Home World News அமெரிக்காவில் குடியேறியவர்கள் தொடர்ந்து பணி புரிய தடை: ஆப்பிள் , மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள் கடும்...

அமெரிக்காவில் குடியேறியவர்கள் தொடர்ந்து பணி புரிய தடை: ஆப்பிள் , மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு

22

குழந்தையாக இருக்கும்போது அமெரிக்காவில் குடியேறியவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்ய அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். இந்த முடிவுக்கு ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் வளர்ந்த பிறகும் குடியுரிமை பெறாமலேயே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணி புரிகின்றனர்.

இவர்களின் நலனுக்காக, `டிபர்ட் ஆக்ஷன் பார் சைல்ட்ஹூட் அரைவல்ஸ்’ (டிஏசிஏ) எனும் திட்டத்தை 2012-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்தார்.

இத்திட்டத்தின்படி குழந்தைகளாக வந்தவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதிலிருந்து தற்காலிக பாதுகாப்பு பெற விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டது. அமெரிக்காவில் அவர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என டிஏசிஏ தெரிவித்தது.

தற்போது அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இதனால் 8 லட்சம் பேர் தங்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இதில் இந்தியர்கள் 7 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களைக் காப்போம் எனவும் இது தொடர்பாக குடியேற்ற துறை நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், “இந்த முடிவால் எங்கள் நிறுவனத்தில் பாதிப்புக்குள்ளாகும் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்