Home Astrology Monthly Rasi Palan தமிழ் மாத ராசிபலன் – 17-12-2015 முதல் 14-01-2016 வரை

தமிழ் மாத ராசிபலன் – 17-12-2015 முதல் 14-01-2016 வரை

1429

mesahamமேசம்: சமூகத்தின் மீதும் கொஞ்சம் கோபப்படுவீர்கள். சூரியன் 9ம் வீட்டில் அமர்வதால் தந்தையார் உடல்நிலை பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடை, தாமதம் ஏற்படும். தன-சப்தமாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி ஆதரவாகப் பேசுவார். அவர்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. 20ம் தேதி முதல் குரு ராசிக்கு 6ம் வீட்டில் வக்ரமாகி மறைவதால் மறைமுக அவமானம், வீண் பழி, அநாவசியச் செலவுகள், சின்னச் சின்ன இழப்புகள் வந்து செல்லும். மாதத்தின் பிற்பகுதியில் கேது லாப வீட்டில் நுழைவதால் ஷேர் மூலமாக பணம் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு வரும்.

சாதுவாக இருந்து சாதிப்பதில் வல்லவர்கள் நீங்கள். 27ம் தேதி வரை உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும். சகோதரங்களுக்கிடையே அவ்வப்போது சலசலப்புகள், பிரச்னைகள் தோன்றினாலும், மற்றொரு பக்கம் மகிழ்ச்சியும், பாசமும் அதிகரிக்கும். வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் தூக்கம் அவ்வப்போது குறையும். கடந்த காலத்தில் ஏற்பட்ட அவமானங்கள், இழப்புகள், ஏமாற்றங்களை, பழகுபவர்களின் இரட்டை வேடத்தை நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்: இம்மாதம் செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு செல்வச்செழிப்பு மேலோங்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். அதிசார குருவின் பலனால் குழந்தைகளின் நலன் கருதி ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. படிக்கும் குழந்தைகளாக இருந்தால் உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.  உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்க குடும்ப உறுப்பினர்கள் சம்மதிக்கலாம். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் உடல்நிலையில் தொல்லைகள் ஏற்பட்டாலும் கூட, மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 6, 7 மற்றும் 8ம் தேதி காலை 9.30 மணி வரை. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சிதம்பரத்தில் அருளும் தில்லைக் காளியை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 17, 18, 23, 24, 28, 29 ஜனவரி: 9, 10, 11, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.


rishabamரிஷபம்: மகளுக்கு அண்டைமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மகனுக்கு இருந்து வந்த முன்கோபம் நீங்கும். என்றாலும் 27ம் தேதி வரை 5ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். 28ம் தேதி முதல் செவ்வாய் 6ம் வீட்டில் நுழைவதால் பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட சிக்கல்கள் சாதகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்தாலும் 25ம் தேதி வரை ராசிக்கு 6ல் மறைந்திருப்பதால் வரட்டு இருமல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். 26ம் தேதி முதல் சுக்கிரன் ராசிக்கு 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கயிருப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: இம்மாதம் அதிசாரக் குருவின் ஆதிக்கம் வந்த பிறகு புதிய திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். கூட இருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். ஆபரணங்கள் வாங்க ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். குழந்தைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி இலாகா மாற்றங்கள் வந்து சேரும். சக ஊழியர்களிடம் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 8ம் தேதி காலை 9.30 மணி முதல் 9 மற்றும் 10ம் தேதி மாலை 4.30 மணி வரை. உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: மயிலாடுதுறை – குத்தாலத்திற்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 19, 20, 25, 26, 30, 31 ஜனவரி: 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.


mithunamமிதுனம்: உங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சூரியன் 7ம் வீட்டில் நிற்பதாலும், 26ம் தேதி முதல் உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 6ல் சென்று மறைவதாலும் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். வீண் சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். எனவே, பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். காய்ச்சல், சளித் தொந்தரவு, சைனஸ் இருப்பதைப்போல லேசான தலைவலி வந்து செல்லும். டி.வி., இண்டக்‌ஷன் ஸ்டவ் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். சாலைகளைக் கடக்கும் போது நிதானம் அவசியம். சின்னச் சின்ன விபத்துகள் வரக்கூடும்.

27ம் தேதி வரை செவ்வாயும், 7ம் தேதி வரை ராகுவும் 4ம் வீட்டில் நிற்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பூர்வீக சொத்துப் பிரச்னையில் கொஞ்சம் தள்ளியிருங்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். சில நேரங்களில் சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். குருவின் போக்கு சாதகமாக இல்லாததால் மனதிலே ஒரு பற்றற்ற போக்கு உருவாகும். இடமாற்றம் உண்டு. முதல் முயற்சியிலேயே எந்த வேலைகளையும் முடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களாக இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வீட்டில் பழைய வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். வழக்கறிஞரையும் வழக்கில் மாற்ற வேண்டி வரும். குறுக்கு வழியில் எந்த முயற்சியும் வேண்டாம்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: இம்மாதம் அதிசாரக் குருவின் ஆதிக்கத்தால் ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளுக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் தீரும். உத்தியோக முயற்சிகளில் வெற்றி கிடைத்து உதிரி வருமானங்கள் பெருகும். கணவன்-மனைவிக்குள் கனிவு கூடும். பாசமும், நேசமும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 10ம் தேதி மாலை 4.30 மணி முதல் 11 மற்றும் 12ம் தேதி இரவு 9 மணி வரை. முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கையை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 17, 18, 21, 22, 27, 28 ஜனவரி: 1, 2, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.


kadakamகடகம்: உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சுமுகமாக முடியும். ஏமாந்த பணம் திரும்பி கைக்கு வரும். சூரியன் 6ம் வீட்டில் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனில் ஒரு பகுதி பைசல் செய்ய வழி பிறக்கும்.

குடும்ப வருமானம் உயரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பிள்ளைகளால் கௌரவம் கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி வழியில் உதவிகள் கிட்டும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். கூடுதல் தளம் கட்டுவது, கூடுதல் அறை கட்டுவது போன்ற கட்டுமானப் பணிகள் நல்ல விதத்தில் முடிவடையும். புதன் 6ல் மறைந்திருப்பதால் உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வெடிக்கும். 20ம் தேதி முதல் குரு வக்ரமாகி 3ல் மறைவதால் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். சில காரியங்களை இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டியது வரும். தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய செலவுகளும் அதிகமாகிக் கொண்டே போகும். 5ல் சனி தொடர்வதால் மகள் கோபப்படுவாள். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: இம்மாதம் நன்மையும், தீமையும் கலந்து வரும். மாதத் தொடக்கத்தில் இடமாற்றம், உத்தியோக மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 2-ல் குரு இருப்பதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு கிடைக்கும். வீடு வாங்க, விற்க எடுத்த முயற்சிகளில் தடை ஏற்படலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 17, 18ம் தேதி மாலை 4 மணி வரை மற்றும் ஜனவரி 12ம் தேதி இரவு 9 மணி முதல் 13, 14 வரை

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி ஈசனை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 19, 20, 23, 24, 30, 31 ஜனவரி: 3, 4, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்மஞ்சள்.


simamசிம்மம்: கால் வயிற்று கஞ்சி குடித்தாலும் களங்கப்படாமல் வாழ வேண்டுமென்று நினைப்பீர்கள். 20ம் தேதி முதல் உங்கள் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் ராசியை விட்டு விலகி 2ல் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். அனுபவ அறிவால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். 27ம் தேதி வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் இரண்டாம் வீட்டில் நிற்பதால் காரசாரமாகப் பேசுவீர்கள். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது. 7ம் தேதி வரை 2ல் ராகுவும், 8ல் கேதுவும் இருப்பதால் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். பார்வைக் கோளாறு வரக்கூடும்.

சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையும் வந்து நீங்கும். உடல் உஷ்ணம் அதிகமாகி அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். உணவில் கீரை, பழ வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வாகனம் பழுதாகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அலர்ஜி, இன்ஃபெக்ஷன் வரக்கூடும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைபாடிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 5ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கவனம் தேவை. குறிப்பாக வழக்குகளில் சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வரக்கூடும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாக கையாளுங்கள்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: இம்மாதம் யோகமான மாதமாகும். ஜனவரி 7-ந் தேதிவரை நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். நாகரிகப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன்-மனைவிக் குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தைகள் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும் நேரமிது. ஜனவரி 8-ந் தேதி ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு மனநிம்மதிக் குறைவும், விரயங்களும் ஏற்படலாம். சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்து கொள்வது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 18ம் தேதி மாலை 4 மணி முதல் 19 மற்றும் 20ம் தேதி மாலை 6.30 மணி வரை. அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 21, 22, 26, 27 ஜனவரி: 2, 3, 6, 7, 8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.


kanniகன்னி: இப்படித்தான் வாழவேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளையுள்ளமும், வெளிப்படையாக பேசும் குணமும் கொண்டவர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் இதமாகவும், இங்கிதமாகவும் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். ் 27ம் தேதி வரை உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். சிலருக்கு அடிவயிற்றில் வலி, கண்வலி வந்து நீங்கும். அலைபேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். 28ம் தேதி முதல் செவ்வாய் ராசியை விட்டு விலகுவதால் அலைச்சல், டென்ஷன், வீண் செலவுகள் யாவும் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். 20ம் தேதி முதல் குருபகவான் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும்.

கொழுப்புச் சத்து, எண்ணெய் பதார்த்தங்கங்கள், லாகிரி வஸ்துகளையும் தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, நெஞ்சு வலி, வயிற்று உபாதைகள் வந்து செல்லும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பதிற்கு ஆளாவீர்கள். வெகுநாளாக நெருங்கிப் பழகிய நண்பர்கள்கூட உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். சட்டத்தை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். மனைவி உங்களுடைய குறை, நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளப் பாருங்கள். சிலர் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை இழந்து விடாதீர்கள். சூரியன் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைபட்ட கட்டுமானப் பணிகள் விரைந்து முடியும். அரசால் ஆதாயம் உண்டு.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: உங்களுக்கு இம்மாதம் அதிசார குருவின் பலனால் அதிக நன்மைகள் கிட்டும். புதியவர்களின் சகவாசம், புனித ஸ்தல யாத்திரை, பொருள் வரவு போன்ற அனைத்தும் ஏற்படும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். கட்டிட விற்பனையால் லாபம் உண்டு. குழந்தைகளின் சுபச்சடங்குகள் எதிர்பார்த்தபடி நடைபெறும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி ஆதரவோடு வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 20ம் தேதி மாலை 6.30 மணி முதல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 23, 24, 28, 29 ஜனவரி: 3, 4, 9, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.


thulamதுலாம்: நீங்கள் பொதுவாக அமைதியை விரும்புவீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 2ல் அமர்ந்து கொண்டு உங்களை ஏடாகூடமாகப் பேச வைத்த சூரியன் இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் நிற்பதால் இனி உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சாதூர்யமாகப் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பாதகாதிபதியான சூரியன் 3ல் மறைவதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலமாகவும் பணம் வரும். ஏமாந்துபோன தொகையும் கைக்கு வரும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசு காரியங்களும் விரைந்து முடியும். வழக்குகள் சாதகமாகும். பாக்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தந்தைவழியில் வர வேண்டிய சொத்துகள் கைக்கு வந்து சேரும். பாகப்பிரிவினையும் சுமுகமாகும். ஆனால், 28ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நுழைவதால் சொத்துப் பிரச்னையில் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நிலம், வீடு மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். மனைவிவழி உறவினர்களாலும் சின்னச் சின்ன மனத்தாங்கல் வரும். தூக்கம் குறையும். ஏழரைச் சனி நடைபெறுவதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இவற்றையெல்லாம் அவ்வப்போது நினைத்து ஆதங்கப்படுவீர்கள். மீண்டும் பழைய பிரச்னைகளை சந்திக்க நேரிடுமோ என்ற ஒரு அச்சம் வரக்கூடும். 20ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 12ல் மறைவதால் திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் அதிகமாகிக் கொண்டே போகும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: இம்மாதம் சோகங்கள் மாறி சுகங்கள் கூடும். தேகநலன் சீராகும். தெய்வ தரிசனங்களால் திருப்தி காண்பீர்கள். வேகமாக வந்த முன்னேற்றம் இடையில் தடைப்பட்டிருக்கலாம். அந்த முன்னேற்றத் தடை இனி அகலப்போகின்றது. படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும் விதம் வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டப் போகின்றது. கணவன்-மனைவிக் குள் ஒற்றுமை பலப்படும். குழந்தைகளால் பெருமை சேரும். உடன்பிறப்புகளாலும் ஆதாயம் உண்டு. சனிக் கிழமை தோறும் சனி பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் ஏழரைச் சனியிலும் கூட நல்ல பலன் கிடைக்கும். பாம்பு கிரக வழிபாடு பலன் தரும். ராகு-கேது பெயர்ச்சி நன்மையை வழங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: திருத்தணி முருகனை தரிசித்து வாருங்கள். கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 17, 26, 27, 30, 31 ஜனவரி: 5, 6, 7, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.


viruchigamவிருச்சிகம்:

நீங்கள், பாசத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்படுவீர்கள். கடந்த ஒரு மாதகாலமாக உங்கள் ராசியிலேயே அமர்ந்திருந்த சூரியன் இப்போது ராசியை விட்டு விலகியிருப்பதால் வயிற்று வலி, முதுகு வலி விலகும். கண் எரிச்சல், காய்ச்சல், சளித் தொந்தரவிலிருந்து விடுபடுவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்தீர்களே! அந்த நிலை மாறும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். என்றாலும் சூரியன் 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். லேசாக கண் வலி, பார்வைக் கோளாறு வரக்கூடும். பல் வலியும் வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜிதமாகப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 27ம் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள், பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். 28ம் தேதி முதல் ராசிக்கு 12ல் செவ்வாய் மறைவதால் திடீர் பயணங்கள், தூக்கமின்மை, பழைய கடன் பற்றிய கவலைகள் வந்துபோகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கும். ஜென்மச் சனி தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளிலோ, முயற்சிகளிலோ ஈடுபடாதீர்கள். எளிய முறையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி தினசரி மேற்கொள்வது நல்லது. செரிமானக் கோளாறு, சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: தனாதிபதி குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் இம்மாதம் தனலாபம் அதிகரிக்கும். வாங்கல்-கொடுக் கல்கள் ஒழுங்காகும். குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தால் கூடுதல் தொகை உங்கள் கைகளில் புரளும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி காணப் போகிறீர்கள். அவர்களால் உதிரி வருமானங்களும் கிடைக்கும். ராகு-கேது பெயர்ச்சியால் உத்தியோகத்தில் மேலும் முன்னேற்றம் காண்பீர்கள். பாம்பு கிரக வழிபாடு பண வரவைப் பெருக்கும். நடராஜர் வழிபாடு நலம் சேர்க்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 25, 26 மற்றும் 27ம் தேதி காலை 7 மணி வரை எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: திருபுவனம் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். முதியவர்களுக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 17, 18, 27, 28, 29 ஜனவரி: 1, 2, 8, 9, 10, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.


dhanusu

தனுசு: உதட்டில் புன்னகையை தவழவிடும் நீங்கள், சூழ்ச்சிகளால் புறக்கணிக்கப்பட்டாலும் முடங்கி விடாமல் முயற்சியால் முன்னுக்கு வருபவர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். 20ம் தேதி முதல் ராசிநாதன் குரு வக்ரமாகி 10ல் நுழைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலையில் கையொப்பமிட்டுத் தருவது நல்லது.

யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். சுக்கிரன் 26ம் தேதி முதல் 12ல் மறைவதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். 12ம் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக அமர்ந்திருந்து உங்களுடைய தூக்கத்தை குறைத்த சூரியன் இப்போது உங்கள் ராசியிலேயே நுழைந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி வரக்கூடும். அதிக உஷ்ணத்தால் சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல் வந்து நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால் மனைவிவழியில் உங்களுடைய புதுத் திட்டங்களுக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிவழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: இம்மாதம் குருவின் அதிசாரப்பலனால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். கூடுதல் விரயங்களை சமாளிக்கக் கூடிய ஆற்றல் உருவாகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. உடன் பிறப்புகளையும் அனுசரித்துக் கொள்ளுங்கள்.பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும். ராகு-கேது பிரீதி நன்மையை வழங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 27ம் தேதி காலை 7 மணி முதல் 28 மற்றும் 29ம் தேதி மாலை 3 மணி வரை வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 19, 20, 30, 31 ஜனவரி: 3, 4, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.


magaramமகரம்: நீங்கள் எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருப்பீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். பரஸ்பரம் மனம் விட்டுப் பேசுவீர்கள். உறவினர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். சிலர் சமையலறையை நவீனமாக்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பழைய நண்பர் தேடிவந்து பேசுவார். அக்கம் – பக்கம் வீட்டாருடன் இருந்த சண்டை, சச்சரவு விலகும். பழைய நகையை தந்துவிட்டு புது டிசைனில் வாங்குவீர்கள். உங்களின் பாக்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.

தந்தை வழியில் உதவிகள் உண்டு. தந்தையாருக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் ரசனைக்கேற்ப வீடு, மனை அமைய வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் பேச்சால் பிரச்னைகள் வெடிக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, சிறுசிறு விபத்துகள் வந்து செல்லும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அடிமனதிற்குள் தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விடாதீர்கள். 20ந் தேதி முதல் குருபகவான் 9ம் வீட்டில் நுழைவதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடிவரும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: இம்மாதம் ஜனவரி 7-ந் தேதி வரை தடையின்றி தனவரவு வந்துகொண்டே இருக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். முக்கியப் பணிகளைத் திருப்தியாகச் செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் ஜனவரி 8-ந் தேதிக்கு மேல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வதால் ஆதாயம் கிடைக்கும். வீண் விரயம் ஏற்படாதிருக்க வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 29ம் தேதி மாலை 3 மணி முதல் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: பார்த்தசாரதிப் பெருமாளை தரிசித்து வாருங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 17, 18, 21, 22 ஜனவரி: 1, 2, 6, 7, 8, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.


kumbamகும்பம்: நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள் நீங்கள். இந்த மாதம் முழுக்க லாப வீட்டில் சூரியனும், புதனும் நிற்பதால் கடினமான காரியங்களை சாமர்த்தியமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். ஆளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு உயரும். உறவினர், நண்பர்களின் சுயரூபத்தை தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். 20ம் தேதி முதல் 8ம் வீட்டில் குரு அமர்வதால் அவ்வப்போது வீண் அலைக்கழிப்பு, முன்கோபம் வந்து செல்லும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பங்களும், தடுமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருக்கும்.

செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். 28ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் டென்ஷன் குறையும். விபத்துகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். சொத்துப் பிரச்னைகள் நல்ல விதத்தில் முடிவடையும். சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து கேது உங்கள் ராசிக்குள்ளும், ராகு ஏழிலும் நுழைவதால் சோர்வு, களைப்பு, காய்ச்சல், செரிமானக் கோளாறு, பதட்டம் வந்து நீங்கும். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். உங்களின் பிரபல யோகாதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். புது வேலை கிடைக்கும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: இம்மாதம் தொடக்கத்தில் வரவு திருப்தி தரும்.வாய்ப்பு கள் வாயில் கதவைத் தட்டும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்க இல்லத்தில் உள்ளவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். அடுத்து வரும் அஷ்டமத்து குருவின் ஆதிக்கமும், ஜென்ம கேது, சப்தம ராகுவின் ஆதிக்கமும் நிம்மதி இழக்கச் செய்யலாம். நீடித்த நோயிலிருந்து விடுபட மருத்துவச் செலவுகள் உருவாகலாம். கணவன்- மனைவிக்குள் உறவு மேம்பட ஒற்றுமை பலப்பட அனுசரிப்புத் தேவை. குழந்தைகள் உங்கள் மேற்பார்வையில் இருப்பது நல்லது. அவர்களின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வீண் விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்வது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 1, 2, 3ம் தேதி மதியம் 1 மணி வரை திட்டமிட்டவை தாமதமாகி முடியும்.

பரிகாரம்: காளிகாம்பாளை தரிசனம் செய்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 19, 20, 23, 24, ஜனவரி: 3, 4, 5, 6, 7

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.


meenamமீனம்: தாய் மொழியின் மீது தீராத தாகம் கொண்ட நீங்கள், கடல் தாண்டிப் போனாலும் கலாசாரத்தை மீற மாட்டீர்கள். எதையும் உடனே முடிப்பதில் வல்லவர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் போட்டிப் பொறாமைகளையும் தாண்டி முன்னேறத் துடிப்பீர்கள். என்றாலும் 7ல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் அவ்வப்போது விவாதங்களும் வந்து செல்லும். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, செரிமானக் கோளாறு, பித்தப் பையில் கல் வரக்கூடும். உடன்பிறந்தவர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். சனி சாதகமாக இருப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும்.

சூரியன் 9ல் நிற்பதால் தந்தைக்கு மூட்டு, முழங்கால் வலி, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். தந்தைவழிச் சொத்தை பெறுவதில் தடைகள் வந்து போகும். 6ல் குரு மறைந்து கிடப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டியது வரும். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். ராசிக்குள் கேது இருப்பதால் வேலைச்சுமையால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண் டென்ஷன் அதிகமாகும். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்: இம்மாதம் அதிசார குருவின் ஆதிக்கத்தால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும். கூட்டுக் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் மாறும். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ வருமானம் திருப்தி தரும். குழந்தைகளின் வெளிநாட்டு முயற்சி கைகூடும். கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் சர்ப்ப கிரக வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். ஆறுமுகன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

சந்திராஷ்டமம்: 7, 8 மற்றும் 9ந் தேதி மாலை 5 மணி வரை வேலைச்சுமை அதிகமாகும்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 21, 22, 26, 27 ஜனவரி: 5, 6, 7, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.