கற்றவர் அதிகரித்துள்ள நிலையில், குற்றங்களும் அதிகரித்திருப்பது கவலைக்குரியது – வைரமுத்து

கற்றவர் அதிகரித்துள்ள நிலையில், குற்றங்களும் அதிகரித்திருப்பது கவலைக்குரியது – வைரமுத்து

63

Viramuthu

கவிஞர் வைரமுத்து தமிழர் பண்பாட்டு வீழ்ச்சி குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் அதில் கூறியதாவது, மதுரையில் சூலை 13 – புதன்கிழமை எனது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதில் விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, பேராசிரியை விஜயசுந்தரி ஆகியோர் பேசுகின்றனர்.

மண்ணையும், மொழியையும், கலையையும் சந்தைப்படுத்தி முன்னேறியுள்ளோம். ஆகவே அந்த மண்ணுக்கு ஏதேனும் திருப்பித்தரும் வகையிலே என் பிறந்த நாளை “வெற்றித் தமிழர்’ பேரவையினர் கொண்டாடுகின்றனர்.

கற்றவர் அதிகரித்துள்ள நிலையில், குற்றங்களும் அதிகரித்திருப்பது கவலைக்குரியது. அறநெறி பண்பாட்டுக் கல்வி இல்லாத நிலையே குற்றங்கள் பெருகக் காரணமாகிறது. ஆகவே பள்ளிகளில் அறநெறி வகுப்புகளை மீண்டும் நடத்த வேண்டும்.

சங்ககாலம் முதல் தற்போது வரை கலையும், பண்பாடும் சந்தைப்படுத்தப்படுவது வழக்கமாகும். ஆனால், கலைஞன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் அதே நேரத்தில், சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும். தற்போதைய திரைப்படப் பாடல்களில் கொச்சைதனம் இருந்தாலும், அவை மட்டுமே பண்பாட்டு வீழ்ச்சிக்கு காரணம் என்பது சரியல்ல.

திரைப்பட பாடலாசிரியர்கள் போதிய தமிழ் இலக்கிய அறிவு பெறாததற்கு சமூகச் சூழலே காரணம். ஆனாலும், பாடல் எழுத வந்த பிறகாவது கவிஞர்கள் தங்களது தமிழ் இலக்கிய அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

கவிஞராக, எழுத்தாளராக பல பட்டம், பதவி, பரிசு மற்றும் பாராட்டுகளைப் பெற்ற நான், 62 ஆண்டுகளை கடந்துள்ளேன். அப்பயணத்தில் சோதனைகள், எதிர்ப்புகள், துரோகங்களுக்கு மத்தியில் படைப்பாளன் என்கிற உணர்வை மட்டும் இழக்காமலிருப்பதே எனது சாதனையாகக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY