Home Tamil Movie Reviews இஞ்சி இடுப்பழகி – விமர்சனம்

இஞ்சி இடுப்பழகி – விமர்சனம்

837
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating
2.5
இயக்கம்: பிரசாத் பொட்டலேரி
ஒளிப்பதிவு: நீரவ்ஷா
படத்தொகுப்பு: ப்ரவின் புடி
இசை: எம்.எம்.கீரவாணி
தயாரிப்பு: பிரகாஷ் கோவலமுடி
நடிகர்கள்: ஆர்யா, அனுஷ்கா, ப்ப்ர்வசி, சோனல் சௌகான், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம், மாஷ்டர் பரத்

உடல் பருமனாக இருக்கும் அனுஷ்காவிற்கு பலமுறை மாப்பிள்ளை பார்த்தும் கல்யாணம் தள்ளிக்கொண்டே போவதால் மனமுடைந்து கவலை கொள்கிறார் அவரது அம்மா ஊர்வசி. இந்நிலையில் அனுஷ்காவைப் பெண் பார்க்க வருகிறார் ஆர்யா. இருவருக்குமே அந்த கல்யாணத்தில் இஷ்டமில்லாததால் பரஸ்பரம் பேசிப் பிரிகிறார்கள். அதன்பின்பு ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பு மலர்கிறது. நட்பு காதலாகும் நேரத்தில், ஆர்யா இன்னொரு பெண்ணை விரும்புவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மேலும் மனமுடைகிறார் அனுஷ்கா.

Inji Iduppazhagi Movie Photos 22

உடல் பருமனாக இருப்பதனால் தான் ஆர்யாவும் தன்னை நிராகரித்துவிட்டார் என கவலைகொள்ளும் அனுஷ்கா உடனடியாக உடம்பைக் குறைப்பதற்காக, பிரகாஷ் ராஜின் ‘சைஸ் ஜீரோ’ என்ற உடம்பு குறைக்கும் பயிற்சி நிறுவனத்தில் சேருகிறார். அனுஷ்கா ‘சைஸ் ஜீரோ’வில் சேரும் அதேநேரம் அவரது தோழி ஒருவருக்கு கிட்னி பெயிலியராகிறது. அதற்குக் காரணம் ‘சைஸ் ஜீரோ’வில் அந்த தோழி உட்கொண்ட பானம் ஒன்றுதான் என டாக்டர் சொன்னதால் அதிர்ச்சியடைகிறார் அனுஷ்கா மற்றும் அவரது தோழி.

இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைக்கும் அனுஷ்கா, ஆர்யாவுடன் சேர்ந்துகொண்டு ‘சைஸ் ஜீரோ’ நிறுவனத்தின் போலித்தனத்தை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முயலுகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரகாஷ் ராஜும் சில காரியங்களில் ஈடுபடுகிறார். இந்த போராட்டத்தின் முடிவில் ஜெயித்தது யார்? ‘குண்டு’ அனுஷ்காவின் காதல் என்னவானது?… என்பதே ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் மீதிக்கதை.

Inji Iduppazhagi Movie Photos 8

அதன் பிறகு குண்டாக இருக்கும் அனுஷ்கா, வீறுகொண்டு எழுந்து, கடுமையான பயற்சிகள் செய்து, உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார் என நாம் நினைத்ததற்கு மாறாக வேறொரு ஃபார்முலாவில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் கோவேலமுடி. அதற்காக ஒரு சபாஷ் போடலாம். ஆனால் இந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர்த்து மற்றவை அனைத்துமே நாம் பார்த்து சலித்துப்போன விஷயங்கள்தான். அதிலும் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் இரண்டு முக்கோண காதல்களை வேறு திரைக்கதைக்குள் நுழைத்து குழப்பியடித்திருக்கிறார்கள்.

நம்மூர் ரசிகர்களுக்கு இதுபோதும் என முடிவு செய்துவிட்டார்களோ என்னவோ, அங்கே இங்கே சுற்றிவிட்டு கடைசியில் நாயகனையும், நாயகியையும் ஒன்றுசேர்த்துவிட்டு ‘சுபம்’ போட்டுவிட்டார்கள்.

Inji Iduppazhagi Movie Photos 13

சொல்ல வந்த கதையை காமெடியாகவும் சொல்லாமல், சீரியஸாகவும் சொல்லாமல் ‘இரண்டும்கெட்டானாக’ திரைக்கதை அமைத்திருப்பதாலோ என்னவோ நம்மால் கதையோடு ஒன்றி பயணிக்க முடியவில்லை. க்யூட் அனுஷ்காவையும், அவரது அழகாகக் காட்டிய நீரவ் ஷாவின் ஒளிப்பதிவையும் தவிர்த்து இப்படத்தில் பெரிதாக பாராட்ட ஒன்றும் இல்லை.

வலுவில்லாத திரைக்கதையால் அனுஷ்காவின் உழைப்பு ‘விழக்கிறைத்த நீராக’ வீணடிக்கப்படிருந்தாலும் அவரின் நடிப்பையும், அர்ப்பணிப்பையும் நிச்சயம் பாராட்டலாம். சின்னச் சின்ன க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் படம் முழுக்க ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் அனுஷ்கா. ஆர்யாவுக்கு இப்படத்தில் இரண்டாவது இடம்தான். ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் சரியாகப் பொருந்தியிருக்கிறார் ஆர்யா.

Inji Iduppazhagi Movie Photos 33

சந்திரபாபு ஸ்டைல் மீசையில் வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ் ஏனோ படத்திலிருந்து தனித்து நிற்கிறார். அம்மா கேரக்டரில் ஊர்வசி என்றால் அவரின் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

மற்றபடி ஆர்யாவின் காதலியாக வரும் சோனல் சௌகான் தனது ‘சைஸ் ஜீரோ’ உடம்பால் ரசிகர்களை வசீகரித்திருக்கிறார். நடிப்பதற்கு பெரிய வேலை அவருக்கு கொடுக்கப்படவில்லை. இது தவிர பிவிபி சினிமாஸிற்காக நாகார்ஜுனா, ராணா, ஜீவா, பாபி சிம்ஹா, தமன்னா, காஜல், லக்ஷ்மி மஞ்சு, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே சிறப்புத் தோற்றத்தில் தலைகாட்டியிருப்பது அந்த காட்சிக்கு அழகு சேர்த்திருக்கிறது.

அனுஷ்காவின் இஞ்சி இடுப்பு நடிப்புக்காக படத்தை பார்க்கலாம்.