Home Astrology Monthly Rasi Palan தமிழ் மாத ராசிபலன் – 17-11-2015 முதல் 16-12-2015 வரை

தமிழ் மாத ராசிபலன் – 17-11-2015 முதல் 16-12-2015 வரை

848

mesahamமேசம்: இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களுடைய ஆளுமைத்திறன் அதிகரிக்கும். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ராகுவும் 6ம் இடத்தில் நிற்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஷேர் மூலமாக பணம் வரும். ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் யூரினரி இன்ஃபெக்‌ஷன், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு, தலைச்சுற்றல், சிறுசிறு விபத்துகள் வந்துபோகும். 29ந் தேதி வரை உங்களின் தனசப்தமாதிபதியான சுக்கிரன் 6ல் மறைந்து கிடப்பதால் கணவன்-மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வரக்கூடும்.

மனைவியுடனான மோதல்கள் விலகும். அவருக்கு இருந்த நோய் குணமாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குரு 5ல் நீடிப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். 30ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் நுழைந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். ஆனால், 8ல் நிற்கும் சனியுடன் இந்த மாதம் முழுக்க உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியனும் சேர்வதால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல், செலவுகள் இருக்கும். அரசாங்க விஷயங்கள் தாமதமாகி முடியும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர், நண்பர்களின் ஆதரவு பெருகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.  பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நிறைவேற்ற புதிய வழி பிறக்கும். பிரச்சினைகளுக்கு மத்தியில் இருந்த வாழ்க்கை,  இனி பலராலும் பாராட்டப்படும் விதத்தில் அமையப் போகின்றது. கணவன்– மனைவிக்குள் கனிவு கூடும், ஒற்றுமை பலப்படும். உங்கள் மனம் புண்படப் பேசி விலகியவர்கள் தாமாக வந்து சமாதானம் பேசுவார்கள். இல்லம் கட்டிக் குடியேறும்  யோகம்  ஒரு சிலருக்கு வந்து சேரலாம். நல்லவர் களின் தொடர்பு நீடிக்க முருகப் பெருமானை செவ்வாய் தோறும் வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 9ந் தேதி மாலை 5 மணி முதல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்: சென்னை-குன்றத்தூர் முருகனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 17, 20, 26, 27, 30 டிசம்பர்: 1, 12, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.


rishabam

ரிஷபம்:  உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் தடம்மாறி தரம் குறைய மாட்டீர்கள். 29ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ராகுவும், செவ்வாயும் இந்த மாதம் முழுக்க 5ம் இடத்திலேயே தொடர்வதால் பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட கவலைகள் வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சகோதரர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கேது லாப ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. புது வேலை கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும்.

திட்டமிட்டு குறிக்கோளுடன் வாழும் நீங்கள், இருட்டிலிருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர விரும்புவீர்கள். 30ந் தேதி முதல் சுக்கிரன் ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைவதால் சளித் தொந்தரவு, காய்ச்சல், தொண்டைப் புகைச்சல் வந்து போகும். இந்த மாதம் முழுக்க சூரியன் 7ல் நிற்கும் சனியுடன் சேர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி வந்து போகும். முன்கோபம் அதிகமாகும். மனைவிக்கு ஃபைப்ராய்டு, தைராய்டு பிரச்னை, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் முதல் பாதியில் வரவும், பிற்பாதியில் செலவும் அதிகரிக்கும். உறவினர் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். ஊர் மாற்றங்கள், வீடு மாற்றங்கள் ஒரு சிலருக்கு அமையலாம். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தனுசில் புதன் சஞ்சரிக்கும் பொழுது மனக்கசப்புகள் மாறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். இடம், பூமி வாங்குவதில் நாட்டம் செல்லும். பூர்வீக சொத்துக் களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 12, 13 மற்றும் 14ந் தேதி காலை 9 மணி வரை எதிலும் நிதானித்து செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்:
கும்பகோணம் கும்பேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 18, 19, 22, 23, 27, 28 டிசம்பர்: 3, 4, 15, 16

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா நீலம்.


mithunam

மிதுனம்: உங்களின் தைரியஸ்தானாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்கு 6ல் வீட்டில் வலுவாக அமர்ந்ததால் தன்னம்பிக்கை துளிர்விடும். உங்களின் பூர்வ புண்யாதிபதி சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். பாவ புண்ணியம் அடிக்கடி பார்ப்பீர்கள். செவ்வாய் 4ல் நிற்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ராகுவும் 4ம் இடத்திலும், கேது 10ல் தொடர்வதால் வேலைச்சுமையால் அவ்வப்போது சோர்வடைவீர்கள்.

31ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் புதன் பலவீனமாக காணப்படுவதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்துபோகும். நண்பர்களுடன் மோதல்கள் வரும். 1ந் தேதி முதல் புதன் 6ல் நிற்கும் சனியை விட்டு விலகுவதால் கோபம் குறையும். அழகு, இளமை கூடும். அநாவசியச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 6ம் வீட்டிலேயே சனிபகவான் நீடிப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். 3ம் இடத்து குருவால் எந்தவொரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போகும்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

வசதி வாய்ப்புகள் பெருகும் மாதமாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாரிசுகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். உடன்பிறந்தவர்கள் உங்கள் குமுறும் நெஞ்சத்திற்கு அமைதியை வழங்குவர். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர். கணவன்– மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 17, 18 மற்றும் டிசம்பர் 14ந் தேதி காலை 9 மணி முதல் 15, 16ந் தேதி மதியம் 1 மணி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம்:
திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 20, 21, 26, 27, 29, 30 டிசம்பர்: 1, 5, 6

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.


kadakam

கடகம்: எதிரியாக இருந்தாலும் மன்னிப்பதுடன், மனசாட்சிக்கும் பயந்தவர்கள் நீங்கள்தான். குருபகவான் 2ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்களின் யோகாதிபதி செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் மனோபலம் கூடும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மழலை பாக்யம் கிடைக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரம் வசதி, வாய்ப்புகள் உயரும்.

என்றாலும் 5ல் நிற்கும் சனியுடன் இந்த மாதம் முழுக்க பகைக் கோளான சூரியனும் பிரவேசிக்கயிருப்பதால் சிலர் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ராகு 3ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர், மாற்று மொழியினரால் பண உதவிகள் கிடைக்கும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் மதிப்பும், மரியாதையும் கூடும். இரு சக்கர வாகனத்தை மாற்றி சிலர் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர், நண்பர்கள் வீடுதேடி வருவார்கள்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் சகல யோகத்தோடு பிறக் கும் மாதம் என்பதால் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பூமி சேர்க்கையும், பொருட்சேர்க்கையும் அதிகரிக்கும். பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள், பிள்ளைகளின் வேலை வாய்ப்புகள் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு மகிழ்ச்சியை வழங்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குடும்ப உறுப்பினர்களும் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். 2–ல் குரு இருப்பதால் நட்பு வட்டம் விரியும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கூட கிடைக்கலாம்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 19, 20, 21ந் காலை 8 மணி வரை மற்றும் 16ந் தேதி மதியம் 1 மணி முதல் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: நாமக்கல் அனுமனை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு உங்களால் முடிந்தளவு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 22, 23, 26, 27 டிசம்பர்: 3, 4, 7, 8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.


simam

சிம்மம்: சில சமயங்களில் பலருக்கு எதிரியாகவே தெரிவீர்கள். ஜென்ம குருவும், அர்த்தாஷ்டமச் சனியும் அவ்வப்போது மனதிலே வழக்கில் அலட்சியம் வேண்டாம். என்றாலும் சுக்கிரன் உங்களுக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் எத்தனை பிரச்னைகள், இடையூறுகள் வந்தாலும் அவற்றையெல்லாம் போராடி சமாளிக்கும் சக்தியை தருவார். வாகனத்திற்கான லைசென்ஸ், இன்சூரன்சையெல்லாம் உரிய காலக்கட்டத்திற்குள் புதுப்பிப்பது நல்லது. சின்னச் சின்ன அபராதம் கட்ட வேண்டியது வரும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.

இந்த மாதம் முழுக்க புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களின் விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். இந்த மாதம் முழுக்க 2ல் நிற்கும் ராகுவுடன் செவ்வாயும் நிற்பதால் கண்பார்வைக் கோளாறு வரக் கூடும். காலில் அடிப்படக் கூடும். வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது. சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியூருக்கு செல்வதாக இருந்தால் தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கங்களை பத்திரப்படுத்தி விட்டு செல்வது நல்லது. விதிகளுக்கு அப்பாற்பட்டு யாருக்கும் உதவாதீர்கள். செலவினங்கள் அதிகமாகும். கடந்த மாதம் முழுக்க நீசமாகியிருந்த உங்கள் ராசிநாதன் சூரியன் இப்போது 4ல் அமர்ந்ததால் வீடு கட்டுவது, தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

வரவும், செலவும் சமமாகும் மாதமிது. மாதத் தொடக்கத்தில் விலகிச் சென்ற சொந்தங்கள்  வந்து சேருவர். குடும்பச்சுமை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அர்த்தாஷ்டமச் சனி கொஞ்சம் பலம் இழந்திருப்பதால் மருத்துவச் செலவு குறையும். மகிழ்ச்சி கூடும். வீடு மாற்றங்கள் ஒரு சிலருக்கு விரும்பியபடியே அமையும்.  உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது  அவசியம் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. கணவன்–மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 21ந் தேதி காலை 8 மணி முதல் 22 மற்றும் 23ந் தேதி காலை 10.15 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள்.

பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 24, 25, 28, 29 டிசம்பர்: 5, 6, 9, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பொன்னிற மஞ்சள்.


kanni

கன்னி: நீங்கள், எல்லோரின் இயக்கங்களையும் அசைபோட்டு எடைபோடுவதில் வல்லவர்கள். கடந்த ஒருமாத காலமாக 2ம் வீட்டில் நீசமாகி அமர்ந்து கொண்டு உங்களுக்கு பணப் பற்றாக்குறையையும், பேச்சில் கடுமையையும், முன்கோபத்தையும் தந்த சூரியபகவான் இப்போது 3ம் வீட்டில் வலுவாக நுழைந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சனியும் உங்கள் ராசிக்கு 3ல் தொடர்வதால் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் 31ந் தேதிவரை சனியுடன் சேர்ந்து நிற்பதால் வீண் டென்ஷன், அலர்ஜி, உடல் அசதி, சோர்வு, அலைச்சல் வந்து நீங்கும். 1ந் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் வலுவடைவதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரிவடையும்.

எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 12ல் குரு நிற்பதால் பயணங்கள் அதிகமாகிக் கொண்டே போகும். தவிர்க்க முடியாத செலவு களால் திணறுவீர்கள். அவ்வப்போது பழைய கடனை நினைத்து பயம் வந்துபோகும். கடைசி நேரத்தில் உதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பழைய சொந்தபந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். என்றாலும் உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் ஆரோக்கியத் தொல்லை அகலும்.  பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். குறிப்பாக பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. கணவன்–மனைவிக்குள் இதுவரை இருந்த சச்சரவுகள் விலகும். இனி நேசம் அதிகரிக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. ஏழரைச் சனி நடப்பதால் பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: நவம்பர் 23ந் தேதி காலை 10:15 முதல் 24 மற்றும் 25ந் தேதி மதியம் 1:15 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்: மயிலாடுதுறை-குத்தாலம் பாதையிலுள்ள க்ஷேத்ர பாலகரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 17, 26, 27, 30 டிசம்பர்: 1, 5, 6, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.


thulam

துலாம்: மனதிற்குப் பிடித்தவர்களுக்கு வாரி வழங்குவீர்கள். குருபகவான் லாப ஸ்தானத்திலும், கேது 6ம் வீட்டிலும் வலுவாக நிற்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். 29ந் தேதி வரை சுக்கிரன் ராசிக்கு 12ம் வீட்டில் நிற்கும் பாப கிரகங்களுடன் சேர்ந்து நிற்பதால் வீண் குழப்பங்கள், பணத் தட்டுப்பாடு, தொண்டை வலி, கழுத்து வலி, சைனஸ் தொந்தரவுகள் வந்துபோகும். ஆனால், 30ந் தேதி முதல் சுக்கிரன் சாதகமாவதால் ஆரோக்யம் சீராகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வருமென்றாலும் ராசிக்கு 12ம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகமாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றங்கள் வரும்.

கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள் நீசமாகி நின்ற சூரியன் இந்த மாதம் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கோபம் குறையும். தடைபட்ட அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். ஆனால், கண் வலி, வீண் செலவுகள் வந்து போகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழைய கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வந்துபோகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. பாதச் சனி தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரன்டர் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் பணம் வந்த மறுநிமிடமே செலவாகிறதே என்று கவலைப்படுவீர்கள்.  எப்படிக்கொடுத்தாலும் உங்கள் கைகளில் பணம் புரண்டு கொண்டேயிருக்கும். கணவன்–மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தாய்வழி ஆதரவு பெருகும். பொறுப்புகள் சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 25ந் தேதி மதியம் 1:15 மணி முதல் 26 மற்றும் 27ந் தேதி மாலை 5 மணி வரை முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: தஞ்சை பிரகதீஸ்வரரையும், அங்கேயே வீற்றிருக்கும் வாராஹியையும் தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 17, 18, 19, 27, 28, 29  டிசம்பர்: 2, 3, 4, 5, 9, 10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.


viruchigam

விருச்சிகம்: தவறு களை பிறர் சுட்டிக் காட்டினால் தயங்காமல் திருத்திக் கொள்வீர்கள். இந்த மாதம் முழுக்க லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்கு உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். புதுவேலை அமையும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வார்கள். என்றாலும் ராகுவுடன் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சேர்ந்து நிற்பதால் அலர்ஜி, இன்ஃபெக்‌ஷன், ரத்த அழுத்தம், ஒருவித படபடப்பு வந்து செல்லும். உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளையெல்லாம் உடனுக்குடன் செலுத்தப் பாருங்கள். ஜென்மச்சனியும் நீடிப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். காது, மூக்கு வலி, தலைச்சுற்றல் வரக்கூடும். சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். தன்னை யாரும் மதிக்கவில்லை என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள். அதிகநேரம் வேலை பார்க்க வேண்டியது வரும். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வரக்கூடும். 5ல் கேது தொடர்வதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகமாகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்று வீர்கள். பயணங்களால் திருப்பம் உண்டாகும்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் உங்களுக்கொரு இனிய மாதமாகும். பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும். ஆசைப்பட்ட பொருட் களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள்.  ஆதித்ய யோகம் இருப்பதால் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.  கணவன், மனைவிக்குள் அன்பும், அன்னியோன்யமும் பெருகும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம். ஆரோக்கியத் தொல்லை அகலும்.     சகோதர வர்க் கத்தினர் உங்களுக்குத் தேவையான  உதவிகளைச் செய்து கொடுப்பர். ஆனைமுகப்பெருமான் வழிபாடும், ஆறுமுகப்பெருமான் வழிபாடும் ஆனந்தமான வாழ்க்கையை  அமைத்துக் கொடுக்கும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 27ந் தேதி மாலை 5 மணி முதல் 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகள் தாமதமாகும்.

பரிகாரம்: கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 17, 20, 21, 30 டிசம்பர்: 1, 5, 6, 12, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: இளஞ்சிவப்பு.


dhanusu

தனுசு: அதிகாரம் ஆணவத்தை விட அன்புக்கு கட்டுப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் 12ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். ஏழரைச் சனியும் தொடர்வதால் பழைய கடன் பிரச்னையால் சேர்த்து வைத்திருக்கும் கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் அவ்வப்போது வந்துபோகும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கொஞ்சம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து ஆதங்கப்படுவீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் அடுத்தடுத்த வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் போகும். தாயாருக்கு கை, கால், மூட்டு வலி, நெஞ்சு வலி வந்து போகும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். சிறுசிறு மரியாதைக் குறைவான சம்பவங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

சுபவிரயங்கள் அதிகரிக்கும் மாதமாகும். வாங்கல்–கொடுக்கல்கள் ஒழுங் காகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குரு பார்ப்பதால் குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும். குடும்ப உறுப்பினர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். சண்டை, சச்சரவுகள் அகலும். சமாதானக் கொடி பறக்கும். அண்டை மாநிலங்களில் இருந்தும், அன்னிய தேசத்தில் இருந்தும் அழைப்புகள் வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப்பட கணவன்–மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளுக்கு வேலை கிடைத்து வெற்றி செய்தி வந்து சேரும். வெள்ளி, தங்கம் போன்ற ஆபரணங்களை வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2ந் தேதி காலை 7:45 மணி வரை எதிலும் யோசித்து செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: சென்னை-மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மனை தரிசித்து வாருங்கள். சாலை பணியாளர்களுக்கு ஆடைகள் கொடுத்து உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 17, 18, 22, 23, டிசம்பர்: 3, 4, 7, 8, 15, 16,

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே


magaram

மகரம்: மெத்த படித்தவர்களை கூட உங்கள் அனுபவ அறிவால் அசத்திடுவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11ம் இடத்திலேயே தொடர்வதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை உயரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தூரத்து சொந்த பந்தங்கள் வீடுதேடி வருவார்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கேது வலுவாக 3ல் நிற்பதால் மனோபலம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 9ம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது. தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் அஷ்டமத்தில் குரு இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விரோத மனப்பான்மை உருவாகும். ஊர் மாற்றம், இட மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறதே என்று ஒரு சிலர் கவலைப்படுவர். புதன் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய திருப்பங்கள் ஏற்படும்.  பாசம் பெருகும். ஒருசில சமயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு உயர்அதிகாரிகளால் நன்மை கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 2ம் தேதி காலை 7:45 மணி முதல் 3 மற்றும் 4ந் தேதி மாலை 6:15 மணிவரை மனதில் இனம்புரியாத பயம் வந்துபோகும்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளியும், செருப்பும் வாங்கிக் கொடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 20, 21, 24, 25 டிசம்பர்: 5, 6, 9, 10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.


kumbam

கும்பம்: உழைத்தும் போதிய உயர்வு இல்லையே என புலம்புவீர்கள். இந்த மாதம் முழுக்க உங்களின் சப்தமாதிபதி சூரியனின் ராசிக்கு 10ல் அமர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 10ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் மறைமுகமாக செயல்பட்டவர்களை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இதோ, அதோ என்று இழுத்தடித்தவர்கள் இப்பொழுது திருப்பித் தருவார்கள். என்றாலும் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழியும் வரக்கூடும். செவ்வாயும், ராகுவும் 8ம் வீட்டிலேயே நிற்பதால் அலைச்சல், மன இறுக்கம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நெஞ்சு வலி, காய்ச்சல், இரும்புச்சத்து குறைபாடு வந்து செல்லும்.

குருபகவான் வலுவாக இருப்பதால் பிரச்னைகளை கண்டு அஞ்சாமல் பதிலடி கொடுக்கும் அளவிற்கு மன தைரியம் பிறக்கும். 2ல் கேது நீடிப்பதால் வீண் செலவுகள், கண்வலி ஏற்படக்கூடும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. இடம், பொருள், ஏவலறிந்து பேசப் பாருங்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். எந்தக் காரியத்தை செய்தாலும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். சிலர் உங்களை தூண்டிவிட்டு, சீண்டி விட்டு சினம் கொள்ள வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். சொத்து விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போங்கள்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

வரவும், செலவும் சமமாகும் மாதமாகும்.  செவ்வாய் 8–ல் சஞ்சரிப்பதால் எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள். புதன் பலம்பெற்று நவம்பர் 26–ந் தேதி சஞ்சரிக்கப் போவதால் அதன்பிறகு பொருளாதார நிலை உயரும். பிள்ளைகள் வழியில் நடைபெற வேண்டிய சுபகாரியப் பேச்சுக்கள் தடையின்றி முடிவடையும். ஆடை, ஆபரண சேர்க்கை மற்றும் விலை உயர்ந்த மின்சாதனப் பொருட் களை வாங்குவதிலும் கவனம் தேவை. குரு பார்வை இருப்பதால் கணவன்– மனைவி இடையே ஒற்றுமை பலப் படும். சொத்துக்கள் வாங்குவதிலும், பத்திரப் பதிவிலும் இருந்த தடைகள் அகலும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 4ம் தேதி மாலை 6:15 மணி முதல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: சென்னை-திருவல்லிக்கேணியில் அருள்பாலிக்கும் பார்த்தசாரதிப் பெருமாளை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 21, 22, 26, 27 டிசம்பர்: 5, 6, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மெருன்.


meenam

மீனம்: நீங்கள் எதையும் உடனே முடிப்பதில் வல்லவர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் போட்டிப் பொறாமைகளையும் தாண்டி முன்னேறத் துடிப்பீர்கள். என்றாலும் 7ல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் அவ்வப்போது விவாதங்களும் வந்து செல்லும். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, செரிமானக் கோளாறு, பித்தப் பையில் கல் வரக்கூடும். உடன்பிறந்தவர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். சனி சாதகமாக இருப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும்.

6ல் குரு மறைந்து கிடப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டியது வரும். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். ராசிக்குள் கேது இருப்பதால் வேலைச்சுமையால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண் டென்ஷன் அதிகமாகும். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. சூரியன் 9ல் நிற்பதால் தந்தைக்கு மூட்டு, முழங்கால் வலி, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். தந்தைவழிச் சொத்தை பெறுவதில் தடைகள் வந்து போகும்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

எதிர்பாராத தனலாபம் கிடைத்து இதயம் மகிழும் மாதமாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். அரைகுறையாக நின்ற பணி மீதியும் தொடரும். நவம்பர் 30–க்கு மேல் சுக்ரன் துலாத்தில் பலம்பெறுகிறார். எனவே டிசம்பர் மாதத்தில் பொருளாதார நிலை உயரும். புகழ்கூடும்.  பிள்ளைகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். கணவன்–மனைவிக்குள் இணக்கமான வாழ்க்கை அமையும். சண்டை போட்ட சகோதரர்கள் சமாதானம் அடைவர். அண்டை மாநிலம் அல்லது அடுத்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு, உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உருவாகும். மாதக்கடைசியில் ஆபரண சேர்க்கை உண்டு.

சந்திராஷ்டமம்: 7, 8 மற்றும் 9ந் தேதி மாலை 5 மணி வரை வேலைச்சுமை அதிகமாகும்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

நவம்பர்: 17, 18, 24, 25, 28, 29 டிசம்பர்: 9, 10, 15, 16

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.