Home Tamil Sports News இந்திய-ஆஸி. ஒருநாள் தொடர்.. நாளை சென்னையில்..

இந்திய-ஆஸி. ஒருநாள் தொடர்.. நாளை சென்னையில்..

84
SHARE

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிறு, 17-9-17) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.

தோனிக்குப் பிடித்த மைதானம், பிடித்த ரசிகர்கள். ரவிசாஸ்திரி, ‘தோனியிடமிருந்து பேட்டிங்கில் சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார், இதனால் இந்த ஹை-வோல்டேஜ் ஒருநாள் தொடருக்கு எதிர்பார்ப்புகள் வலுவாக எழுந்துள்ளது.

இந்திய அணி வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெளிநாடு ஒருநாள் தொடர்கள் கொஞ்சம் சரியில்லாமல்தான் அமைந்து வருகிறது. முடிவுற்ற, தங்களது கடைசி 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி தழுவியுள்ளது. 2016-ல் அயர்லாந்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

ஆனால் எந்த ஒரு வடிவமாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் போர்க்குணத்தை நாம் குறைவாக எடைபோட முடியாது, களத்தில் வார்த்தைப் பரிமாற்றம், ஆக்ரோஷம் ஆகியவை இம்முறை இரு அணிகளுக்கும் சமபலமாகவே இருக்கும்.

மாறாக இந்திய அணி தன் கடைசி 15 ஒருநாள் போட்டிகளில் 3-ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளது, அனைத்தும் வெளிநாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் குறிப்பிடுவது போல் இந்திய அணி நிறைய ஒருநாள் போட்டிகளில் சமீபகாலமாக ஆடிவருகிறது, இது இந்திய அணிக்குப் பலம் சேர்க்கும்.

அதுவும் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் திறமைகள் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் என்று தெரிந்தும், அல்லது ஆஸ்திரேலியா பயப்படும் என்று தெரிந்தும் அவர்களுக்கு பதிலாக அனுபவம் அதிகம் இல்லாத சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்களை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர், இது ஒரு மிகத் தைரியமான முடிவாகும். அதே போல் முடிவு ஓவர்களில் பும்ரா சாதுரியமாக வீசுகிறார், வேறு ஒரு உயரத்துக்கு வந்துள்ள புவனேஷ் குமார் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு தலைவலியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்ற அளவில் பேட்டிங் கொஞ்சம் பலவீனமாக இந்திய அணிக்கு உள்ளது. ஷிகர் தவண் விலகியது புதிய பிரச்சியை உருவாக்கியுள்ளது, ரஹானே, ரோஹித்சர்மாவை தொடக்கத்தில் இறக்குவதா அல்லது ராகுலை அனுப்புவதா என்ற பிரச்சினையே அது, குறிப்பாக மிடில் ஆர்டரில் ராகுல் சமீபத்தில் இலங்கையில் சொதப்பி 28 ரன்களையே எடுத்துள்ளார். மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், பாண்டியா, தோனி கையில் நடுவரிசை உள்ளது. இதில் ரன்குவிப்பு போட்டிகளில் தோனியின் பினிஷிங் திறமைகள் சமீபமாக மங்கி வருகிறது. எனவே பேட்டிங் கொஞ்சம் பலவீனம்தான், நம்பிக்கையாகத் தெரிவது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த ரோஹித் சர்மாவும் கோலியின் பேட்டிங்கும்தான். மீதி பேர்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்கா கடந்த ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்திய போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அருமையாக ஒரு களவியூகத்தை அமைத்து கொடுத்து நெஞ்சுயர பந்துகளை வீசிப் படுத்தியது, ஆஸ்திரேலியாவும் அதே உத்தியைக் கையாள வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் அபாய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோரே பின்னால் மேக்ஸ்வெல், பாக்னர் அதிரடி தெரிவுகள் உள்ளன. மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை அதிகம் இந்தியப் பந்து வீச்சு பார்த்ததில்லை. பந்து வீச்சில் கமின்ஸ், நேதன் கூல்ட்டர் நைல் ஆகியோருடன் சிக்கனம் காட்டும் பாக்னர் உள்ளார், லெக் ஸ்பின் தெரிவாக ஆடம் ஸாம்ப்பா உள்ளார், இவர்தான் தோனிக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வீசி அவரது ஸ்ட்ரோக்குகளை முடக்கியவர்களில் ஒருவர்.

பிட்ச்:

பிட்சைப் பொருத்தவரையில் அதிக ரன்கள் எடுக்கும் பிட்சாகவே இருக்கும், ஞாயிறு மதியம் இடியுடன் கூடிய மழை என்று வானிலை கூறப்பட்டுள்ளது. 300+ ஸ்கோர் என்பது இப்போது சகஜமானது, எனவே விறுவிறுப்பான ஒரு தொடர் நாளை தொடங்குகிறது,

ஜனவரி 2013-க்குப் பிறகு இந்திய-ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டிகளில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 321. ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே காலக்கட்டத்தில் 13 போட்டிகளில் 1104 ரன்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 102, சராசரி 110.4.

பேட்டிங்கில் இந்தியாவின் டாப் 3 வீரர்களும் ஆஸி.யின் டாப் 3 வீர்ர்களும் அதிக பங்களிப்பு செய்து வருகின்றனர், கபில்தேவ் ஒருமுறை கூறியது போல் 15 ஓவர்களில் எந்த அணி 90-100 ரன்களை எடுத்தாலும் கவலையில்லை இந்த டாப் 3-யை பெவிலியன் அனுப்பிவிட்டால் அந்த அணி தடுமாறும்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here