Home Tamil Cinema News மொழி, இனத்தை பாதுகாப்பது பெற்ற தாய், தந்தையை பாதுகாப்பது போன்றது – பாரதிராஜா

மொழி, இனத்தை பாதுகாப்பது பெற்ற தாய், தந்தையை பாதுகாப்பது போன்றது – பாரதிராஜா

170

Bharathiraja

பெங்களூர் அல்சூரில் கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பின் 3-ம் ஆண்டு விழாவையொட்டி பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினவிழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவை தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்.

விழாவில் பல கன்னட தமிழ் திரையுலகினர் கலந்துகொண்டிருந்தனர். இயக்குனர் பாரதிராஜா பேசும்போது வழக்கம்போல் தனது பாணியில் என் இனிய தமிழ் மக்களே என கூறி பேச்சை தொடங்கினார்.

மேலும் உலக தமிழர்கள் அனைவருக்கும் பிரிவினை என்பது கிடையாது. அனைவரும் தமிழர்கள் தான். இதனால் தான் நான், என் இனிய தமிழ் மக்களே என கூறினேன். பழமையான மொழிகளிலேயே மூத்த மொழி தமிழ் தான் என ஆய்வு கூறுகிறது. கர்நாடகத்திற்கும், எனக்கும் சம்பந்தம் உள்ளது. மறைந்த இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். பெங்களூரு, மைசூரு, கொள்ளேகால், பெலக்கவாடி ஆகிய பகுதிகளுக்கு நான் அதிகமாக சென்று வந்துள்ளேன். புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தடம் புரளாமல் வாழ்பவன் தமிழன்.

இடம் பெயர்ந்தாலும், புலம் பெயர்ந்தாலும் வாழ்ந்த பூமிக்கும், வாழ்கிற பூமிக்கும் பெருமை சேர்ப்பவன் தமிழன். திரையுலகிற்கு நான் வந்ததை பெருமையாக கருதுகிறேன். நாட்டில் எந்த பகுதியில் வசிக்கும் தமிழர்களும் மொழி, இனத்தை தாண்டி தமிழ் திரைப்படம் வழியாக தொப்புள் கொடி பந்தம் மாறாமல் தமிழ் இனத்துடன் ஒன்றிணைகிறார்கள்.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் யாரும் ஊறு விளைவித்தால் அதை எதிர்த்து தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மொழி, இனத்தை பாதுகாப்பது பெற்ற தாய், தந்தையை பாதுகாப்பது போன்றது. மொழிக்கு வழங்கும் மரியாதை, பெற்ற தாய்க்கு கொடுக்கும் மரியாதை.

தமிழனின் பாரம்பரிய விழா பொங்கல். தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடந்து வந்தது. தற்போது ஜல்லிக்கட்டுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறாக பாரதிராஜா தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகள் பற்றி பேசினார்.

மேலும் இந்த விழாவில், பாடலாசிரியர் பா.விஜய் பேசுகையில், உலகில் உள்ள 6 தொன்மையான மொழிகளில் தமிழை தவிர அனைத்து மொழிகளும் பேச்சு வழக்கில் இல்லை. 2008-ம் ஆண்டில் நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில், 28 மொழிகளில் வரவேற்புரை எழுதப்பட்டு இருந்தது. இதில் இந்தியாவிலேயே தமிழ் மொழி மட்டும் தான் இடம் பெற்றிருந்தது. தமிழனின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.

பாடலாசிரியர் நா.முத்துகுமார் பேசுகையில், உலகில் மிக தொன்மையான மொழி தமிழ். உலகில் தமிழர்கள் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேச கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.