Home Astrology Monthly Rasi Palan தமிழ் மாத ராசிபலன் – 16.12.2016 முதல் 13.01.2017 வரை

தமிழ் மாத ராசிபலன் – 16.12.2016 முதல் 13.01.2017 வரை

211

 mesahamமேசம்: குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அறிவுசார்ந்த கருத்துகள் அதிகமாக வெளிப்படும். உங்களின் புத்திகூர்மையை அடுத்தவர் உணரும் விதமாக பேச்சுகள் அமையும். பொருளாதார சூழலில் சீரான முன்னேற்றம் கண்டு வருவீர்கள்.

உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்படும் காரியங்களில் வெற்றி உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்களினால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றத்தினைக் காணலாம். வண்டி, வாகனங்களை வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தாலும் அவர்களின் செயல்வேகம் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் இருக்கும்.

வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. பிதுரார்ஜித சொத்துகளின் மூலம் ஆதாயம் கிட்டும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. கலைத்துறையினர் மாதத்தின் முற்பாதியில் உழைத்தும், பிற்பாதியில் அதற்குரிய தனலாபத்தினையும் காண்பார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

திட்டமிட்டு செய்த காரியங்களில் வெற்றி காணும் மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு உற்றார், உறவினர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும் மாதமாகும். உடனுக்குடன் பணத்தேவைகள் பூர்த்தியாகும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.  போதுமான பொருளாதார வசதி வந்து சேரும். இந்த நேரத்தில் வீட்டைப் பழுது பார்க்கும் முயற்சியிலும் அல்லது விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள். புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையும். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 17, 18, 29, 30 ஜனவரி: 3, 4, 9, 10, 11, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 26, 27.

பரிகாரம்: தினமும் காலையில் பகவத்கீதையை பொருளுணர்ந்து படித்து வாருங்கள்.

 


rishabamரிஷபம்: குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி, மாறி இடம்பிடிக்கும். பிரச்னைக்குரிய நேரத்தில் அதிகம் பேசாது அமைதி காத்து வருவதால் உங்கள் தரப்பு நியாயங்கள் வெளிப்படாமல் போகலாம். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும் வகையில் அமையும். மாதத்தின் முற்பாதியில் அநாவசியமான பிரயாணங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கலாம்.

மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றம் கண்டு வரும். உறவினர்களோடு வீண் விவாதத்தினால் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பிள்ளைகளால் சற்று கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரும். உறவினர்களுக்கு கடன் விவகாரங்களில் துணை நிற்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் மாதத்தின் பிற்பாதியில் நீங்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் நீங்கள் பணப்பிரச்னையால் அவதிப்படும் வாய்ப்பு உருவாகும். ஆன்மிகப் பிரயாணங்கள், பெரிய மனிதர்களுடனான சந்திப்புகள் மன நிம்மதியைத் தரும்.

டிசம்பர் 30ம் தேதி முதல் தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் போட்டியான சூழலைச் சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி காண்பார்கள். கலைத்துறையினர் தொழில்முறையில் ஓய்வின்றி செயல்பட வேண்டியிருக்கும். முன்னேற்றம் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

மனக்குறை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும் மாதம் இது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். இனத்தார் பகை மாறும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். தாய்வழி ஆதரவு தனவரவோடு கூடியதாக இருக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கணவர் உங்கள் குணம் அறிந்து நடந்து கொள்வார். பிள்ளைகளால் உங்களுக்கு உதிரி வருமானம் கிடைக் கும். அவர்களின் கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முடியக்கூடிய சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் மட்டுமல்ல, ஊதிய உயர்வும் கிடைக்கும். தங்கம், வெள்ளி வாங்குவதில் ஆர்வம் கூடும். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 19,20,31 ஜனவரி: 1,5,6,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 28, 29, 30.

பரிகாரம்: மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலையில் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடி அம்பிகையை வணங்கி வரவும்.


mithunamமிதுனம்: சரியான மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் உதவியோடு வெற்றி கண்டு வருவீர்கள். பண வரவு ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் செலவுகள் காத்து நிற்கும். டிசம்பர் மாதத்தின் இறுதியில் எதிர்பாராத செலவுகளால் சற்று சிரமப்பட நேரிடலாம். கையிருப்பு கரையும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்களினால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும்.

தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு துணை நிற்பதால் எந்த ஒரு சூழலையும் மிகுதியான மன உறுதியோடு சமாளித்து வருவீர்கள். மாணவர்கள் கூட்டுப்பயிற்சியின் மூலம் தங்கள் கல்வி நிலையில் உயர்வினைக் காண்பார்கள். உறவினர்களின் வருகை குடும்பத்தில் சலசலப்பைத் தோற்றுவிக்கும்.

மாதத்தின் பிற்பாதியில் வண்டி, வாகனங்களால் செலவினங்கள் உண்டாகக்கூடும். பிரயாணத்தின் போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உண்டென்பதால் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. கடன்பிரச்னைகள் கட்டுக்குள் இருந்து வரும். மறைமுக எதிரிகளால் ஒரு சில தொல்லைகளை எதிர்கொள்ள
வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் துணை நிற்பார்.

விருந்து, கேளிக்கை, கொண்டாட்டங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் பங்கேற்க வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் தொழில்முறையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவார்கள். கலைத்துறையினர் டிசம்பர் 30ம் தேதிக்கு மேல் புதிய வாய்ப்புகள் கிடைக்கக் காண்பர். சராசரி பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் மாதம் இது. வளர்ச்சி எதிர்பார்த்தபடியே வந்து சேரும். எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் இல்லத்தில் வந்துசேரப் போகிறது. உங்கள் பெயரில் அசையா சொத்துகளை வாங்க அடிபோடுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட வாக்குவாதங்கள் மாறும். வாரிசுகளால் பெருமை உண்டு. அரசியலில் பிரவேசிக்க ஆசைப்படுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். புகுந்த வீட்டில் உங்கள் புகழ் பரவி தனி முத்திரை பதிப்பீர்கள். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 18,19,22,23 ஜனவரி: 2,3,7,8,12,13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்பச்சை.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 31, ஜனவரி 1.

பரிகாரம்: நடராஜப்பெருமானை வணங்கி வருவதோடு, ஆருத்ரா தரிசனத் திருநாளில் சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும். 


kadakamகடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். கடன் பிரச்னைகள் சற்று தலைதூக்கக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

உடன்பிறந்தோரால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதடைந்து சிரமம் தரும். முன்பின் தெரியாத நபர்களிடம் அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது அவசியம். மருத்துவச் செலவுகள் உண்டாகும் நேரம் என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றத்தினைக் காணும். உறவினர்களின் வருகை கலகலப்பைத் தரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள்.

மாதத்தின் இறுதியில் எதிர்பாராத பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். கலைத்துறையினர் மிகவும் நம்பியிருந்த நபர் ஒருவரால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்வோருக்கு ஏற்றம் உண்டாகும். அன்பான அணுகுமுறையால் வெற்றி காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய மாதம் இது. கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மனக்கசப்பை மாற்றிக் கொள்ளலாம். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களை உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பர். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஊர் மாற்றங்கள் உருவாகலாம். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 19,20,23,24 ஜனவரி: 5,6,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 2, 3.

பரிகாரம்: தினமும் காலையில் திருவாசகப் பாடல்களை பாடி இறைவனை வழிபட்டு வரவும். 


simamசிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். டிசம்பர் மாதத்தின் பிற்பாதியில் எதிர்பாராத வகையில் தனலாபம் கிட்டும். சேமிப்புகள் உயர்வதற்கான வாய்ப்பு உண்டு. நெடு நாட்களாக இழுபறியில் இருந்து வரும் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் பயனுள்ளதாக அமையும். மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றம் காணும்.

புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு அதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தொலைதூரப் பிரயாணத்தின்போது கௌரவம் மிக்க மனிதர் ஒருவரது தொடர்பு கிட்டும். பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்குத் துணை நிற்க வேண்டியிருக்கும். நண்பர்களால் கூடுதல் செலவினத்தினை சந்திக்க நேரலாம்.

பொதுக்காரியங்களில் முன்நின்று பணியாற்றி சிறப்பான கௌரவத்தினை அடைவீர்கள். தொழில்முறையில் மாதத்தின் பிற்பாதியில் அற்புதமான முன்னேற்றத்தினைக் காண உள்ளீர்கள். வியாபாரிகள் ஜனவரி மாதம் முதல் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். அரசுத்துறையைச் சார்ந்தவர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் உயரதிகாரிகளின் நன்மதிப்பினைப் பெறுவார்கள். கலைத்துறையினர் டிசம்பர் 30ம் தேதி முதல் திருப்புமுனையைக் காண்பர். நற்பலனை அனுபவிக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காரியத் தடைகள் அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சுபச் செலவு உண்டு. குடும்ப ஒற்றுமை கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம், குழப்பங்களில் இருந்து விடுபட இயலும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தாய்வழி ஆதரவோடு பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது துரிதமாக நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு, சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 15,21,22,25,26 ஜனவரி:7,8,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 4, 5.

பரிகாரம்: நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை சதா ஜபித்து வாருங்கள்.


kanniகன்னி: குடும்பத்தில் சலசலப்பான சூழ்நிலை நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் உங்களையும் அறியாமல் அடுத்தவர் மனம் புண்படும்படியான கருத்துகள் வெளிப்படலாம். எந்த ஒரு காரியத்திற்கும் இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செயலில் இறங்க வேண்டியது அவசியமாகிறது. மிகவும் நம்பியிருந்த நபர் ஒருவர் உங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். மாதத்தின் இறுதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.

உறவினர்களால் ஒரு சில தர்ம சங்கடங்களை சந்திக்க நேரிடும். முக்கியமான பணிகளில் பிள்ளைகளின் ஆலோசனை உங்களுக்குத் துணை நிற்கும். அதிகப்படியான டென்ஷனின் காரணமாக உடல்நிலையில் சிரமத்தினை சந்திக்க நேரலாம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு துணை நிற்பார். அவரது பெயரில் புதிய சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு.

மாதத்தின் பிற்பாதியில் உண்டாகும் பெரிய மனிதர்களுடனான சந்திப்பு உங்கள் கௌரவத்தினை உயர்த்தும். தொழில்முறையில் நேர்மையான செயல்பாடுகள் நற்பெயரைப் பெற்றுத் தரும். சுயதொழில் செய்வோர் கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் தங்கள் கற்பனையில் உள்ளவற்றை நடைமுறையில் செயல்படுத்த இயலாது சிரமம் காண்பர். சராசரியான பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

உங்களை முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கவிருக்கும் மாதம் இது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர் பகை அகலும். ஊர்மாற்றம், இடமாற்றம் மட்டுமல்ல, நாடுமாற்றங்கள் கூட ஒருசிலருக்கு வந்து சேரலாம். சென்ற மாதத்தில் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்போடு உன்னதமான காரியமொன்று இல்லத்தில் நடைபெறப் போகிறது. விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். கணவன்–மனைவிக்குள் கனிவும், பாசமும் பெருகும். பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும் நேரமிது. 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 17,18,24,25,29,30 ஜனவரி: 9,10,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தாநீலம்

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 6, 7.

பரிகாரம்: தினமும் பெருமாளை வழிபட்டு வருவதோடு வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோயிலில் உங்களால் ஆன கைங்கர்யத்தினைச் செய்யுங்கள்.


thulam

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பொருளாதார நிலைமையில் நல்லதொரு முன்னேற்றம் காண்பீர்கள். உடன்பிறந்தோருடன் இணைந்து குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் சொத்துப்பிரச்னைக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பம் வந்து சேரும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும்.

பெரிய மனிதர்களுடனான சந்திப்பு உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் காட்டும். வண்டி, வாகனங்கள் புதிதாக சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பாதியில் சொத்து சேர்க்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். ஞாபகமறதிப் பிரச்னை மட்டும் உங்களை சற்றே அலைக்கழித்து வருகிறது. பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயரக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் முக்கியமான நேரத்தில் கைகொடுக்கும்.

ஆன்மிக பணிகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டி வரும். மாதத்தின் பிற்பாதியில் தொலைதூரப் பிரயாணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. தொழில்முறையில் போட்டியாளர்களை அநாயாசமாக சமாளித்து வெற்றி கண்டு வருவீர்கள். வியாபாரிகள் குறிப்பிடத்தகுந்த தனலாபம் காண்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் விருது இந்த மாதத்தில் வந்து சேரும். சுகமான நற்பலன்களைப் பெற்றுத் தரும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் மாதம் இது. பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தக்க சமயத்தில் தாய்வழி ஆதரவு கிடைக்கும். பக்கபலமாக உடன்பிறப்புகள் வந்திணைந்து உதவி செய்வர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கணவன்–மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அகலும். விண்ணப்பித்த வேலை கிடைக்கலாம். பிள்ளைகளின் வழியாக பெருமை வந்து சேரும். இடம், பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 19,20,24,25 ஜனவரி: 1,2,10,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 8, 9.

பரிகாரம்: தினமும் காலையில் திருப்பாவை பாடல்களைப் பாடி வர மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். 


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்காக கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செயலில் இறங்குவது நல்லது.

மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நேரிடும். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் சம்பவங்களை சந்திப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அவரது பெயரில் இருந்து வரும் சேமிப்பினை உயர்த்தும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

பிதுரார்ஜித சொத்துகளில் இருந்து வரும் பிரச்னைகள் அகலும். தொழில்முறையில் தொடர்வெற்றி சாத்தியமாகி வரும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பேச்சுத்திறமையின் மூலம் பதவி உயர்வினைக் காண்பர். கலைத்துறையினரின் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நற்பலன்களை அனுபவிக்கத் துவங்கும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு வழிபாடு:

குடும்பப் பெரியவர்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உறவினர்களால் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். வாழ்க்கைத் துணை வழியே எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். சொத்துகள் உங்கள் பெயரில் வாங்குவதற்கான அறிகுறிகள் தென்படும். பிள்ளைகள் வளர்ச்சி யில் பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் எதிர்பார்த்தபடி வந்துசேரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 16,17,21,22,23,29,30,31 ஜனவரி: 3,4,5,11,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 10, 11, 12.

பரிகாரம்: தினமும் காலையில் ஸ்கந்த குரு கவசம் படித்து வாருங்கள். தினமும் காலையில் 108 முறை ஸ்ரீராமநாம ஜபம் செய்து வருவது நல்லது.


dhanusuதனுசு: குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி இருந்து வரும். விவேகம் நிறைந்த பேச்சுகளால் நினைத்த காரியத்தினை சாதித்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும்.

புதிய நண்பர்கள் வந்து சேர்வார்கள். டிசம்பர் 30ம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத பிரயாணத்திற்கு ஆளாக நேரிடும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் ஒரு சில நேரத்தில் தர்மசங்கடமான நிலையை உருவாக்கக்கூடும். பேசும் வார்த்தைகளில் உங்களையும் அறியாமல் அடுத்தவர் மனம் புண்படும்படியான கருத்துகள் வெளிப்படலாம்.

இனம்புரியாத சிந்தனைகள் மனதில் குழப்பத்தினைத் தோற்றுவிக்கலாம். மருத்துவ செலவுகள் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நேர்மையான உழைப்பினால் உத்யோகஸ்தர்கள் அதிக பணிச்சுமையை எதிர்கொள்ள நேரிடும். வியாபாரிகளுக்கு லாப நஷ்டத்திற்கான விகிதாச்சாரம் சரிசமமாக இருந்துவரும். கலைத்துறையினர் எதிர்பார்த்த தனலாபம் வந்து சேரும். சராசரியான பலன்களை அனுபவிக்கும் நேரம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

உங்களின் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பூமி யோகம் முதல் அனைத்து யோகங்களும் வந்துசேரும். உறவினர் பகை மாறும். உங்களை விட்டுவிலகிச் சென்ற வர்கள் உறவாட முன்வருவர். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தரும் தகவல் வந்து சேரும். 2–ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால் குடும்பத்தில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். குடும்ப உறப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 19,20,23,24 ஜனவரி:1,2,5,6

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 16, 17, 18, ஜனவரி 13.

பரிகாரம்: மார்கழியில் தினமும் எழுந்து திருப்பாவை பாசுரங்களைப் படிக்கவும். 


magaramமகரம்: தனிப்பட்ட முறையில் கௌரவம் உயருகின்ற வகையில் உங்கள் செயல்பாடுகள் அமையும். செய்ய வேண்டிய கடமையைத் தவறாது செய்து முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருவீர்கள்.

பேசும் வார்த்தைகளில் ஸ்திரத்தன்மை காணப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிக சிரத்தையுடன் செயல்பட்டு வருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவி வரும். பொருளாதார நிலை மாதத்தின் பிற்பாதியில் கணிசமான அளவில் உயரத் துவங்கும். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் போன்றவற்றால் ஆதாயம் காண்பீர்கள்.

மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றம் காணும். உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு அமையும். சிந்தனையில் இருந்து வரும் தெளிவான கருத்துகள் அடுத்தவர்களுக்கு ஆலோசனையைக் கூறச் செய்யும். ஓய்வில்லாத உழைப்பு உடல்நிலையில் சிறிது சிரமத்தினை ஏற்படுத்தக்கூடும்.

வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பதற்கான வாய்ப்புகள் கிட்டும். அநாவசியச் செலவுகள் முற்றிலும் குறையும். தகப்பனார் வழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தொழில்முறையில் ஏற்றமிகு சூழலைக் கண்டு வருவீர்கள். கலைத்துறையினர் தங்கள் திறமைக்கேற்ற வாய்ப்பினைப் பெறுவர். மனதில் முழுமையான திருப்தியை உருவாக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் மாதம் இது. தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பர். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். வாழ்க்கைத் துணை உங்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதமிது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்துசேரும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உங்களுக்கு கூடுதல் மதிப்புக் கொடுப்பர். பிள்ளைகளால் பெருமை வந்துசேரும். 

பணத்தேவையைப் பூர்த்திசெய்யும் நாட்கள்: டிசம்பர்: 22,23,25,26,27 ஜனவரி: 3,4,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 19, 20.

பரிகாரம்: தினமும் காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடி எம்பெருமானை வணங்கி வரவும். 


kumbamகும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். மாதத்தின் பிற்பாதியில் பொருளாதார ரீதியான பிரச்னைகள் தலைதூக்கலாம். உடன்பிறந்தோருக்கு உதவப்போய் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் நேரத்தில் பழுதாகியும், இரவு நேரத்தில் பயன் தரும் வகையிலும் அமையும். இந்த மாதத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரயாணங்களை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் நல்லதொரு முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் வளர்ச்சியை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள். அவர்களின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.

இந்த மாதத்தில் ஆறாம் இடம் வலுப்பெறுவதால் வீண் வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரலாம். அடுத்தவர்களின் பிரச்னையில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் அதிக அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். தொழில்முறையில் இருந்து வரும் போட்டியான சூழல் மாதத்தின் பிற்பாதியில் காணாமல் போகும். கலைத்துறையினர் டிசம்பர் 30ம் தேதி வரை தங்களது வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டியிருக்கும். துணிவுடன் செயல்பட்டு நற்பெயர் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

வளர்ச்சி கூடும் மாதமாகக் கருதலாம். குரு அஷ்டமத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்துகொண்டே இருக்கும். பயணங்களால் பலன் உண்டு. ஜென்மத்தில் செவ்வாய் இருப்பதால் ஒரு சில சமயங்களில் முன்கோபம் அதிகரிக்கலாம். முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்லவும். வீடு மாற்றங்கள் விரும்பத்தக்கதாக அமையும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உன்னத உயர்வு காண்பர். சலுகைகள் எதிர்
பார்த்தபடி வந்து சேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 23,24,29,30 ஜனவரி: 5,6,9,10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 21, 22.

பரிகாரம்: மார்கழி மாத அதிகாலையில் ஸ்நானம் செய்து அரசமரத்தடி நாகரை சுற்றி வந்து வணங்கி வரவும். 


meenamமீனம்: குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை நிறைந்த கருத்துகள் வெளிப்படும். அதே நேரத்தில் தம்மை யாரும் குறை சொல்லிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையான எண்ணம் உங்கள் வார்த்தைகளில் இருந்து வரும். பொருளாதார நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள்.

முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செல்ல வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்களினால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரலாம். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் பிரயாணங்களின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும். உறவினர்களால் உண்டாகும் கலகம் நன்மையில் முடியும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை.

பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் நேரம் இது. வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணையாக இருந்து வருவார். தொழில்முறையில் சூரிய பகவானின் அருளால் ஸ்திரத்தன்மை காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினை அடைவார்கள். கலைத்துறையினர் டிசம்பர் 29ம் தேதிக்குள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் நினைத்தது நிறைவேறும் மாதமாகும். பணக்கவலை தீரும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. சகோதரர்களால் விரயம் ஏற்படும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. மக்கள் செல்வங்கள் மாலை சூடி மகிழும் வாய்ப்பு உருவாகும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பதவி வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 16,25,26 ஜனவரி: 1,2,8,9.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 23, 24, 25.

பரிகாரம்: மார்கழியில் தினந்தோறும் அதிகாலை சூரியனை வழிபட்டு வருவது நல்லது.