Home History திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கோட்டம்

திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கோட்டம்

28

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சிற்ப வேலைப்பாடு நிறைந்த நடுகல் கோட்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார் மற்றும் தொல்லியல் ஆர்வலர் முத்தமிழ் ஆகியோர் நேற்று முன்தினம் திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் ஊராட்சி பகுதியில் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்திரபுரம் ஏரியின் அருகே தென்புறம் ஏரிக்கோடி என்ற இடத்தில் ஜெய்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மிகப்பெரிய நடுகல் கோட்டம் இருப்பதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் ஊராட்சியில் ஏரிக்கோடி என்ற இடத்தில் உள்ள இந்த நடுகல்கோட்டம் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்களிலேயே சிறப்புவாய்ந்தது. இந்த நடுகல்லானது சுமார் 10 அடி நீளமும் 10அடி அகலமும் கொண்டதாக உள்ளது. சிற்பவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நடுகல்லில் 8 நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் விதமாக 25 மனித உருவங்களும், 5 குதிரைகளும் உள்ளது. கல்லின் மையத்தில் தலைவனின் உருவம் பெரியதாக வடிக்கப்பட்டுள்ளது. தலைவனின் இடையில் கச்சையுடன், வாளின் உறை இடம் பெற்றுள்ளது. கழுத்தில் இரண்டு சங்கிலி, கால்களில் வீரக்கழல், கை மற்றும் தோள்பட்டையில் காப்பு, காதுகளில் காதணியும் அணிந்துள்ளான். வலது கரத்தில் பெரிய போர்வாளினை ஏந்தியுள்ளான்.

மேலும் போர்க்களத்தில் எவ்வாறு இறந்தான் என்பதும் இந்நடுக்கல்லில் விவரிக்கப்பட்டுள்ளது. தலைவனின் தலையில் ஒரு அம்பும், மார்பில் ஒரு அம்பும், வலது காலில் ஒரு அம்பும் பாய்ந்தவண்ணம் உள்ளது. கல்லின் வலது புறத்தில் மேற்புறம் நான்கு குதிரைகள் வரிசையாக உள்ளன. அதற்கு கீழே காவடியும் சாமரமும் வீசக்கூடிய இரண்டு பெண்கள், அதற்கு கீழே பல்லக்கு தூக்கியவாறு இரண்டு ஆண்கள், அதற்கு கீழே குடைகள் ஏந்தியவாறு மூன்று பெண்களும், அருகில் வீரனது குதிரையும் உள்ளன. கல்லின் இடதுபுறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு ஆணும், பக்கவாட்டில் இரண்டு பெண்களும் சாமரம் வீசும் நிலையிலும் அதற்கு கீழே கைகளில் வில்லுடன் எதிரெதிராக போரிடும் வீரர்களின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக நான்கு பெண்கள் காற்றுக்கருவிகளை வாயில் இசைக்கின்றனர். கீழே நான்கு பெண்கள் தோல் கருவிகளை வாசிக்கின்றனர்.அக்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அவ்வெழுத்துக்களின் அமைப்பு கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதற்கு நேரெதிராக இன்னொரு நடுகல் உள்ளது. அதில் வீரனொருவன் கையில் வாளுடன் வடிக்கப்பட்டுள்ளான். அவனது வயிற்றுப் பகுதியில் அம்பு பாய்ந்துள்ளது. இந்நடுகல் தலைவனின் தளபதிக்கு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நடுகல் கோட்டம் இப்பகுதியில் நடந்த போரில் வெற்றியினை தேடித்தந்து மறைந்த தலைவன் மற்றும் அவனது படை தளபதிக்காக எடுக்கப்பட்டவையாகும். தலைவனது வீரத்தினை சிறப்பித்து போற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கிய மிக பிரம்மாண்டமான நடுகல் கோட்டமாக இது திகழ்கிறது. கோடியூரப்பன், முனீஸ்வரன் என்று இக்கோட்டத்தினை இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இங்குள்ள உடைந்த கல்வெட்டை மேலும் நுணுக்கமாக ஆராயும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம் என்றார்.