Home World News சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா

17

சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங்யாமின் பதவிக்காலம் முடிவதையடுத்து, அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சாலே மரிக்கான், நாடாளுமன்ற உறுப்பினர் ஹலிமா யாகோப், கப்பல் நிறுவனத்தின் தலைவர் பரீத் கான் என்பவர் உட்பட 5 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால், சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடலாம் என்று சமீபத்தில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மரிக்கான் உட்பட 2 பேரின் மனுக்களும் தொழிலதிபர்களாக இருக்கும் வேறு இருவரின் மனுக்களும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை என்றும் கூறி தள்ளுபடி செய்யப்பட்டன. மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஹலிமா யாகோப்பின் மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அதிபர் பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம் ஹலிமா யாகோப் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஆகியுள்ளார். ஆளும் மக்கள் நடவடிக்கை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சுமார் 20 ஆண்டுகளாக அவர் இருந்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்தார்.

மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமே போட்டியிடலாம் என்ற கட்டுப்பாட்டுடன் தேர்தலே நடக்காமல் போட்டியின்றி ஹலிமா தேர்வு செய்யப்பட்டதற்கு சமூக வலைத் தளங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ஹலிமா யாகோப் கூறும்போது, “தேர்தல் நடக்காமல் நான் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் நான் எல்லாருக்கும் அதிபர். எல்லா மக்களுக்கும் பணியாற்றுவேன். நாட்டு மக்களை ஒரே அணியில் கொண்டுவருவதற்கான பணிகளை உடனடியாக தொடங்குவேன்” என்றார்.