Home Tamil Breaking News ரயில், பஸ், விமானங்களில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதலை நடத்தக்கூடும்: மத்திய அரசு எச்சரிக்கை

ரயில், பஸ், விமானங்களில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதலை நடத்தக்கூடும்: மத்திய அரசு எச்சரிக்கை

17

ரயில், பஸ், விமானங்களில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர். அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விமான நிறுவனத்தின் விமானத்தில் விஷ வாயு தாக்குதல் நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

இதேபோல இந்தியாவிலும் ரயில், பஸ், விமானங்களில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதலை நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பயணிகள் விமானங்கள், ரயில்கள், பஸ்களில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சந்தையில் எளிதாக கிடைக்கும் ரசாயன பொருட்கள், அமிலங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி தீவிரவாதி கள் விஷ வாயுக்களை தயாரிக்கக்கூடும்.

அதனை உணவு பொருட்கள், மருந்துகள் என்ற போர்வையில் கடத்திஇ பொது போக்குவரத்தில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாகத் தெரிகிறது. எனவே அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக விமான நிலையங்களின் பாதுகாப்பை மேற்கொள்ளும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா குட்டி விமானங்களை சுட்டு வீழ்த்த விரைவில் அனுமதி

டெல்லி விமான நிலைய வளாகத்தில் அண்மையில் ஆளில்லா குட்டி விமானம் பறந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் விமான நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமாக பறக்கும் ஆளில்லா குட்டி விமானங்களை சுட்டு வீழ்த்த தேசிய பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு விரைவில் அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆளில்லா குட்டி விமானம், கிளைடர்கள் உள்ளிட்டவை விமான நிலையங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பறந்தால் சுட்டு வீழ்த்த முடிவு செய்துள்ளோம். விமான நிலைய பாதுகாப்பை மேற்கொள்ளும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படைக்கு இந்த அதிகாரம் விரைவில் வழங்கப்படும். இதுதொடர்பாக வரைவு மசோதோவை தயாரித்துள்ளோம்.

இந்த மசோதா சட்டமாகும்போது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குட்டி விமானங்களை பறக்கவிடும் நபர்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படும். குட்டி விமானங்களை பறக்கவிட உரிமம் பெறுவதும் கட்டாயமாக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here