Home Festivals Tamil Hindu Festivals தசரா பயிற்சி: தங்க அம்பாரியை சுமக்கும் கம்பீர யானை

தசரா பயிற்சி: தங்க அம்பாரியை சுமக்கும் கம்பீர யானை

51
SHARE

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் ஆயுதப்பூஜையை முன்னிட்டு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வருகிற 21–ந் தேதி தொடங்கி 30–ந் தேதி வரை 10 நாட்கள் தசரா விழா நடக்க உள்ளது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான 30–ந் தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். இந்த ஊர்வலத்தில் சாமுண்டி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தப்படி அர்ஜூனா யானை கம்பீரமாக வலம் வரும். இதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இந்த நிலையில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் தங்க அம்பாரியை சுமந்து வரும் அர்ஜூனா உள்பட 15 யானைகள் கடந்த மாதம் 2 கட்டமாக முகாம்களில் இருந்து மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன.

மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் அந்த யானைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் பன்னிமண்டபம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதேப்போல் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் போது யானைகள் மிரளாமல் இருக்க குண்டுகளை வெடிக்க வைக்கும் பயிற்சி, மணல் பாரத்தை சுமந்து வரும் பயிற்சி ஆகிய பயிற்சிகளும் யானைகளுக்கு அளிக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவுக்கு முன்பு தங்க அம்பாரியை சுமந்து வரும் அர்ஜூனா யானைக்கு மரத்தால் ஆன மாதிரி அம்பாரியை சுமந்து வரும் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மரத்தால் ஆன மாதிரி அம்பாரியை சுமக்கும் பயிற்சி அர்ஜூனாவுக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அர்ஜூனா யானைக்கு மரத்தால் ஆன மாதிரி அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை 5 கிலோ மீட்டர் வரை அர்ஜூனா, மணல் மூட்டை மற்றும் மாதிரி அம்பாரி என மொத்தம் 750 கிலோ எடையுடன் பயிற்சியில் ஈடுபட்டது.
அதன் பின்னால் மற்ற 15 யானைகளும் நடைபயிற்சி மேற்கொண்டன. முன்னதாக இதற்காக அரண்மனை வளாகத்தின் முன்பு 15 யானைகளும் அணிவகுத்து நின்றன. அவைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த பயிற்சி குறித்து யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை டாக்டர் நாகராஜ் கூறும்போது:–
மரத்தால் ஆன மாதிரி அம்பாரியை சுமக்கும் பயிற்சி இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு அர்ஜூனா யானைக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் அபிமன்யூ, பீமா, கஜேந்திரா ஆகிய யானைகளுக்கும் மணல் பாரம் சுமக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தசரா விழா நெருங்கி வருவதால் யானைகளின் உடல் நலம் குறித்து தினமும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here