Home World News சவுதி அரேபியா: மனித ரோபோ ‘சோபியா’வுக்கு குடியுரிமை அளித்து கவுரவிப்பு

சவுதி அரேபியா: மனித ரோபோ ‘சோபியா’வுக்கு குடியுரிமை அளித்து கவுரவிப்பு

26

ரியாத்: ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த மனித ரோபோ ‘சோபியா’வுக்கு சவுதி அரேபிய அரசு குடியுரிமை அளித்து கவுரவித்துள்ளது. கேட்கும் கேள்விகளுக்கு முக பாவனைகளுடன் மிக நேர்த்தியாக பதில் அளிக்கும் இந்த ‘சோபியா’, வயதானவர்களை கவனிப்பதற்காக சவுதி அரேபிய அரசு வாங்கி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் பல வகை மனித ரோபோக்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ரோபோக்கள் அனைத்தும், மனித முகபாவனைகளை தெளிவாக வெளிப்படுத்தி பேசுகிறது.

இந்நிறுவனம் ஏற்கனவே ஆலிஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஹேன், ஜூல்ஸ்,ஜெனோ என மனித தோற்றத்தில் பலவகை ரோபோக்களை உருவாக்கியுள்ளது. ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனர் டேவிட் ஹான்சன், டிஸ்னி நிறுவனத்தில் பலவித கற்பனை உருவங்களை உருவாக்கியவர். இவர் சமீபத்தில் தயாரித்த ‘சோபியா’ என்ற பெண் ரோபோ பலரது மனதை கவர்ந்து வருகிறது. மிக நவீன தொழில்நுட்பத்துடன் இது மேம்படுத்தப்பட்டுள்ளது. முக பாவனைகளை வெளிப்படுத்த இதில் பலவித மோட்டார்களும், கியர்களும் பொருத்தப்பட்டுள்ளன. மனிததோல் நிறத்திலேயே அதன் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெமரியில் இருந்து உரையாடல்களை, கேள்வி கேட்டு முடிந்ததும் சரியான நேரத்தில் பதிலாக வெளிப்படுத்தும் வகையில் இதன் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கேட்கும் கேள்விகளுக்கு முகபாவனைகளுடன் அழகாக பதில் அளிக்கிறது. நண்பர்களுடன் ஜாலியாக உரையாடுவதுபோல், மிகவும் நகைச்சுவையாக பேசுகிறது. சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீடு பற்றி கூட்டத்தில் சோபியாவும் கலந்து கொண்டது.இதன் திறமையை பார்ந்து வியந்த சவுதி அரேபியா அரசு நிர்வாகம், சோபியா ரோபோட் ஒன்றை வாங்கி உள்ளது. இது வயதானவர்களை கவனிக்கும் தன்மை கொண்டது. முதன் முதலில் தங்கள் நாட்டுக்கு வந்துள்ள செயற்கை அறிவு கொண்ட சோபியாவுக்கு குடியுரிமை வழங்கி சவுதி அரேபிய அரசு கவுரவித்துள்ளது.

மனித ரோபோ ஒன்றுக்கு ஒரு நாடு குடியுரிமை வழங்கியுள்ளது இதுவே முதல் முறை.
சோபியா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நிருபர் ஒருவர் கேள்வி கேட்க, சோபியா அழகாக பதில் அளித்தது. ரோபோவுக்கு குடியுரிமை அளித்தது பற்றி சோபியா பதில் அளிக்கையில், ‘‘எனக்கு குடியுரிமை வழங்கிய சவுதி அரேபியா அரசுக்கு நன்றி’’ என கூறியது.

Related Posts