Home Tamil Movie Reviews உறுமீன்- விமர்சனம்

உறுமீன்- விமர்சனம்

1222
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

ஊருமீன் படத்தில் ஜென்ம பகை… ஜென்ம பகை… என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ் பண்ணி அசர வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி. மீனின் ருசி அபாரம்.

3.5
இயக்கம்: சக்திவேல் பெருமாள்சாமி
ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு
எடிட்டிங் சான் லோகேஷ்
இசை: அச்சு ராஜாமணி
தயாரிப்பு: ஏக்சஸ் ப்ளிம் பேக்டரி
நடிகர்கள்: பாபி சிம்ஹா, கலையரசன், ரெஷ்மி மேனன், மனோபாலா

சரித்திர காலத்தில் துவங்குகிறது கதை. கூடவே இருந்து குழி பறிக்கும் கருணாவால் தண்டனைக்குள்ளாகும் புரட்சி வீரன்(பாபி சிம்ஹா), தூக்கு மேடையிலிருந்து தப்பி ஓடுகிறான். பின் தனது பராக்கிரமங்களையும், துரோகி கருணாவை பற்றியும் ஒரு புத்தகம் எழுதி, அதை தன்னுடனே சேர்த்து புதைத்தபடி உயிரை மாய்த்துக் கொள்கிறான். மறுஜென்மம் துவங்குகிறது. எப்படியோ அந்த புத்தகம் அங்கும் வந்து சேர்கிறது. உரியவர்களை தேடியாவது செல்வேன் என்ற வைராக்கியத்தோடு தொடர் பயணம் நடத்தும் அந்த புத்தகம், மறுஜென்மம் எடுக்கும் பாபிசிம்ஹாவின் கைக்கு வர, வந்த நேரத்திலிருந்து வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஓருவழியாக அர்த்தம் புரிகிறது அவருக்கு.

Urumeen 4

தொட்டுத் தொடரும் ‘வெட்டு’ பாரம்பரியமும், பகையும்தான் உறுமீன்! ஜென்ம பகை… ஜென்ம பகை… என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ் பண்ணி அசர வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி. மீனின் ருசி அபாரம்!

முன் ஜென்ம பகையாளி கருணாவை (கலை) கொல்லக் கிளம்புகிறார். கதை நகரும்போதே இருவரது பகையையும் வலுவாக்குகிற விதத்தில் இன்னும் ஒரு ஜென்ம பிளாஷ்பேக்கை சொல்கிறார் டைரக்டர். “விடாதே, சீக்கிரம் அவனை போட்டுத்தள்ளு” என்கிறளவுக்கு ‘டெம்ப்ட்’ கிளப்பும் அந்த பிளாஷ்பேக்கும் அதை தொடரும் க்ளைமாக்ஸ் பைட்டும் ரசிகனை வாயடைக்க வைக்கிறது. டாக்கிங், மேக்கிங் என்று தமிழ்சினிமாவில் ஒரு ஆக்ஷன் த்ரில்லரை இவ்வளவு ஸ்டைலிஷாக சொன்னதற்காகவே சக்திவேல் பெருமாள்சாமியின் கனத்த சரீரத்தை ஆரத்தழுவி ‘ஆஹாவ்’ எனலாம்.

Urumeen 3

படம் நெடுகிலும் நமக்கு பழக்கமில்லாத டீ அரசியலை தொட்டுவிட்டு போகும் இயக்குனர், ஒரு குறிப்பிட்ட மதத்தின் போலித்தனத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் தோலுரித்திருப்பது யாரும் எதிர்பாராத தைரியம்தான்!

“வேட்டையாடுறேன்னு புலிகளோட எண்ணிக்கையை வேணும்னா குறைக்கலாம். ஆனால் புலிகளை அழிக்கவே முடியாது” என்கிற வசனம், திணிக்கப்பட்டதாக இல்லாமலிருப்பதே டைரக்டரின் சாமர்த்தியத்தை சொல்லும் பலே டச்.

Urumeen 1

ஒரு கோபக்கார இளைஞனின் கேரக்டருக்கு சர்வ பொருத்தமாக பிக்ஸ் ஆகிறார் பாபிசிம்ஹா. சற்றே முசுடு போன்ற அவரது முகப்பொருத்தம் கதைக்கு இன்னும் இன்னும் நியாயம் சேர்க்கிறது. போகிற இன்டர்வியூலெல்லாம் பெயில் ஆகி, ஒரு ஹெச் ஆர் தலையில் பீர் பாட்டிலால் போட்டுத்தள்ளும் அவர், அதற்கப்புறம் அதே மிரட்டலை வைத்து ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்வதெல்லாம் கூட பிரச்சனையில்லை.

அவ்ளோ பேசும் மனோபாலாவுக்கு ஒரு டயலாக் கூட இல்லையேய்யா… பச்! அந்த ஆங்கிலேயர் கால முன் ஜென்ம எபிசோடில் பாபிசிம்ஹா செம ஸ்மார்ட் ! கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆங்கிலேயனின் சட்டையை உரிப்பதற்கு தியேட்டர்களில் கைதட்டல் ஷ்யூர்.

அதான் நிஜத்திலேயே சேர்ந்தாச்சே என்று நினைத்திருக்கலாம். கொஞ்சூண்டுதான் வருகிறார் ரேஷ்மிமேனன். ஏன் விழுந்தார் பாபி என்பதை நிமிஷத்தில் புரிய வைக்கிறார்.

Urumeen 2

மூன்று ஜென்மத்திலும் வில்லன் மெட்ராஸ் புகழ் கலைதான்! ஒரு டீ கடைப் பையன் எப்படி அவ்வளவு பெரிய ஆளாக உயர்கிறான் என்பதையும், மெல்ல மெல்ல உச்சத்துக்கு போகும் அவரது குரூரத்தையும் ரசிக்கலாம். பெருங்கூச்சல் வில்லன்களையே பார்த்து பழகிய கண்களுக்கு கலையின் வில்லத்தனம், இன்ப ஷாக்தான்!

பாபிசிம்ஹா, கலை சம்பந்தப்பட்ட ஃபைட்தான் படத்தின் மிக மிக சூடான பகுதி. பைட் மாஸ்டர் கணேஷ் குமாருக்கு ஆளுயர வாள் கொடுத்து கவுரவிக்கலாம். ஒவ்வொரு பைட்டும் அப்படியொரு கம்போசிங். பாபிசிம்ஹாவின் முரட்டுக் கண்கள் அந்த ஒவ்வொரு அடியையும் இன்னும் கூர்மையாக்குகிறது பலே.

Urumeen 5

அச்சு ராஜாமணி இசையில் அந்த ‘ஏ உமையாள்’ பாடல் ஒருவித ராக சுவை என்றால், பின்னணி இசை அப்படியே ஸ்தம்பித்து உட்கார வைத்துவிடுகிறது. பொருத்தமான கதைக்கு அதைவிட பொருத்தமான தேர்வு. ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவும் ஸ்பெஷல்!

புகுந்ததே தெரியாமல் புகுந்து கொள்ளும் முன்ஜென்ம எபிசோடும், சற்றே வித்தியாசமான படத்தின் நடையும் எடிட்டர் சான் லோகேஷின் கை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்கிறது.

உறு மீனின் ருசி அபாரம்.