Home Tamil Movie Reviews பிச்சைக்காரன் – விமர்சனம்

பிச்சைக்காரன் – விமர்சனம்

517
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

விஜய் ஆண்டனிதான் படத்தின் இசை என்பதால், படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்துள்ளார். கதைக்கு தேவையான இடத்தில்தான் பாடல்கள் வருகின்றது. பின்னணி இசையிலும் ஜொலிக்கின்றார். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு பிச்சைக்காரர்கள் வாழ்க்கையை அழகாக படம்பிடித்துள்ளது.

3.5
இயக்கம்: சசி
ஒளிப்பதிவு: பிரசன்ன குமார்
இசை: விஜய் ஆண்டனி
தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி
நடிகர்கள்: விஜய் ஆண்டனி, சட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன்

திரையுலகில் பொதுவாக நெகட்டிவான தலைப்பு வைத்தால் அந்தப்படம் ஓடாது என்கிற ஒரு பேச்சு இருந்துவருகிறது. ஆனாலும் துணிச்சலாக அதுவும் ‘பிச்சைக்காரன்’ என்று தலைப்பு வைத்து படத்தையும் ரிலீஸ் செய்துவிட்டார் விஜய் ஆண்டனி. ஒரு பெரும் கோடீஸ்வரன் தன் தாயின் உயிர் காக்க வேண்டி ஒரு 48 நாட்கள் பிச்சைக்காரனாக வாழும் வாழ்க்கை தான் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்து, இசைத்து வெளிவந்திருக்கும் ‘பிச்சைக்காரன்’ படத்தின் கரு.

Pichaikkaran-1-e1456864524770

விஜய் ஆண்டனி சுமார் 900 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக தோன்றுகிறார், அவருக்குக்கு எல்லாமே தன் அம்மாதான் என்று வாழ்ந்துவருகிறார். எதிர்பாராத ஒரு விபத்தால் விஜய் ஆண்டனி அம்மா கோமா நிலைக்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து தன் அம்மாவை காப்பாற்ற ஆங்கில மருத்துவம், நாட்டு மருத்துவம் என பல முயற்சிகளை செய்கிறார் விஜய் ஆண்டனி.

ஆனால் எந்த மருத்துவம் செய்தும் தனது அம்மாவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பாததால், இருதிகட்டாமாக ஒரு சாமியாரின் அறிவுரையால், 48 நாட்களுக்கு தான் ஒரு கோடீஸ்வரன் என்பதை மறந்து தன் அம்மாவுக்காகப் பிச்சைக்காரனாக வாழ்கிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில் ஒரு பிச்சைக்காரனாக தன்னை தயார்படுத்தி பிச்சை எடுக்கையில், பல பேரின் மூலம் இவருக்கு சில இன்னல்கள் வருகின்றன. மேலும், விஜய் ஆண்டனியின் பெரியப்பா அவரின் சொத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்.
விஜய் ஆண்டனியின் வேண்டுதல் நிறைவேறி அவருடைய அம்மா குணமானாரா? தனக்கு வரும் இன்னல்களை முறியடித்தாரா? என்பதே பிச்சைக்காரன் படத்தின் மீதிக் கதை.

11988470_1090000487678481_791180624908938935_n3

படத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தியிருப்பவர் நல்ல பாத்திரத்துக்காக ஏங்கும் விஜய் ஆண்டனி. பணக்காரனாக நடந்து வருவதில் காட்டும் கம்பீரம், பிச்சைக்காரனாக கஷ்டப்படும் அல்லல், அசல் பிச்சைக்காரனாகவே மாறும் நிலை என அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்தே இருக்கிறார்.
தாயின் கடை நேரத்தில் அவர் அருகிலிருக்க வேண்டி நண்பன் அறிவுறுத்துவதையும் தன் சங்கல்பத்துக்காக ஏற்றுக் கொள்ள மறுக்கும் அவர், ஒரு மண்டலம் முடியும் தறுவாயில் சில நிமிடங்களே எஞ்சியிருக்க அதை மீற நேரும் கட்டத்தை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் அற்புதமான கட்டம் அது.

அவருக்கு ஜோடியாக வரும் கதாநாயகி சாத்னா, மகி எனும் மகிழினி பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார். ‘பிச்சைக்காரனைக் காதலிக்கும் பீட்ஸாக்காரி’யாக வரும் சாத்னா, விஜய் ஆண்டனி ஒரு பிச்சைக்காரன் என்பது தெரியாமல் அவருடன் சேர்ந்து ஊர் சுற்றுவதாகட்டும், ஒரு கட்டத்தில் அவர் பிச்சைக்காரன் என்று தெரிந்து அவரை விட்டு விலக நினைத்தாலும், காதலால் அவருடனே பயணிப்பதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை கவர்கிறார்.

pichaikkaran (1)

கிளைமாக்ஸ் தாண்டிய நிறைவுக் காட்சியில் பிச்சைக்காரர்களாக இருப்பது எத்தனைக் கஷ்டம் என்பதை அம்மா சொல்ல, ஒன்றும் தெரியாதது போல் விஜய் ஆண்டனி அமைதி காக்க, அவர் பிச்சைக்காரனாக வாழ்ந்ததின் மௌன சாட்சியான சாத்னா அவரை ஒரு பார்வை பார்ப்பது அருமை.

அம்மா கேரக்டரில் வரும் புவனேஸ்வரி, விஜய் ஆண்டனியின் பெரியப்பாவாகவும் படத்தின் வில்லனாக வரும் முத்துராமன், விஜய்ஆண்டனியின் செயலாளராக வரும் ‘நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பக்ஸ் பகவதி பெருமாள் ஆகியோரின் நடிப்பும் கச்சிதமாக அமைந்திருக்கின்றன.

pichaikkaran

விஜய் ஆண்டனிதான் படத்தின் இசை என்பதால், படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்துள்ளார். கதைக்கு தேவையான இடத்தில்தான் பாடல்கள் வருகின்றது. பின்னணி இசையிலும் ஜொலிக்கின்றார். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு பிச்சைக்காரர்கள் வாழ்க்கையை அழகாக படம்பிடித்துள்ளது.

மொத்தத்தில் பிச்சைக்காரன் – எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டியவன்!