Home World News மியான்மர் ராணுவம் அட்டூழியம்: கதறலுடன் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்

மியான்மர் ராணுவம் அட்டூழியம்: கதறலுடன் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்

16

மியான்மரில் ராணுவம் தொடர்ந்து படுகொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அந்நாட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

மியான்மர் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் அதிக அளவில் வசித்து வருபவர்கள் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் ஆவர். ஆண்டாண்டு காலமாக தாங்கள் மியான்மர் ராணுவத்தால் அடக்குமுறைக்கு ஆளாகி வருவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ரோஹிங்யா இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். கடந்த வாரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறி வைத்து ஆயுதம் ஏந்தி போராடி வருபவர்கள் தாக்குதலை தொடங்கினர்.

இந்த தாக்குதலில் காவல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி மியான்மர் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறி கிராமங்களில் உள்ள ரோஹிங்யா மக்களின் குடியிருப்புகள் மீது மியான்மர் ராணுவம் குண்டுகளை வீசி வருகிறது.

கண்ணில் படும் ரோஹிங்யா இன இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. ரோஹிங்யா இஸ்லாமிய பெண்களை மியான்மர் ராணுவம் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வருகிறது. பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல் மியான்மர் ராணுவத்தினர் சித்ரவதை செய்து வருகின்றனர். மேலும் குழந்தைகளையும் சுட்டுக் கொலை செய்யும் அக்கிரமும் அரங்கேறி வருகிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கூறி மக்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் தீவிரம் அடைந்து வருவதால் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் நாட்டை விட்டு வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். தற்போது வரை சுமார் 4 லட்சம் பேர் வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மியான்மர் ராணுவத்தால் அப்பாவி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் சுமார் 400 பேர் வரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here