Home World News பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது

பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது

28

இஸ்லாமிய நாடான சவுதிஅரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதிஅரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து வருகிற 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அமைச்சக அலுவலகங்கள் இன்னும் 30 நாட்களுக்குள் அதற்கான அறிக்கைகள் தயார் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்னர் சாலமனின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சவுதி அரேபியாவில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு இதுவரை விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி இல்லை. இந்த நிலையில் தலைநகர் ரியாத்தில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடந்த விளையாட்டு போட்டியை பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கார் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளது.

சவுதிஅரேபியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கை என தெரிவித்துள்ளது. ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டாசும் இதை வரவேற்றுள்ளார்.

அமெரிக்காவுக்கான சவுதி அரேபியா தூதர் இளவரசர் காவித் பின் சல்மான் வரவேற்றுள்ளார். இது வரலாற்றில் மிகப் பெரிய நாள். நல்ல நேரத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு என வர்ணித்துள்ளார். பெண்கள் டிரைவிங் செய்யவும் லைசென்சு பெறவும் தனது கணவரையோ, ஆண் பாதுகாவலரையோ நாட வேண்டியதில்லை. இனி அவர்கள் விருப்பப்பட்ட இடத்துக்கு கார் ஓட்டிச் செல்லலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here