Home Tamil Breaking News மும்பை: கனமழையை தொடர்ந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது…

மும்பை: கனமழையை தொடர்ந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது…

12

மும்பையில் வெளுத்துவாங்கிய கனமழை குறைந்து, சாலைகளில் தேங்கிய மழைநீரும் வடியத் தொடங்கயுள்ளதால், போக்குவரத்து சீரடைந்து வருவதுடன், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.

மும்பையில் நேற்று அதிகாலை தொடங்கிய கனமழை, நள்ளிரவு வரை வெளுத்துவாங்கியது. 18 மணிநேரத்தில் 30 செண்டிமீட்டர் அளவுக்கு பெய்த கனமழையால், பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வீடுகள், வணிக வளாகங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

மும்பை, நவி மும்பை, தானே உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால், தண்டவாளங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், லட்சக்கணக்கான பயணிகள், ரயில் நிலையங்களிலேயே பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து மழை பெய்த நிலையில், வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவில் மழை சற்று ஓய்ந்ததால், புறநகர் மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

இன்று காலை 8 மணி வரை ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியதால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், முற்பகலில் மழை ஓய்ந்ததால், சாலைகளில் தேங்கியிருந்த மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனால், சாலை போக்குவரத்து சீரடைந்துள்ள நிலையில், தண்டவாளங்களிலும் மழை நீர் அகற்றப்பட்டு, மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், மீண்டும் தெளிவாகியதால், விமான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக, விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து, மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில், மழை ஓய்ந்ததை அடுத்து, மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் மின் விநியோகமும் சீரடைந்து வருவதால், பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்புகின்றனர்.