப்பான்மை கொண்டவர்களின் ஒத்துழைப்போடு நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்– மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தினர்களும் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் போற்றிக் கொண்டாடுவர். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். துயரங்கள் ஓடி ஒளியும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீடு கட்டும் முயற்சியில் உங்கள் பெயர் சேர்க்கப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு பெருகும். அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வழிபாடுகளிலும், விரதங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

இம்முறை குரு வக்ரம் பெறுவதோடு, அதிசாரமாகவும் துலாம் ராசிக்குச் செல்கிறார். அங்ஙனம் அதிசாரமாக செல்லும்பொழுது உங்கள் ராசிக்கு 7,9,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த காலத்தில் கல்யாணக் கனவுகள் நனவாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது உடன் இருப்பவர்களாலும், குழந்தைகளாலும் பிரச்சினைகள் ஏற்படும். பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்காது. உடல்நிலைப் பாதிப்புகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். நட்பு பகையாகலாம். நாடுமாற்றங்களும், வீடு மாற்றங்களும் வந்து சேரும். உங்கள் சுய ஜாதகத்தில் தெச£புத்தி பலம் பெற்றிருந்தால் கவலைப்படத் தேவையில்லை. இல்லையேல் எதிரிகளால் ஏமாற்றங்களைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். சிறப்புப் பரிகாரங்களைச் செய்தால் வரப்போகும் துயரங்களிலிருந்து விடுபட வாய்ப்புகள் உண்டு.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

உங்கள் ராசிநாதன் சூரியன் என்பதால் சிவன் வழிபாடும், உமையவள் வழிபாடும் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். திருவாதிரை விரதமிருந்து நடராஜரை வழிபடுவது நல்லது.


kanniகன்னி:

கலாரசனை உள்ளவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புக்கள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்யவேண்டி இருக்கும். கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால். தெளிவாக முடிவு எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

குரு பகவான் 7-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மனக் கசப்புகள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. வழக்குகளில் இருந்த நெருக்கடி நீங்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் பாக்ய வீடான 9-ம் வீட்டைப் பார்ப்பதால், அரைகுறையாக நின்ற வேலைகள் நல்லபடி முடியும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும்.

வந்து விட்டது குருப்பெயர்ச்சி!

ஆடி 18–ந் தேதி (2.8.2016) அன்று உங்கள் ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். இந்த ஜென்ம குரு நிம்மதியைக் கொடுக்காது. நிம்மதியை குறைக்கும். நன்மைகள் நடைபெற்றாலும் கூட நாளும் மனநிம்மதி குறையும். கூடுதல் செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். ஊர்மாற்றங்கள் எதிர்பாராமல் வந்து சேரும் என்றெல்லாம் எடுத்துரைப்பார்கள். இது பொது நியதி.

இருந்தாலும் ஒரு சிலருக்கு ஜென்ம குரு எல்லையில்லாத நன்மைகளைக் கொடுக்கும். இல்லத்தில் மங்கள ஓசை கேட்க வைக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சியும், உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கச் செய்யும். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைய அவரவருக்கு நடக்கும் திசாபுத்திய பலம் பெற்றிருக்க வேண்டும்.

ஜென்மத்தில் குரு வருகையால் சிக்கல்கள் ஏற்படும் பொழுது, பக்கபலமாக இருப்பவர்கள் உதவி செய்வர். பணத்தேவைகள் அதிகரிக்கும். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்ற உறவில் விரிசல் ஏற்படலாம். சிக்கனத்தைக் கடைப்பிடித்து செலவுகளை சமாளிக்க நேரிடும்.

உங்கள் ராசிக்கு 4,7–க்கு அதிபதியானவர் குரு. அவர் இப்பொழுது உங்கள் இல்லம் தேடி வந்து பலன் தரப் போகிறார். அவரை வீட்டிற்கு வரும் விருந்தினர் போல, வரவேற்க வேண்டியது அவசியமாகும். வண்ண மலர் மாலை சூட்டினால் எண்ணமெல்லாம் நிறைவேறும். குரு கவசம் பாடினால் குழப்பங்கள் தீரும். மங்கள நிகழ்ச்சிகளுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுப்பவர் குருதான். எனவே தங்கு தடைகள் அகலவும், தனவரவு தழைக்கவும் குருவை வழிபடுங்கள்.

சுகாதிபதியாக குரு விளங்குவதால் மாற்று மருத்துவத்தை மேற்கொண்டு, உடல் நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள். கூட்டாளிகளால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தாய்வழியில் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக மறுக்கப்பட்டு வந்த பதவி உயர்வு வந்து சேரலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து, புதிய தொழில் தொடங்க முயற்சிப்பர். வாகன மாற்றம் செய்ய வேண்டிய நேரமிது. புதிய வாகனங்களை வாங்கவும், புதிய தொழிலை விரிவு செய்ய வும் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து சலுகைகள் கிடைக்கும்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்கும் குரு ஜென்மத்தில் அடியெடுத்து வைக்கும் பொழுது, அதன் பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகிறது. அந்த இடத்திற்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் இனி துரிதமாக நடைபெறப் போகின்றன.

புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம், பிதுர்ரார்ஜித ஸ்தானம், பயண ஸ்தானங்கள் புனிதமடைவதால் அந்த இடங்களுக் குரிய ஆதிபத்யங்களில் இருந்த தடைகள் எல்லாம் விலகி ஓடும். தக்கபலன் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் கிடைக்கும். இல்லறம் இனிதாக அமையும். பிரிந்த தம்பதியர்கள் இணையக்கூடிய சூழ்நிலை உண்டு. எதிர்பாராத தனலாபம் வந்து இதயத்தை மகிழ்விக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குரு, பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– விரயங்கள் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். பணிகள் பாதியிலேயே நிற்கலாம். மனப்போராட்டம் அதிகரிக்கும். மறைமுகப் பகையும் உண்டாகும் என்பதால், கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.

குரு, சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– எடுத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். வெளிநாட்டு பயணம் அனுகூலம் தருவதாக அமையும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு புதிய பாதை கிடைக்க வழிவகுத்துக் கொடுப்பர். தாய்வழி ஆதரவு உண்டு. ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வீடு வாங்க, விற்க எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்.

குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– கூட்டாளிகள் பகையாகலாம். குடும்ப உறவில் விரிசல் ஏற்படலாம். பதவி மாற்றங்களும், இடமாற்றங்களும் பரிசீலிக்கப்படாமலேயே வந்து சேரும். உதவி செய்வ தாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கை விரிப்பர். ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும். வழக்குகள் திசைமாறிச் செல்லும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் கன்னி ராசிக்காரர்களாக இருந்தால், இந்த காலத்தில் அவரவர்களுக்கு உரிய வழிபாடுகளை மேற்கொள்வது வளர்ச்சியைப் பாதிக்காது.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி, நல்ல பலன்களை வழங்கப் போகிறது. குடும்பத் தகராறுகள் அகலும். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகளின் கல்விக்கு சிறந்த வழியை ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். நீண்ட நாள் பேசியும் முடிவடையாத சில சுபகாரியப் பேச்சுக்கள் திடீரென முடிவிற்கு வரும். கணவன்–மனைவி ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வரும் மாற்றங்கள், நல்ல மாற்றங்களாகவே அமையும். பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவியை தக்கவைத்துக் கொள்ள பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். அனுமன் வழிபாடு உங்கள் பயத்தைப் போக்கும். சனிக்கிழமை விரதமிருந்தால் சஞ்சலம் தீரும். சந்தோஷம் சேரும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

குருவின் வக்ர காலத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் அடையும்பொழுது, அதிகக் கவனம் செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். புதிய திருப்பங்கள் தோன்றும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். நல்லவர்கள் உங்களை நாடி வந்து சேருவர். வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். வருமானம் திருப்தி தரும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். நாட்டுப் பற்று மிக்கவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை அடைவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குரு அதிசாரமாக துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 6,8,10 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். அந்த காலத்தில் நீண்ட தூரப் பயணங்களால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தை பெருக்கிக் கொடுப்பர்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

வாரம் தோறும் புதன்கிழமை வராஹி அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். புதுக்கோட்டை மாவட்டம் பில்லமங்கலத்தில் உள்ள மகிஷாசுரவர்த்தினியின் அவதாரமாக விளங்கும் பொன்னழகி அம்மனை வழிபட்டால், பொன்னும், பொருளும், புகழும் பெருகும்.


thulamதுலாம்:

நடுநிலைமை தவறாதவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்துகொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றிய துடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.

மனக் குழப்பம் அதிகரிக்கும். பழைய கடன்களை நினைத்துக் கலக்கம் உண் டாகும். வருமானத்தை உயர்த்த கூடுதலாக உழைப்பீர்கள். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வேறு ஊருக்கு இடம் மாறுவீர்கள்.

குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்ப தால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். புது வேலை கிடைக்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களிடம் உண்மையான அன்பும் அக்கறையும் உள்ளவர்களைப் புரிந்து கொள்வீர்கள். வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.

வந்து விட்டது குருப்பெயர்ச்சி!

உங்கள் ராசிக்கு 3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். அவர் ஆடி 18–ந் தேதி (2.8.2016) விரய ஸ்தானம் எனப்படும் பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே விரயங்கள் கூடுதலாக வந்தாலும், அதனை வீண் விரயமாக இல்லாமல் சுபவிரயமாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

6–க்கு அதிபதி 12–ல் சஞ்சரிக்கப்போவதால் விபரீத ராஜயோக அடிப்படையில் பலன் தரும் என்பதால் நீங்கள் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திரவிய லாபம் உண்டு. வரவு வந்து செலவழியுமே தவிர, வரவு இல்லாமல் செலவு இருக்காது. ஏதாவது ஒரு வழியில் பணம் வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் ராசிக்கு 12–ம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விரயத்தை ஏற்படுத்தி விடுவாரோ என்று நீங்கள் பயப்படலாம். ஆனால் சுபவிரயமாக மாற்றி வீடு கட்டுவது, மனை வாங்குவது, கட்டிய வீட்டைப் பராமரிப்பது, பிள்ளைகளுக்கு திருமணம் நடத்துவது, ஆடை, ஆபரணங்கள் வாங்குவது போன்றவற்றைச் செய்யலாம். கூட்டாளிகள் விலக நேரிடும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உங்கள் கருத்துக்கு ஒத்துவராத பணியாளர் களையும் மாற்ற முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம். உயர் அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பார்கள்.

இதுபோன்ற காலங்களில் கடன் வாங்கியும் சில காரியங்களைச் செய்ய நேரிடும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம் என ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும்.

3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக குரு இருப்பதால் சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். நீண்ட நாளைய கடன் வசூலாகும். பால்ய நண்பர்களால் பணவரவு பெருக வழிபிறக்கும்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகத்தில் நன்மை தரும் கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு, உங்கள் ராசிக்கு 12–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 4,6,8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. அந்தந்த இடங்களுக்கு ஆதிபத்யங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறும். விதியை மாற்றியமைக்கும் ஆற்றல் வியாழனின் பார்வைக்கு உண்டு. அதன்படி 4,6,8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். கட்டிய வீட்டை பராமரிக்கும் எண்ணமும் மேலோங்கும். தாய்வழி ஆதரவு பெருகும். பழைய கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள்.

6–ம் இடத்தைக் குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் உடன் இருப்பவர் களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். இனி உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறு ஏற்படாது. ‘கடன் தலைக்கு மேல் இருக்கிறதே, சொத்துக்களை விற்று அடைக்க வேண்டுமோ?’ என்று நினைத்தவர்கள், வேறு வழிகளில் பணம் வந்து கடனைக் கொடுத்து நிவர்த்தி செய்வீர்கள். அது நண்பர் களின் உதவியாகவும் இருக்கலாம், அல்லது நல்லவர்களின் உதவியாகவும் இருக்கலாம்.

8–ம் இடத்தை குரு பார்ப்பதால் இல்லத்தில் சுப காரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். காசி முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் புனிதப் பயணங்கள் உருவாகும். பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும். வாகனங்களை மாற்ற முன்வருவீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகளின் சீர்வரிசைச் சாமான்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– எதிர்பார்த்த இடத்திலிருந்து தொகை வந்து சேரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். கலகம் விளைவித்தவர்கள் விலகுவர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிகாரத்துவ யோகம் உண்டு. கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

குரு, சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வரும். நீங்கள் தொடங்கும் தொழிலுக்காக, கூட்டாளிகள் பணம் கொடுத்து உதவுவார்கள். புதிய பாதை புலப்படும். வாழ்க்கைத் துணைக்கும், வாரிசுகளுக்கும் வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். அரசியலில் புதிய பதவிகள் கிடைக்கும். வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கும் நேரமிது.

குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– தனவரவு தாராளமாக வந்து கொண்டிருக்கும். இனத்தார் பகை மாறும். எடுத்த காரியங்களை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உண்டு. தொழிலுக்கு மூலதனம் கிடைக்கும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

குடும்ப வாழ்க்கை குதூகலமாக அமையும். புகுந்த வீட்டில் நல்லிணக்கம் ஏற்படும். பொன், வெள்ளி நிறைய சேரும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீடு கட்டிக்குடியேற வேண்டுமென்ற ஆசை நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். மருத்துவச் செலவுகள் குறையும். பண வரவுகள் வந்து கொண்டே இருக்கும். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பீர்கள். பதவி உயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்து இயங்க முன்வருவர். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், முருகன் வழிபாடும் நன்மையை வழங்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

குருபகவான் அதிசாரமாகவும் இருக்கிறார், வக்ரமாகவும் இருக்கிறார். வக்ர காலத்தில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். அதிசார காலத்தில் அதிக விரயம் ஏற்படும். தகராறுகள் தானாக வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களே குழப்பங்களை விளைவிப்பர். வக்ர காலத்தில் உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். நிலம் சம்பந்தமாக போட்ட வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் தித்திக்க வைக்கும். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாகன மாற்றங்கள் பயன்தரும் விதத்தில் அமையும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் சுக்ரன் என்பதால் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நல்லது. சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை காலையிலும், சனிபகவானை மாலையிலும் வழிபட்டு வருவது நல்லது.


viruchigamவிருச்சிகம்:

கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். புகழும் செல்வாக்கும் கூடும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை களின் வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால், உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை வாங்குவது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

குரு பகவான் 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்தி லிருந்து வாழ்க்கைத் துணை அமைவார். வழக்கில் வெற்றி கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடன் செலுத்துவீர்கள்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

லாப ஸ்தானத்தில் குருபகவான்!

ஆடி 18–ந் தேதி (2.8.2016) அன்று உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான நாளாக அமையப் போகின்றது. அன்றுதான் குருப்பெயர்ச்சி. குரு லாப ஸ்தானத்திற்கு வந்து பணத்தைப் பெருக்கிக் கொடுக்கப் போகிறது. இனி தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். லாபம் எதிர்பார்த்ததை விட இருமடங்காக வந்து சேரும். உழைத்தும், களைத்தும் ஒவ்வொரு நாளும் பொருளாதாரத்தை அடையப் போராடிய காலம் மாறி, இப்பொழுது எளிய முறையில் சம்பாத்தியம் வரப்போகிறது.

உங்கள் ஜாதகப்படி லாப ஸ்தானத்திற்கு வரும் குரு, திரண்ட செல்வத்தை வாரி வழங்கப் போகிறார். தேக நலன் சீராகும். திசை எட்டும் புகழ் பரவும். முக்கியப் புள்ளிகள் உங்கள் இல்லம் தேடி வந்து முன்னேற்றத்திற்கு வித்திடுவர். அடிப்படை வசதிகளப் பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பலருக்கும் முன்னேற்றம் படிப்படியாகத்தான் வரும். ஆனால் உங்களுக்கோ, பணபலம் கொடுக்கும் இடத்தில் குரு வந்து விட்டதால் திடீர் முன்னேற்றங்கள் வந்து திக்குமுக்காடச் செய்யும். உத்தியோகமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் சரி ஏராளமான வாய்ப்புகள் எதிரில் வந்து அலைமோதும். எதை ஏற்றுக் கொள்வது, எதை விடுவிப்பது என்று உங்களுக்கே தெரியாது.

இதில் மிகச் சிறப்பு என்னவென்றால் 2–ம் இடம் மற்றும் 5–ம் இடத்திற்கு அதிபதியான குரு, 11–ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது தான். அதுமட்டுமல்ல, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பாக்ய ஸ்தானம் எனப்படும் இடமான 5–ம் இடத்தைப் பார்க்கிறார். அந்த இடம் குருவிற்குரிய வீடு என்பதால் தன் வீட்டைத் தானே பார்க்கும் குருவை நீங்கள் முறையாக வழிபட்டால் ராஜயோகம் உங்களைத் தேடி வரும். தேக நலனும் சிறப்பாக இருக்கும். 4–ல் கேது, 10–ல் ராகு இருப்பதால் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாகச் செய்தால் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம்.

குருபார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குருபகவான். அவர் இப்பொழுது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அவரது பார்வை 3,5,7 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன் பார்வை பதியும் இடங்களெல்லாம் அற்புதமான பலன்களை வழங்கும் என்பதால் தான் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

குருபார்வையால் சகோதரம், சகாயம், சாமர்த்தியம், நட்பு, உடல்நலம், பிரயாணம், சொத்து சேர்க்கை, பணவரவு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு, வங்கிச் சேமிப்பு, வாழ்க்கைத் துணையால் நன்மை, கல்யாண வாய்ப்பு, புத்திரப்பேறு, தொழில் கூட்டாளிகளால் நன்மை ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களெல்லாம், குரு பார்வையால் நல்ல பலன்களை வாரி வாரி வழங்கப் போகின்றது.

எனவே தற்சமயம் பெயர்ச்சியான குரு சகோதரர்களால் நன்மையை உருவாக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பணப்புழக்கம் அதிகரிக்கும். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க வள்ளல் களின் ஒத்துழைப்பு கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் உண்டாகும்.

பஞ்சம ஸ்தானத்தைக் குரு பார்த்தால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து ஆச்சரியப்பட வைக்கும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

சப்தம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். பூப்புனித நீராட்டு விழா முதல் புத்திரப்பேறு வரை இல்லத்தில் இனிதே நடைபெறும் நேரமிது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து போற்றும் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முன்வருவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். செல்வ விருத்தியும் அதிகரிக்கும். மேலும் நற்பலன்களைப் பெற யோகபலம் பெற்ற நாளில் உங்கள் சுய ஜாதகத்தில் யோகம் தரும் கிரகத்திற்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

குரு, சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– தொழில் வளர்ச்சி மேலோங்கும். அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். ராஜாங்க அனுகூலம் உண்டு. குலதெய்வ வழிபாடு கூடுதல் முன்னேற்றத்தை வழங்கும். வியாபார விருத்தி உண்டு.

குருபகவான், சந்திரன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– உறவினர்களின் உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வீடு கட்டிக் குடியேறும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. வெளிநாட்டு தொடர்பு அனுகூலம் தரும். பிரயாணங்களால் நன்மை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டு. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.

குருபகவான், செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 26.6.2017 முதல் 1.9.2017 வரை):– ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். சொத்துக்கள் வாங்குவதில் மும்முரம் காட்டுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் யார் ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றிருக்கின்றதோ, அவர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது நல்லது. உத்தியோக மாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாகும். எடுத்த காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். இருவரும் சம்பாதிக்க இனிய வழிபிறக்கும். வங்கிச் சேமிப்பு வரலாறு காணாத வகையில் உயரும். மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறப்புகளும் உதவிக்கரம் நீட்டுவர். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்க குடும்ப உறுப்பினர்கள் சம்மதிப்பர். திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

குரு வக்ரம் பெறுவதோடு அதிசாரமாக துலாம் ராசிக்கு இடையில் செல்கிறார். அதிசாரமாகச் செல்லும்பொழுது, உங்கள் ராசிக்கு 4,6,8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே சந்தோஷம் கூடும். சேமிப்பு கரையும். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். உத்தியோக வாய்ப்புகள் கைகூடி வரும். குருவின் வக்ர காலத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாங்கல்–கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது உங்கள் புத்திசாலித்தனம். குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. இது போன்ற காலங் களில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரையும், திருச்செந்தூர் முருகனையும் வழிபட்டு வருவது நல்லது.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் செவ்வாய் என்பதால் செவ்வாய்க்கிழமை தோறும் ஆனைமுகப்பெருமானையும், ஆறுமுகப் பெருமானையும் வழிபட்டு வாருங் கள். பவுர்ணமி தோறும் மலைவலம் வருவதன் மூலமும் மகத்துவம் காண இயலும்.dhanusuதனுசு:

வளைந்து கொடுக்கத் தெரியாதவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி.களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புது வேலை அமையும்.

குருபகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், செயலில் வேகம் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

குருவால் ஏற்படும் பலன்கள்!

ஆடி 18–ந் தேதி (2.8.2016) அன்று உங்கள் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொடுக்கும் நாள். அன்றைய தினம் குரு உங்கள் ராசிக்கு பத்தில் வருகிறார். இது உங்களுக்கு முத்தான பலன் கிடைக்கும் பெயர்ச்சியாகும். முதல் நாளிலேயே அருகிலிருக்கும் புராதனக் கோவில், சிவாலயங்களுக்குச் சென்று தென்முகக் கடவுளை வழிபட்டு வாருங்கள்.

நவக்கிரகத்தில் உள்ள குருவையும் வழிபாடு செய்யுங்கள். நலம் தரும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுங்கள். மஞ்சள் வண்ணத்தில் வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்தால், மகத்தான வாழ்க்கை அமையும். முல்லைப் பூ மாலை அணிவித்தால் செல்லும் இடங்களில் எல்லாம் செல்வாக்கு உயரும். சுண்டல் தானம் செய்தால் சுபிட்சங்கள் அதிகரிக்கும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால் அக்கறை காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும்.

10–ல் குரு சஞ்சரிக்கும் பொழுது, பதவி மாறும் என்பார்கள்; ஒரு சிலர் பதவி பறிபோகும் என்பார்கள். ஒரு சிலர் பதவி இல்லாதவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும் என்பார்கள். ஆனால் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4–ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு 10–ல் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே மூடிக்கிடந்த தொழிலில் கூட முன்னேற்றம் கிடைக்கும். பணவரவை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, தங்கு தடைகள் அகலும். தனவரவில் இருந்த சிக்கல்கள் தீரும். மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். மக்கள் செல்வங்களால் ஏற்பட்ட மனக்கிலேசம் மாறும். அருளாளர்களின் தொடர்பும், ஆன்மிகவாதிகளின் அரவணைப்பும் உங்களுக்கு பெருவாரியான நற்பலன் களை வழங்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி இலாகா மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் வந்து சேரும். தொழில் புரிபவர்களுக்கு கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகம் கூடிவரும். தொழில் நிலையங்களை இடம் மாற்றுவது அல்லது அதனுடைய அமைப்பை மாற்றுவது நல்லது. கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவற்றை இல்லத்திலும், தொழில் நிலையத்திலும் வைத்து செய்யலாம். ஆரோக்கியம் சீராகும். நல்ல காரியங்களை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்கள் அதிகரித்தாலும், அதன் மூலம் பலன் கிடைக்கும்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குருபகவான். அவரது பார்வைதான் விருப்பங்களை நிறைவேற்றும் பார்வை. நற்பலன்களை பலமடங்கு தரும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. வாக்கு, தனம், குடும்பம், சுகம், வாகனம், தாய், மதிப்பு, மரியாதை, வியாதி, கடன், உத்தியோகம், தொழில் ஆகிய அனைத்து வழிகளிலும் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைத்து, உங் களை ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போகிறது. நல்வாக்கு சொல்பவர்களின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும். முல்லைப் பூ சூடும் குருவால் முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். கண்ணேறு படும் விதத்தில் முன்னேற்றம் வரப்போகிறது.

உத்தியோக மாற்றம் உறுதியாகும். உடலில் ஏற்பட்ட வியாதி அகலும். மங்கள நிகழ்ச்சி இல்லத்தில் நடைபெறும். அத்தனைக்கும் மேலாக இந்த குருப்பெயர்ச்சி, ஆற்றலைப் பளிச்சிட வைத்து அதிகாரத்துவ யோகத்தை கொடுக்கப்போகிறது.

இரண்டாம் இடத்தைப் பார்க்கும் குருவால் இல்லத்தில் நல்லது நடக்கும். இடம், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நான்காம் இடத்தைக் குரு பார்த்தால் தாயின் ஆதரவு கிடைக்கும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். புகழ், கீர்த்தி அதிகரிக்கும். புனிதப் பயணங்கள் வந்து சேரும். ஆறாமிடத்தைக் குரு பார்ப்பதால் பகைமாறி பாசம் கூடும். எதிரிகள் விலகுவர். நோய் பாதிப்புகளும் அகலும். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

குரு,பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– அரசியல் வானில் கொடிகட்டிப் பறக்கும் யோகம் ஒரு சிலருக்கு வந்து சேரும். தந்தை வழி ஒத்துழைப்பும், தனலாபமும் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பங்காளிப் பகை மாறும். நினைத்த காரியங்களை உடனடியாகச் செய்து முடிக்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குருபகவான், சந்திரன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. மாற்றுக் கருத்துடையோர் எண் ணிக்கை உயரும். கூட்டாளிகள் விலகுவர். பிள்ளைகளால் பிரச்சினைகளும், தொல்லைகளும் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் மேலோங்கி இருக் கும். இந்த நேரத்தில் திசாபுத்திக்கேற்ப தெய்வப் பிரார்த்தனைகளை தேர்ந் தெடுத்துச் செய்வது நல்லது.

குருபகவான், செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. சகோதர விரோதங்கள் வளரும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில், வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காண முடியும். குடும்பச் சுமை கூடும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். உடல்நலத்தோடும், உற்சாகத்தோடும் செயல்படுவீர்கள். கணவன்–மனைவிக்குள் அன்பும், பாசமும் பெருகும். குழந்தைகளால் பிரச்சினைகள் அடிக்கடி உருவாகலாம். பெற்ற குழந்தைகளை பின்னணியாக இருந்து கவனித்துக் கொள்வது நல்லது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். தாய்வழியில் வரவேண்டிய வரவுகளும் வந்து சேரும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

இந்த முறை குருபகவான் வக்ரம் பெறுவதோடு, அதிசாரமும் பெற்று துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். குரு அதிசாரம் பெறும்பொழுது உங்கள் ராசிக்கு 3,5,7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே இந்த காலத்தில் நன்மைகள் நடைபெறும். பிரச்சினைகள் ஓயும். பிள்ளைகளால் நன்மை கிட்டும். வக்ர கதியில் குரு இயங்கும் பொழுது, ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பதற்றம் கூடும். பங்கு தாரர்கள் விலகுவர். பாகப்பிரிவினைகள் இழுபறி நிலையில் இருக்கும். உத்தியோகம் தொழில், அரசியல், பொதுநலம் அனைத்திலும் உள்ள பொறுப்புகள் திடீரென மாறும். விரயங்கள் கூடும். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் நடைபெறும். இந்த காலத்தில் நினைத்தது நிறைவேற, சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவை வழிபாடு செய்யுங்கள். நாக சாந்திப் பரிகாரம் செய்வது, ஏற்ற–இறக்கமில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.


magaramமகரம்:

மனச்சாட்சிப்படி நடப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மனஇறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். அறிஞர்களின் நட்பால் மனத் தெளிவு கிடைக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடையில் மரியாதை கூடும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் லாபம் தரும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர் கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் பிறக்கும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். வழக்கு சாதகமாகும். திருமணப் பேச்சு வார்த்தை நல்லபடி முடியும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பழைய கடன் பிரச்னை தீரும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சமையல றையை நவீனமாக்குவீர்கள்.

வந்து விட்டது குருப்பெயர்ச்சி!

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படும் குருபகவான் உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். “ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்” என்பது முன்னோர் வாக்கு. எனவே இந்தக் குருப்பெயர்ச்சி இனிய குருப்பெயர்ச்சியாகவே உங்களுக்கு அமையப் போகின்றது. வந்த இடம் நல்ல இடம்! வளர்ச்சி கூடும் இடம்! சிந்தனைகள் அனைத்தையும் ஜெயிக்க வைக்கும் ஒன்பதாமிடம்.

தொட்டது துலங்கும்! வெற்றிக் கொடி நாட்டும் வாய்ப்பும் விரைவில் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உடல் நலம் சீராகும். தட்டுத் தடுமாறிய வாழ்க்கை இனி தழைத்தோங்கப் போகிறது. பூர்வீக சொத்துத் தகராறு அகலும். புதிய பாதை புலப்படும். ஆர்வத்தோடு செயல்பட்டு அருகில் இருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். அஷ்டமத்தில் குரு இருக்கும் பொழுது அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். ஆனால் இப்பொழுது 9–ம் இடம் என்னும் ஒப்பற்ற இடத்தில் குரு சஞ்சரிப்பதால் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத் தரவாதம் கிடைக்கப் போகிறது. கூட்டாளிகளை மாற்றம் செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆற்றல்மிக்கவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நேரமிது. நாடு மாற்றங்கள் உங்களுக்கு நன்மை அளிக்காது. பணிபுரியும் இடத்தில் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் வீடு கட்டலாமா இல்லை, புதிய இடம் வாங்கி வீடு கட்டலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக குரு விளங்குவதால், முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வருங்கால முன்னேற்றத்திற்கு வித்திடும் விதத்திலேயே குரு சஞ்சரிக்கிறார்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

எத்தனை கிரகங்கள் பார்த்தாலும், குருபார்க்கும் பார்வைக்கு ஈடு இணை இல்லை. உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, தனது பார்வையை 1,3,5 ஆகிய இடங்களில் பதிக்கின்றார். எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. அதற்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறப் போகிறது. இது வரை 8–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு அஷ்ட குருவாக காட்சி அளித்தார். அல்லல்கள் பலவற்றையும் கொடுத்திருப்பார்.

இனி தொட்டதெல்லாம் வெற்றிதான்! பண வரவிற்கு பஞ்சமிருக்காது. ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். ஆதாயம் தரும் காரியங்களில் அக்கறை செலுத்துவீர்கள். பார்க்கும் குருவால் உங்களுக்கு ஏராள மான பலன் கிடைக்கப் போகிறது. குரு தரும் பலனோடு, நம்பிக்கையோடு நீங்கள் செய்யும் வழிபாடும் இணைந்து நல்ல வாழ்க்கையை அமைத்து தரும்.

குருபகவான் மூன்றாமிடத்தைப் பார்ப்பதால் முன்னேற்றத் தடைகள் அகலும். உடன்பிறப்புகள் உங்களோடு இணைந்து பணிபுரிவர். தனவரவு திருப்தி தரும். சந்தோஷ சாம்ராஜ்யத்தில் இடம் பிடிப்பீர்கள்.

ஜென்ம ராசியைக் குரு பார்ப்பதால் மன நிம்மதி அதிகரிக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். இல்லத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக் கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் கிடைக்கும். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு ஏற்படும்.

5–ம் இடத்தைக் குரு பார்ப்பதால் புத்திர ஸ்தானம் பலப்படுகிறது. பிள்ளைகளின் கல்வி முயற்சியும், கல்யாண முயற்சியும் கைகூடும். எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். படிக்கும் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்ப்பர். சொத்துக்களால் லாபம் உண்டு.

குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– இழப்புகளும், விரயங்களும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் தடைகள் உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. ஏமாற்றங்களைச் சந்திக்காமல் இருக்க, கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் உங்களுக்கு கை கொடுக்கும்.

குருபகவான், சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று மகிழும் வாய்ப்பு கிட்டும். தாய்வழி ஆதரவு உண்டு. பெற்றோர் வழி ஒத்துழைப்பு கூடுதலாகவே கிடைக்கும்.

குருபகவான், செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– சொத்துக்கள் சேரும்; சொந்தங்கள் போற்றும். மற்றவர்களைப் போல வாழ்க்கை நடத்தாமல் புதுமையாக வாழ வேண்டுமென்று நினைப்பீர்கள். தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தோள் கொடுத்துதவ நண்பர்கள் மட்டுமின்றி உறவினர்களும், உடன்பிறப்புகளும் முன்வருவர்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு மகத்தான நேரம் இது. தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அன்னியோன்யம் அதிகரிக்கும். புகுந்த வீட்டில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நாகசாந்தி பரிகாரங்கள் செய்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பணிநிரந்தரம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோக உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும் கிடைக் கும். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதோடு வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய பதவிகள் கிடைத்து ஒரு சிலர் பெருமை காண்பர். ஆதியந்தப் பிரபு வழிபாடு நன்மையை வழங்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

இம்முறை குரு வக்ரம் பெறுவதோடு அதிசாரமாக துலாம் ராசிக்கும் செல்கிறார். அவ்வாறு செல்லும் பொழுது 2,4,6 ஆகிய இடங்களைப் பார்க் கிறார். எனவே பொருளாதார நிலை உயரும். குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். ஆனால் அதைச் சமாளித்து விடுவீர்கள். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். வழக்குகள் ஜெயிக்கும். குருவின் வக்ர காலத்தில் ஓரளவுதான் நன்மை கிடைக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குறுகிய காலத்தில் முன்னேற்றங்கள் வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். வாங்கல், கொடுக்கல்களில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். குருவை இக்காலத்தில் வழிபாடு செய்வதன் மூலமும், யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலமும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலமும் சந்தோஷத்தை தக்கவைத்துக் கொள்ள இயலும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் சனி என்பதால் சனிக் கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும். கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோவில் வழிபாடு ஒப்பற்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.


kumbamகும்பம்:

மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத் தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். வழக்குகளில் பிற்போக்கான நிலையே காணப்படும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், பிரச்னைகள் வெகுவாகக் குறையும். வெளியூர்ப் பயணங்களால் நிம்மதி கிட்டும். வேற்று மொழியினரின் ஆதரவு கிட்டும். கடந்த காலத்தில் உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்ப்புகள் குறையும். முடிக்க முடியுமா என்று நினைத்த பல காரியங்கள் இப்போது முடியும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அஷ்டமத்திற்கு வருகிறார் குருபகவான்!

ஆடி 18–ந் தேதி (2.8.2016) அன்று 8–ம் இடத்திற்கு குரு வருகிறார். வரும் குருவால் வளர்ச்சி ஏற்படுமா, தளர்ச்சி ஏற்படுமா?, வாய்ப்புகளை தட்டி விடுமா?, இல்லை வரவழைத்துக் கொடுக்குமா? என்பதை பற்றிய சிந்தனையெல்லாம் இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே உங்கள் இதயத்தில் இடம் பிடித்திருக்கும்.

என்னதான் குரு நல்லவராக இருந்தாலும் 8–ல் வரும் பொழுது, ஆரோக்கியத் தொல்லைகளை வழங்குவார். எனவே, சீரான உடல் அமைய மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக் கொண்டு குணமோடு செயல்படுவதன் மூலமும், குருவைப் பார்த்து தரிசிப்பதன் மூலமும் ஆபத்து அகலும். அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும். விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டால் விரயங்களிலிருந்து தப்பிக்கலாம். பலவித மாற்றங்கள் ஏற்படலாம்.

குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கலாம். வம்பு, வழக்குகள் வாசல் தேடி வரக்கூடும். நம்பிக்கைக்குரியவர்கள் உங்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம். சிந்தனையில் தெளிவு ஏற்படாது. சில சமயம் இனம்புரியாத கவலை இடம்பிடிக்கும். இருப்பினும், நீங்கள் செய்த பெரிய பாக்கியம், குரு உங்கள் ராசிக்கு 2–ம் இடத்தையும், 4–ம் இடத்தையும், 12–ம் இடத்தையும் பார்ப்பது தான். மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும். கதிரவனைக் கண்ட பனித்துளிபோல் கவலைகள் அகல இறைவழிபாடும், இதயத்தில் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும் கைகொடுக்கும்.

விரயங்கள் கூடுதலாக இருக்கும். விழிப்புணர்ச்சி தேவை. தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லும். குடும்பச் சுமை அதிகரிக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சேமிப்புகள் கரையலாம். அருள்தரும் குருவைக் கவசம் பாடி ஆராதனை செய்து வழிபட்டால் பொருள் வளம் சிறப்பாக இருக்கும். பொன்னான வாழ்வும் அமையும்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குருபகவான். அவர் 8–ம் இடத்தில் இப்பொழுது சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த ஸ்தானங்களெல்லாம் புனிதமடைகின்றன. எனவே அவற்றிற்குரிய ஆதிபத்யங்களெல்லாம் சிறப்பாக நடைபெறப் போகிறது.

வாக்கு, தனம், குடும்பம் என்னும் இரண்டாமிடத்தை பார்ப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வைப்பார். குடும்பச் சுமை கூடுதலாக இருந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகள் ஒருசிலர் விலகினாலும், புதிய கூட்டாளிகள் வந்திணைவர். வீடுவாங்க, விற்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக இடத்தை விட்டுவிட்டு புதிய இடத்தில் வீடு கட்டலாமா? என்று சிந்திப்பீர்கள். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். கோவில் கும்பாபிஷேகம் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். வாகன யோகம் வந்து சேரும். பயணங்கள் பலன் தரும். வெளிநாட்டு தகவல் அனுகூலமாக அமையும்.

அயன சயன ஸ்தானம் எனப்படும் 12–ம் இடத்தைக் குரு பார்ப்பதால் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். மனஅழுத்தம் மாறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். திடீர் பயணங்கள் லாபம் தரும்.

குருபகவான், சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– கூடுதல் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. குடும்பச் சுமை கூடுதலாக இருக்கும். வரவு வந்தவுடன் செலவாகலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இடமாற்றங்கள் வரப்போவது போல் தோன்றி கைநழுவிச் செல்லலாம்.

குருபகவான், சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும். திடீர் உத்தியோக வாய்ப்புகள் கிடைக்கும். மன அமைதிக்காக குடும்பத்துடன் கோவில் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

குருபகவான், செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.7.2017 முதல் 1.9.2017 வரை):– பொருளாதார வசதி பெருகும். புதிய சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய தடை அகலும். ஜாமீன் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். உற்சாகத்தோடு செயல்படும் நேரம் இது. உடனுக்குடன் பல நல்ல முடிவுகளை எடுத்துக் காரியங்களை நடத்திக் காட்டுவீர்கள்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் குடும்பச் சுமை கூடும். கொடுக்கல்– வாங்கல்களில் பற்றாக்குறை அதிகரிக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட்டாலும், மற்ற குடும்ப உறுப்பினர்களால் சச்சரவுகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக வக்ர குருவின் காலத்தில் பிள்ளைகளால் பெரும் விரயம் ஏற்படலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றமும், பதவி உயர்வும் வந்து சேரலாம். புகுந்த வீட்டை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். ராகு–கேதுக்களை முறையாக வழிபட்டு சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது. பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

இம்முறை குரு வக்ரம் பெறுவதோடு அதிசாரமாகவும் துலாம் ராசிக்கு செல்கிறார். குரு அதிசாரத்தில் இருக்கும் பொழுது அற்புதமான பலன்கள் வந்து சேரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். முன்னேற்றம் வேகம் எடுக்கும். அதே நேரத்தில் குருவின் வக்ர காலத்தில் கூடுதல் விரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்– வாங்கல்களில் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கவலையை உருவாக்கும் நேரம் இது. வருத்தமான சம்பவங்களும் நடக்கலாம். வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் தாமதமும் ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் குரு வழிபாட்டை முழுமையாக மேற்கொள்வது நல்லது.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் சனி என்பதால் சனிக் கிழமை தோறும் விரதமிருந்து வடக்கு நோக்கிய விநாயகரையும், வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரையும் வழிபட்டு வருவது நல்லது.


meenamமீனம்:

இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப் பதால், தன்னம்பிக்கை கூடும்.

தடைப்பட்ட திருமணம் கூடிவரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால், நினைத்த காரியம் சுலபமாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்கியம் சீராகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.

வந்து விட்டது குருப்பெயர்ச்சி!

ஆடி 18 முதல் (2.8.2016) தேடி வரப்போகிறது யோகம்!. கூடி வரப் போகின்றது லாபம்! நாடிவரப்போகின்றது நல்லவர்களின் நட்பு! ஓடி ஒளியப் போகின்றது துரத்தி வந்த துயரங்கள். சப்தம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கப் போகும் குரு அற்புதமான பலன்களை அள்ளி வழங்கும் என்பதால் தாமதங்கள் அகலும். நாமகளும், பூமகளும் நல்லருள் கொடுக்க உங்கள் இல்லம் தேடி வருவர்.

பெயர்ச்சியாகும் குரு 7–ம் இடத்தில் சஞ்சரிப்பதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். களத்திர ஸ்தானம் புனிதமடைவதால் இதுவரை வந்த வரன் களைவிட இனிவரும் வரன்கள் சிறப்பானதாகவும், மனதிற்கு பிடித்தமாகவும் இருக்கும். ஒருசிலருக்கு விட்டுப்போன வரன்களே மீண்டும் வரலாம்.

இதுவரை உங்களை உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். பகை மாறி பாசம் காட்டுவர். தங்க நகைகள் வாங்க வில்லையே, நாளும் சாப்பாட்டு செலவிலேயே சகல பணமும் செலவாகின்றதே என்று அவதிப்பட்டவர் களுக்கு, திருப்திகரமாக வருமானம் அமையப் போகிறது.

பூமி வாங்குவீர்கள், புதிய வீடு வாங்குவீர்கள். பொன், பொருள் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை விருப்பம் போல் வாங்கிச் சேமிப்பீர்கள். கடல் தாண்டும் முயற்சி கைகூடும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். மருத்துவம் பார்த்தும் சரியில்லாமல் இருந்த உடல் நலம், இப்போது மருத்துவம் இன்றி, உணவு கட்டுப்பாட்டிலேயே சீராகும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து சேருவர். புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடி வரலாம். விலகி இருந்தவர்கள் விவகாரம் தீர்ந்து, இனி ஒன்றாக வந்திணையும் வாய்ப்பு உண்டு. இடையூறுகளைத் தகர்த்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் இந்த குருப்பெயர்ச்சி அமைந்துள்ளது.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகங்களில் நல்ல கிரகம் என்றும், பார்வையால் பலன்களை அள்ளி வழங்கும் கிரகம் என்றும் சொல்லப்படும் குருபகவான், ஏழாமிடத்தில் இருந்துகொண்டு 1,3,11 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். எனவே உங்கள் ராசி மற்றும் சகோதர, சகாய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகிய மூன்று இடங்களும் புனிதமடைகிறது. குருவின் பார்வை பதியும் இடங்களெல்லாம் நன்மையை வழங்கும். உள்ளம் மகிழும் சம்பவம் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கும். அச்சம் இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பது, குருவின் பார்வை ஒன்றுதான்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட கவலைகள் விலகும். இழந்தவைகளை மீட்டுக் கொள்வீர்கள். உடன்பிறப்புகள் முதல் உடன் இருப்பவர்கள் வரை உங்களுக்கு ஆதரவு கொடுப்பர். மூடிக் கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்திப் பார்ப்பீர்கள். கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, தொழில் செய்ய முன்வருவர். திசாபுத்தி பலமிழந்தவர்கள் உத்தியோகத்திலேயே நீடித்தாலும் கூட, குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கூட்டுத் தொழில் செய்ய முன்வருவர். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும்.

குருபகவான், சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏற நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். தடைகள் அகலும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய பொறுப்புகளும், அதிகாரத்துவ யோகமும் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

குரு பகவான், சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிதி நிலை உயரும். நிர்வாகத் திறன் கூடும். திட்டமிட்டுச் சில காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத் தகராறுகள் மாறும். பூர்வீக சொத்துக்களில்இருந்த பிரச்சினைகள் விலகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

குருபகவான், செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– வருமானம் இருமடங்காக உயரும். வாங்கிப் போட்ட சொத்துக்களால் லாபம் கிடைக்கும். சகோதரர்கள் இணைந்து செயல்பட்டு இதயம் மகிழும் விதம் நடந்து கொள்வர். தேக ஆரோக் கியம் சீராகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வழக்குகள் சாதகமாகும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு மிகச் சிறப்பான நேரம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்த தம்பதியர்களுக்கு அது கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கிச் சேர்க்க முற்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். தள்ளிப் போன காரியங்கள் தானாக நடைபெறும். தைரியமாக முடிவெடுத்து தடைகளை அகற்றிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பெயரிலேயே வீடு வாங்கச் சம்மதிப்பர். புகுந்த வீட்டில் புகழ்கொடி நாட்டுவீர்கள். பிறந்த வீட்டிற்குப் பெருமை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், எதிர்பார்த்த இலாகா மாற்றங்களும் வந்து சேரும். அரசியலில் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாழக்கிழமை குருபகவானை வழிபடுவதோடு, சுய ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடுசெய்யுங்கள்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலம்!

இம்முறை குரு வக்ரம் பெறுவதோடு அதிசாரமாகவும் துலாம் ராசிக்குச் செல்கிறார். இந்த அதிசார குரு உங்களுக்கு அஷ்டமத்தில் வருவதால் திடீர் மாற்றங்கள் உருவாகும். திடீர் இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம். குடும்பச்சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும். குருவின் வக்ர காலத்தில் எதையும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாது. திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லலாம். பணியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். வீண் விரயங்களால் மனக்குழப்பம் ஏற்படும். தொழிலுக்கு போதுமான மூலதனம் இல்லையே என்று கவலைப்படுவீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

உங்கள் ராசிநாதன் குரு என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, பவுர்ணமி தோறும் மலைவலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here