Home Tamil Movie Reviews மெய்மறந்தேன் பாராயோ – விமர்சனம்

மெய்மறந்தேன் பாராயோ – விமர்சனம்

1278
இயக்குனர் : சூரஜ் பர்ஷாத்யா
நடிப்பு : சல்மான் கான், சோனம் கபூர்
தயாரிப்பு : பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ
இசை : ஹிமேஸ் ரேஸ்மியா
வெளியிடப்பட்ட நாள் : 12 நவம்பர் 2015

சல்மான் கான் மிகப்பெரிய அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்துக்கு பிறந்தவர்தான் சல்மான்கான். இரண்டாவது தாரத்துக்கு பிறந்தவர் நீல் நிதின் முகேஷ். இரண்டு குடும்பங்களும் ஒரே அரண்மனையில் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் எப்போதும் சந்தோஷமாக, சகோதர பாசத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அரசர் ஒரு கண்ணாடி மாளிகையை உருவாக்குகிறார்.

ஒருகட்டத்தில் அரசரின் மூத்த மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, மகன் மற்றும் மகளோடு வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் இரண்டாவது மனைவி. அதன்பிறகு அரசரும் இறந்துபோகிறார். வளர்ந்து பெரியவனாகும் சல்மான்கானுக்கு மூடி சூட்ட முடிவெடுக்கின்றனர். சல்மான் கான் தனது அப்பாவின் இரண்டாவது தாரத்துக்கு பிறந்த நீல் நிதின் முகேஷ் மற்றும் அவரது தங்கையை தன்னுடன் மீண்டும் சேர்த்துக் கொள்கிறார்.

இந்நிலையில், சல்மான் கானைப் பற்றி நீல் நிதின் முகேஷிடம் தவறான கருத்துக்களை கூறி, சல்மான் கானை பழிவாங்க துடிக்கிறது ஒரு கும்பல். அவர்கள் சொல் கேட்டு நீல் நிதின் முகேஷும் சல்மானை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார். ஒருகட்டத்தில் அவர் மீது தாக்குதல் நடத்துகிறார். இந்த தாக்குதலில் எதிர்பாராதவிதமாக தப்பிக்கிறார் சல்மான். அவரை ரகசியமாக வைத்து சிகிச்சை கொடுத்து வருகிறார் திவான் அனுபம் கெர்.

mei 2

இந்நிலையில், சல்மான் கானைப் போன்றே உருவ ஒற்றுமை கொண்ட நாடக நடிகர் ஒருவர் அனுபம் கெருக்கு அறிமுகமாகிறார். அவரை ராஜா வேடத்தில் நடிக்க வைத்து, ரகசியங்களை தெரிந்து கொள்ள நினைக்கிறார் அனுபம் கெர்.

அதன்படி, அவரை அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சென்ற சல்மான் கானுக்கு அந்த குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தெரிய வருகிறது.

அந்த பிரச்சினைகளையெல்லாம் களைந்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவர் எப்படி ஒன்று சேர்த்தார் என்பதே மீதிக்கதை.

சல்மான் கான் அரச குடும்பத்து உடையில் அழகாக பளிச்சிடுகிறார். அதேபோல், நாடக நடிகராகவும் வரும் காட்சிகளில் கலகலப்பாக நடித்து அசத்தல் பெறுகிறார்.

தம்பி, தங்கைகள் மீது பாசம் காட்டும் காட்சியில் அண்ணனாக மனதில் பதிகிறார். நாயகி சோனம் கபூர், ஆரம்பத்தில் சல்மான் கானை வெறுப்பதும், பின்னர் அவர் மீது காதல் கொள்ளும் காட்சிகளிலும் அழகாக நடித்திருக்கிறார்.

நீல் நிதின் முகேஷுக்கு ஹீரோவுக்கு இணையான வேடம். அதை கச்சிதமாக செய்திருக்கிறார். திவானாக வரும் அனுபம் கெருக்கும், சல்மானுக்கும் உண்டான நட்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஒரு அழகான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார் சூரஜ் பர்ஷாத்யா. அரச குடும்பத்து கதையில் அழகான அண்ணன், தம்பி, தங்கை பாசத்தை சொல்லி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றும் கலர்புல்லாக இருக்கின்றன.

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஹிமேஸ் ரேஸ்மியாவின் பின்னணி இசை. அதேபோல் பாடல்களும் ரசிக்கும்படி இருக்கின்றன. மணிகண்டனின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘மெய்மறந்தேன் பாராயோ’ மெய்சிலிர்க்கிறது.