Home World News வட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை.. அமெரிக்கா தீவிரம்..

வட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை.. அமெரிக்கா தீவிரம்..

17

வாஷிங்டன்: ஜப்பானை சீண்டி பார்க்கும் வகையில், ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவிற்கு எதிராக, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.
கிழக்காசிய நாடான, வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு, அண்டை நாடுகளான, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வட கொரியா மீது, ஐ.நா., கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது; எனினும், வட கொரியா, தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பான் வான் எல்லை வழியாக, சமீபத்தில், வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.
இது குறித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், சாரா சாண்டர்ஸ் கூறியதாவது:
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வட கொரியா ஏவுகணை சோதனை செய்வது கண்டனத்துக்குரியது; அந்நாட்டிற்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என, அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து உள்ளார்.
ஐ.நா., மூலம், மேலும், கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி, ராணுவ ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும்; இது குறித்து, நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்துவோம்.
அனைத்து வகைகளிலும், வட கொரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, வட கொரியாவுடன், முழுமையான பொருளாதார தொடர்புகளை துண்டிக்கும்படி, சீனாவை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்ற, அமெரிக்க பார்லி., நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here