Home Tamil Breaking News தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதித்த டெங்கு: மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதித்த டெங்கு: மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

70
SHARE

சென்னை வந்த மத்திய குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.256 கோடி வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை அனுப்பிவைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ், தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் இணை இயக்குனர் டாக்டர் கல்பனா பர்வா, டெல்லி கே.எஸ்.சி.எச். மற்றும் எல்.எச்.எம்.ஜி. குழும மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் டாக்டர் சுவாதி டுப்ளஸ், பூச்சியியல் வல்லுனர் டாக்டர் வினய் கார்க் மற்றும் தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் கவுசல் குமார் ஆகியோர் அடங்கிய குழுவை மத்திய அரசு சென்னைக்கு அனுப்பிவைத்தது.

குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், அவர்களின் உடல்நிலை குறித்தும் டாக்டர்களிடம் மத்திய குழுவினர் கேட்டு அறிந்தனர். டெங்கு அறிகுறியுடன் தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கவனத்துடன் கேட்டனர்.

மருத்துவமனையில் சென்னை மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழிப்புணர்வு பிரசுரங்களையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

அங்கு டாக்டர் கல்பனா பர்வா நிருபர்களிடம் கூறுகையில், “டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திராவிலும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தற்கான காரணம் குறித்து அறிய நாங்கள் பல்வேறு குழுக்களாக சென்று ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

இதையடுத்து மாலை 5.50 மணி அளவில் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் அசுதோஷ் பிஸ்வாஸ் மற்றும் கல்பனா பர்வா ஆகியோர் வளசரவாக்கத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

மத்திய குழுவினர் இன்று (சனிக்கிழமை) செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here