Home Tamil Breaking News டெல்லியில் தீபாவளி பட்டாசுக்குத் தடை!! மாசு கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கையாம்..

டெல்லியில் தீபாவளி பட்டாசுக்குத் தடை!! மாசு கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கையாம்..

20

புதுடெல்லி : உலகின் அதிக மாசு கொண்ட மிகப்பெரிய நகரமாக டெல்லி உள்ளது. நுண்ணிய துகள்கள் அடங்கிய அதிக நச்சுத்தன்மையை கொண்ட காற்றை சுவாசிக்கும் மக்கள் டெல்லி வாசிகள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கைவிட டெல்லியில் அதிக காற்று மாசு நிலவுகிறது.

காற்றில் உள்ள நுண் துகள்களை குறிப்பிடும் பிஎம் 2.5 ஆண்டு சராசரி 122 என்ற அளவுக்கு இருப்பதால், உலகின் 10 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி 9-வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் டெல்லியில் காற்று மற்றும் ஒலி மாசு பல மடங்கு அதிகரித்தது.

தொடர் பட்டாசு வெடிப்பு காரணமாக டெல்லி மாநகரம் புகை மண்டலமாக மாறியது. அடர்ந்த பனியும், பட்டாசு புகையும் சேர்ந்ததால் எங்கு பார்த்தாலும் வெண் புகை போல காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலை 8 மணி வரை டெல்லியின் பல பகுதிகளிலும் இந்த அடர்ந்த புகை இருந்தது. பட்டாசுகளின் நெடி காரணமாக மக்கள் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். டெல்லியில் அன்று மட்டும் புகை மாசு 42 மடங்கு அதிகமாக இருந்தது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி அன்று பட்டாசு வெடித்து
கொண்டாடுவதால் டெல்லியில் மாசு அதிகம் ஏற்படுகிறது. அதனால் டெல்லியில் பட்டாசு வெடிக்கவும் விற்கவும் தடைவிதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீபாவளிக்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்க, வெடிக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.